ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

இந்திய ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகியுள்ளார். இவர் பாரதிய ஜனதா அரசுடன் கூட்டணியில் இருந்த சிரோமனி அகாலி தளம் கட்சியின் சார்பாக ஒன்றிய அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள அவர், “விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை எதிர்த்து தான் பதவி விலகுவதாகவும், ஒரு மகளாக, தங்கையாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதே தனக்கு பெருமை” என தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்தில் இருக்கும் சமயத்தில், தான் மட்டும் விவசாயிகளின் அச்சத்தை நிவர்த்தி செய்யாமல் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றும் அரசில் அங்கம் வகிக்க இயலாது” என ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்களின் கணவரும் சிரோமனி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் பாதல், தங்கள் கட்சி விவசாயிகளின் கட்சி எனவும் விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் இந்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும், அதன் காரணமாக ஹர்சிம்ரத் பதவி விலகியிருப்பதாகவும் மக்களவையில் தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தங்கள் கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்கள் 

1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் Essential Commodities (Amendment) Ordinance, 2020)

2.ஒப்பந்த விவசாய சேவை மற்றும் விலை உத்தரவாதத்தில் விவசாயிகளுக்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம் The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance

3.விவசாய விளைபொருள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020

இதில் முதல் மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையும், அடுத்த இரண்டு மசோதாக்கள் நேற்றும் (வியாழக்கிழமை) மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளன.

இந்த மசோதாக்கள் ஒப்பந்த விவசாய முறையை (Contract Farming) ஊக்குவிப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகளில் பதுக்கி வைத்து செயற்கை விலை ஏற்றத்தை செய்ய உதவும் எனவும், வருங்கால விவசாய பயிர் உற்பத்தியையும், பயிர் வகைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்க வழி வகுக்கக்கூடியது எனவும் இந்த மசோதாக்கள்

குறித்து விரிவான கட்டுரைகள் ஏற்கனவே Madras Radicals இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

படிக்க:

  1. WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
  2. விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

பஞ்சாப், உத்திரபிரதேசம், தெலுங்கானா விவசாயிகளின் ஆர்பாட்டம்

கடந்த திங்கள்கிழமை பஞ்சாப், உத்திரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இச்சட்ட மசோதாவிற்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி- அமிர்தசரஸ் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும் பாட்டியாலா, பர்னாலா, மோகா மற்றும் பக்வாரா முதலிய பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தர்சன்பால் கூறியது. “இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கரிசனத்திற்க்கு சிறு விவசாயிகள் உள்ளாகக் கூடும்”. இந்த குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் விவசாயிகளின் இந்த போராட்டம் ஆளும் கட்சியை கைவிடச் செய்வதற்கு மட்டுமல்லாமல், எதிர்க் கட்சியையும் இந்த 3 மசோதாக்களுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க விழித்தெழ வைக்க உதவும் எனக் கூறினார். 

மேலும் அவர் கிட்டத்தட்ட விவசாயப் பின்னணியைக் கொண்ட 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளில் இருப்பதாகவும், அவர்களும் இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் எனவும், அப்படி வலியுறுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கிராமங்களில் நுழைய விடமாட்டோம் எனவும் எச்சரித்தார். 

பல விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்திருந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஹைதராபாத்திலும் போராட்டத்தை ஒருங்கிணைத்து இருந்தது.

”விவசாயிகள் என்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள். இன்று பிரதமர் கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி விவசாயிகளை கை விரித்துள்ளார். விவசாயிகள் ஒருபோதும் சட்டத்தை ஏற்க முடியாது. இந்த மசோதாவில் உள்ள சிக்கல்கள் குறித்து கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்” என தெலுங்கானா ராஷ்ட்ரிய ரித்து சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

உத்திரப் பிரதேசத்தில் காசியாபாத் பகுதியில் விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. 

“விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க குந்த்லி எல்லையில் தாங்கள் தடுக்கப்பட்டதாக ஹரியானா விவசாய சங்கத் தலைவர் ரட்டன் மன் தெரிவித்தார். மேலும் அவர் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் நன்மையைக் கொண்டு வரப்போவதில்லை எனவும், காய்கறிகள் பழங்கள் என எல்லா வகையான உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு எதிரான மசோதா “மரண தாக்குதல்” எனவும் “கருப்பு மசோதா” எனவும் விமர்சித்துள்ளார். இந்த மசோதா குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் உரிமை என எல்லாவற்றையும் மறுப்பதாகவும் விவசாயிகளின் நிலங்களைக் கட்டாயப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் சதி வேலையில் மோடி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *