ஜக்கி வாசுதேவ் அதானி

கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்

ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில்களை நிர்வகிப்பதிலிருந்து அரசு வெளியேற வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார். 

‘கோயில் அடிமை நிறுத்து’ எனும் அவரின் பிரச்சாரம் குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில், “அரசு ஏன் கோயில் பராமரிப்பு உட்பட எல்லாவற்றையும் செய்ய வேண்டும்” என பேசிய ஜக்கி வாசுதேவ், “உலகெங்கும் அரசு தொழில் செய்த இடங்களிலெல்லாம் சேவை (தரம்) கீழே போயிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் வந்து (அரசு செய்த சேவைத்துறை தொழில்களை) செய்த பிறகுதான் சேவைத் (தரம்) உயர்ந்திருக்கிறது” எனக் கூறினார். 

அரசு தொழில் செய்வதால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆகையால் அரசு தொழிற் நிறுவனங்கள் எல்லாவற்றையும் நல்ல தொகைக்கு தனியாரிடம் விற்று லாபம் பார்க்க வேண்டும் என்றார். 

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்

யோகா சாமியார் பொருளாதாரம் – தனியார்மயம் பற்றி பேசுவது ஏன்?

ஆன்மீகத்தின் பெயரால் சாமானிய இந்து மக்களிடம் கோயில்களுக்காக பேசுவதாகக் கூறும் யோகா சாமியார் ஒருவர் ஏன் பொருளாதாரம் – தனியார்மயத்தைப் பற்றி பேச வேண்டும்? 

ஏனென்றால் கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. சாமானிய இந்து மக்களோடு உணர்வுப்பூர்வமாக கலந்துள்ள கோயிலிலிருந்து தொடங்கி ‘அரசு வெளியேற்ற’ பிரச்சாரத்தை பரவலாக அனைத்து மட்டங்களிலும் விரிவுபடுத்துவதுதான் ஜக்கி வாசுதேவின் நோக்கம்; அரசை கோயிலிலிருந்து மட்டுமல்ல கல்வி, போக்குவரத்து போன்ற சேவைத் துறைகளில் இருந்தும் வெளியேறக் கூறுகிறார் இந்த யோகா சாமியார். 

கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.

இதையும் படிக்க: ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?

இந்து அறநிலையத் துறை மீது வைத்திருக்கும் குறி தொடக்கமே

மக்கள் சேவைத் துறைகளில் தனியார்மயத்திற்கு ஆதரவான அரசு வெளியேற்றத்தைக் கோரும் குரலின் தொடக்கமாகவே, தான் இயங்கி வரும் ஆன்மீக – சுற்றுலாத் துறையை நிர்வகிப்பதில் பங்காற்றும் அரசின் இந்து சமய அறநிலையத் துறையை கோயில்களிலிருந்து வெளியேற்றவே கோயில் அடிமை நிறுத்து என பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்

ரயில்வேவுக்கு சொந்தமான மக்கள் நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க ஐடியா கொடுக்கும் ஜக்கி

தனியார்மயத்திற்கு ஆதரவாக நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஜக்கி வாசுதேவ் ஊடகவியலாளர்களை சந்தித்த காணொளி

கோயில் அடிமை நிறுத்து ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய ”லாபத்தில் இயங்கிய ரயில்வே துறையை தனியாரிடம் விற்றுவிட்டார்களே” என்ற கேள்விக்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், “லாபமென்றால் பல மடங்கு லாபம் வர வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய நில உரிமையாளராக உள்ள இந்திய ரயில்வே அந்நிலங்களை பெரும் லாபத்திற்குரியதாக மாற்றத் தவறிவிட்டது. ஐரோப்பிய, ஜப்பானிய முறை போன்று ரயில்வேயை தனியாரிடம் கொடுத்தால் தான் அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதால் அவை கஷ்டப்பட்டு லாபம் சம்பாதித்துக் கொள்ளும்; (விமான சேவை மற்றும் விமான நிலையை சேவையை தனியாருக்கு கொடுக்கப்பட்டதை குறிப்பிடும் விதமாக) தற்போது ஏர்லைன் மற்றும் விமான நிலையத் தொடர்பில் இது தானே நடந்திருக்கிறது…” 

“தனியார் நிறுவனங்களுக்குத் தான் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும்” என்றார். 

தனியார்மயத்தை எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கும் கார்ப்பரேட் அரசியலின் குரல் தான் ஜக்கி வாசுதேவின் குரல். இதற்கான முகமூடிதான் யோகா, ஆன்மிகம், பம்மாத்து எல்லாம். 

இதையும் படிக்க: இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!

கார்ப்பரேட் விவசாயத்தை கொண்டுவருபவருக்கே என் ஓட்டு – ஜக்கியின் இரண்டாவது பிரச்சாரம்

தேர்தலுக்கு முன்பு ‘யாருக்கு ஒட்டு போட வேண்டும்’ என்ற தலைப்பில் ஜக்கி வாசுதேவ் பேசிய மற்றொரு காணொளி இணையத்தில் இருக்கிறது; ஐந்து விடயங்களைக் குறிப்பிட்டு அவற்றை செய்பவர்களுக்கு எனது ஓட்டு என்று தனது ஆதரவாளர்களிடையே பேசுகிறார். 

என் ஓட்டு யாருக்கு? என்று ஜக்கி வாசுதேவ் பேசியதன் காணொளி

அதில் விவசாயம் தொடர்பாக, அமெரிக்க வடிவிலான கார்ப்பரேட் பெரு முதலாளிய விவசாய முறையை இந்தியாவில் கொண்டுவர வேண்டுமென பேசுகிறார். இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு ஏக்கர் நிலங்களை தங்களது உடைமையாகக் கொண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் தான் அதிகம். குறைந்த நிலங்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலங்களில் வேலி, மின் மோட்டார் என செலவு செய்து உற்பத்தி செய்யக்கூடிய முறை அதிக செலவு பிடிக்கக் கூடியதாகும். எனவே அத்தகைய விவசாய முறையை மாற்றி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை ஒருவரே விவசாயம் செய்யும் அமெரிக்க முறையிலான ‘கார்ப்பரேட் விவசாய முறைக்கு’ நாம் மாற வேண்டும் என சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம்

இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சில பத்தாண்டுகளுக்கு முன்புதான் நிலவுரிமையே கிடைக்கப் பெற்றது. அதுவும் காலனிய ஆட்சி தொடங்கி நடந்த பல்வேறு நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகே. மேலும் இந்திய விவசாயிகள் யாரும் பெரும் நிலவுடையமையாளர்கள் கிடையாது; ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிகம். இவர்களை அப்புறப்படுத்தித் தான் அமெரிக்க மாடல் பெரு விவசாய முறையை பேசுகிறார். இன்றைய சூழலில் அமெரிக்க மாடல் போன்று ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாயத்தை கார்பரேட்- பெரு நிறுவனங்களால் மட்டுமே செய்ய முடியும். 

அமெரிக்க மாடலில், இந்தியாவிலிருப்பது போல் விவசாயிகளுக்கான நேரடி மானியங்கள் கிடையாது. ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு அரசு மானியம் கொடுத்து காப்பாற்ற தேவையிருக்காது. அத்தகைய ‘விவசாயிகளுக்கு நேரடி மானியங்களற்ற’ அமெரிக்க மாடலை உலகம் முழுதும், குறிப்பாக ‘மானியங்கள் மூலமே விவசாயிகளுக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தக்கூடிய’ நிலையிலுள்ள மூன்றாம் உலக நாடுகளில் உலக வர்த்தகக் கழகம் மூலம் திணித்து வருகிறது அமெரிக்கா.

விவசாயிகளுக்கு இடுபொருள், மின்சாரம், உற்பத்தி – கொள்முதல் – குறைந்தபட்ச ஆதார விலைக்கு என நேரடி மானியமாகக் கொடுக்காமல் ‘அமெரிக்க மாடல்’ போன்று விவசாயத் துறைக்கான ஆராய்ச்சி, தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கென மானியம் வழங்கச் சொல்வது உலக வர்த்தக கழக வழிமுறை.

இதையும் படிக்க: இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!

விவசாயிகள் வெளிமாநிலங்களுக்குச் சென்று விற்க முடியாது என பொய் சொல்லும் ஜக்கி

முகேஷ் அம்பானியுடன் ஜக்கி

உலக வர்த்தகக் கழகத்தின் அத்தகைய அம்சங்களை மறைமுகமாக உள்ளடக்கி கொண்டு வரப்பட்டது தான் மூன்று விவசாய சட்டங்கள். மேலும் இக்காணொளியில் கார்ப்பரேட் விவசாயத் திட்ட அம்சங்களைக் கொண்டுள்ள மூன்று விவசாய சட்டங்களை மறைமுகமாக ஆதரித்து பேசிய ஜக்கி வாசுதேவ், விவசாய சட்டத்தின் ஒரு அம்சமான, விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய ஏதுவாக எவர் செய்கிறாரோ அவருக்கு தான் என் ஒட்டு என்றார். (விவசாய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பும் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறையில் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு நகர முடியாது என்பதாலேயே விவசாயிகள் யாரும் வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கள் பொருட்களை விற்பனை செய்வது இல்லை) 

அமெரிக்க வடிவத்தையும், உலக வர்த்தக கழக வழிமுறையையுமே ‘வளர்ச்சியாக’ பிரச்சாரம் செய்கிறார் ஜக்கி வாசுதேவ்; உலக வர்த்தகக் கழக அம்சங்களை உள்ளடக்கிய விவசாய சட்டங்களையும், அதை இயற்றிய பாஜகவையும் அவர் ஆதரித்து பேசியது அவரது கார்ப்பரேட் நல அரசியலை பட்டவர்த்தனமாக நமக்கு வெளிப்படுத்துகிறது. 

கல்வியை தனியாருக்கு கொடுப்பவருக்கே என் ஓட்டு – ஜக்கியின் மூன்றாவது பிரச்சாரம்

பிரதமர் மோடியுடன் ஜக்கி வாசுதேவ் – File Photo

கல்வி முறையை மாற்றியமைப்பவருக்கு என் ஓட்டு என பேசிய ஜக்கி வாசுதேவ், பள்ளியிலேயே மாணவர்களுக்கு தொழில் திறமைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை மறைமுகமாக ஆதரித்துப் பேசினார். மிகக் குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களை நடத்தக் கூடாது; அவற்றைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு பொறுப்பேற்று கல்வி நிலையங்களை நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என்றார். 

கல்வி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் நடத்தினால் போதும், மாணவர்களுக்குரிய கட்டணத்தை அரசு அத்தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என்பது உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் (GATS- General Agreement on Trade and Services) ஒப்பந்தத்தின் மறைமுக அம்சம். அதனையே ஜக்கி வாசுதேவும் பிரதிபலிக்கிறார். உலக வர்த்தகக் கழக அம்சங்களுடன், வடிவங்களுடன் ஒரு யோகா சாமியார் ஒன்றிணைவது எப்படி சாத்தியமாகிறது?!

அடிப்படையில் தனியார்மயத்துடன், பன்னாட்டு/ உள்நாட்டு தனியார் பெரு முதலாளிகளுடன் ஒன்றிணைதல் ஏற்பட்டுவிட்ட நபரான ஜக்கி வாசுதேவ் அதற்கான பிரச்சாரத் தளத்திற்காக யோகா, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி வருகிறார். 

இதையும் படிக்க: காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!

கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் அரசுக்கே என் ஓட்டு – ஜக்கியின் நான்காவது பிரச்சாரம்

எல்லா வகையிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசும் ஜக்கி வாசுதேவ் அடுத்ததாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்குபவருக்கே என் ஓட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு அரசுத் துறைகளில் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியிருக்கிறது; இது தேவையற்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஒரே முயற்சியில் அனுமதி வாங்கும் வகையில் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance) முறை உருவாக்கப்பட வேண்டுமென்கிறார். 

பல்வேறு துறை ஒப்புதல்கள் பெற்று நடத்தப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நடைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவித்தது என பார்த்தோம்.  ஸ்டெர்லைட் ஆலையின் நடைமுறை பாதகத்தை நிரூபித்து, அனுமதி வழங்கிய குறிப்பிட்ட துறைகளில் சட்டப் போராட்டம் நடத்திய பின்பும் நம்மால் அந்த நாசக்கார ஆலையை இழுத்து மூட முடிந்ததா? ஸ்னோலின் உள்ளிட்ட 13 உயிர்களை பலி கொடுத்த பின்பே தீர்வு எட்டப்பட்டது. யதார்த்த நிலைமை இப்படியிருக்க, ஸ்டெர்லைட் ஆலைகள் போன்று தொழிற் தொடங்குவதற்கு உள்ள குறைந்தபட்ச கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டுமாம். 

கட்டுப்பாடுகள் இருக்கப்போய்தானே வெள்ளையங்கிரி மலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விதிமுறை மீறல்களுக்கு ஜக்கி வாசுதேவ் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அவற்றை நீக்கிவிட்டால் அவருக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் லாபம் தானே! 

ஜக்கி வாசுதேவின் இந்த பிரச்சாரம் நேரடியாக சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை திருத்தத்தோடு தொடர்புடையது. நடைமுறையில் அதை பாஜக சட்ட திட்டங்களாக செய்கிறது; ஜக்கி அவைகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

ஜக்கி வாசுதேவ் கூறுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பல்வேறு சட்டத் திட்டங்கள் மூலம் மோடி அரசு செய்து வருபவைகள் தான். அவற்றை நேரடியாகப் பேசினால் மக்களிடம் எதிர்ப்பு வரும் என்பதற்காக  ஆன்மிக முகமூடி அணிவிக்கப்பட்டு ஜக்கி வாசுதேவினால் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

பாஜக கே.டி.ராகவனும், ஜக்கி வாசுதேவும்

’கோவில் அடிமை நிறுத்து’ ஊடகவியாளர்கள் சந்திப்பில் “எல்லாவற்றையும் தனியாரே செய்ய வேண்டுமென்றால் அரசு என்ன தான் செய்ய வேண்டும்?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு, “வெளிநாட்டு விவகாரம், இராணுவப் பாதுகாப்பு, உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், காவல்- சட்ட ஒழுங்கு போன்றவற்றை மட்டும் அரசு செய்தால் போதும்” என்கிறார். 

என்ன இந்த குரலை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா?! ஊடக விவாதமொன்றில் பாஜக தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் கூறிய அதே வார்த்தைகளைத் தான் ஜக்கி வாசுதேவும் கூறியிருக்கிறார். இப்பொழுது புரிகிறதா, இவர் யார் குரலென்று!

இந்த காணொளி 37:40 நிமிடங்களில் தொடங்கி 40:44 நிமிடங்கள் வரை கே.டி.ராகவன் பேசுவதைப் பார்க்கவும்

பாஜக தனது நேரடி முகம் கொண்டு செய்ய முடியாத கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தை ஆன்மீக முகமூடி அணிந்து கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ் செய்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் கருத்துருவாக்க அடியாளாக செயல்படுபவர் தான் இந்த ஜக்கி வாசுதேவ். 

அரசு தொழில் நடத்துவது ஏன் முக்கியம்?

அரசு தொழில் செய்வதென்பது சந்தை நுகர்வோருக்காக அல்ல. அவை குடிமக்களுக்கானதாக உள்ளது. வாங்கும் திறனுடைய வசதி படைத்தவர், வசதியற்றவர் என்ற சந்தை கணக்கீடுகளன்றி குடிமக்கள் அனைவருக்குமான சேவையை அரசுத் தொழிற் நிறுவனங்கள் வழங்குகின்றன. இதற்காகவே குடிமக்கள் வரி முறையை அரசு கடைபிடிக்கிறது. 

மக்களின் அடிப்படைத் தேவைகளை தனது நிறுவன இயந்திரங்கள் வழி அரசு செய்யும் பொழுதே, குடிமக்கள் சமூகத்தின் பெரும்பகுதி இன்னும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் உள்ளது. 

அந்நிலை எட்டப்பட வேண்டுமாயின் அரசு தொழில் செய்தால்தான் இந்நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  தொழில் நிறுவனங்களில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறும்; அரசு தொழில் செய்தால்தான் தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன. அரசுத் தொழிற் நிறுவனங்களாலே தான் அத்தொழிற்துறை சார்ந்த சந்தை விலை நிர்ணயம் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிறுவனம் நிர்ணயிக்கும் விலை அளவுகோளாக இல்லாதபட்சத்தில் தனியார் முதலாளிகள் வைப்பதுதான் சந்தையில் விலை. 

தனியார் லாப வெறிக்கு தடையாக இருப்பதால் தான் அரசுக் கட்டமைப்பை தனியாரிடம் கொடுக்கச் சொல்கிறார் இந்த யோகா சாமியார்; வெகுமக்கள் ஆதரவுக்காக அதனை கோயிலிலிருந்து தொடங்குகிறார். இத்தகைய போலி ஆன்மீகவாதிகளிடத்தில் தமிழர்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள்.

முகப்புப் படம்: கெளதம் அதானியுடன் ஜக்கி வாசுதேவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *