வன உயிரினங்கள்

கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு

கடந்த 50 ஆண்டுகளில் உலகில் வன உயிரின எண்ணிக்கை சராசரியாக 68% குறைந்துள்ளதாக உலக வன உயிரின நிதி அமைப்பின் (World Wide Fund for Nature – WWF) அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையை வன உயிரின நிதியம் மற்றும் லண்டனைச் சேர்ந்த விலங்கியல் சமூக நிறுவனம் இணைந்து 1970 முதல் 2016 வரையிலான ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை வெளியான The Living Planet Report 2020 எனும் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையானது சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வள சுரண்டல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை வன உயிரினங்கள் குறைவின் முக்கிய காரணிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை உலகில் உள்ள 125-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் கிட்டத்தட்ட பறவைகள், விலங்குகள், மீன்கள் என 21,000 உயிரினங்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகளாகும்.  உலகளாவிய வனவிலங்குகளின் போக்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வறிக்கை உலகளாவிய சூழலியல் நிலை குறித்து ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

நல்ல தண்ணீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை 84% அளவிற்கு குறைந்துள்ளதாகவும், மூன்றில் ஒரு பங்கு நன்னீர் உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், குறிப்பாக பெரிய உடலமைப்பு கொண்ட உயிரினங்கள் சிறிய உயிரினங்களைக் காட்டிலும் ஆபத்தில் உள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு குறைந்துள்ளது?

வன உயிரினங்களின் எண்ணிக்கை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதத்தில் குறைந்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் பல்லுயிர்கள் மிகவும் மோசமான அளவில் கிட்டத்தட்ட 94% அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் 24% குறைந்துள்ளதாகவும், வட அமெரிக்கா பகுதியில் 33 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆப்பிரிக்காவில் 65% மற்றும் ஆசியா பசிபிக் கடல் பகுதியில் 45% குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

லத்தீன் அமெரிக்க பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட நில மற்றும் நீர் வாழ் (Amphibians) உயிரினங்கள்  அழிந்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் நோய் பரவல் என அறிக்கை குறிப்பிடுகிறது.

பறவைகள் மற்றும் விலங்குகளை விட இரு மடங்கு அதிக அளவிற்கு தாவர வகைகள் அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் மற்றும் நிலப்பயன்பாடு மாற்றப்படுதல் முதலியவையே வனவாழ் தாவர உயிரினங்கள் அழிந்து போவதற்கு முக்கியக் காரணங்களாக அமைவதாக தெரிவிக்கிறது. மேலும் பல தாவர உயிரினங்கள் அழிந்து போவதற்கான காரணங்கள் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றும் கூறுகிறது.

உருவாகும் தொற்று நோய்கள்

வன உயிரினங்கள் மற்றும் மனிதர்களை தாக்கும் 60% நோய்களானது மிருகங்களிடமிருந்து பரவுகிறது. குறிப்பாக மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு வன விலங்குகளிடமிருந்தே பரவுகிறது.குறிப்பாக மலேசியாவில் 1998 காலத்தில் வந்த நிபா வைரஸ், 2003 காலகட்டத்தில் சீனாவில் வந்த சார்ஸ் நோய் முதலியவைகள் மிருகங்களிடமிருந்து பரவியதே. இந்த நோய்கள் உருவாவதிலும் வனங்கள் அழிக்கப்படுவது முக்கியக் காரணியாக இருக்கிறது.

அதீத சுரண்டல்

மனித நடவடிக்கைகளே வன உயிரினங்கள் குறைய முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. 1970-ம் ஆண்டு காலம் வரை மனிதர்களால் மேற்கொள்ளப்படும் அழிவு அழிவு நடவடிக்கைகளை விட இயற்கையின் மீட்டுருவாக்க வேகம் என்பது அதிகமாக இருந்தது. ஆனால் நமது 21-ம் நூற்றாண்டின் இந்த நவீன வாழ்க்கை முறையினூடாக எரிபொருள், உணவு மற்றும் இதர நுகர்வு தேவைகளுக்காக, பூமியின் உயிர் உற்பத்திறனை அதிகமாக சுரண்டி 56% அளவுக்கு அதிகமாக தற்போது பயன்படுத்தி இருக்கிறோம்.

மேலாண்மை நடவடிக்கைகள்

மனித சமூகம் நிலை பெற்றிருக்க பல்லுயிர் வாழ் நிலைகளை பாதுகாப்பது நமது முக்கியக் கடமையாகும். கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து,காடு வளர்ப்பு முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, புல்வெளிகளின் மேலாண்மை, காடுகள் மற்றும் கைவிடப்பட்ட விவசாய நிலங்களில் பல்லுயிர் மறுசீரமைப்பு என அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துகையில் நாம் 50% பல்லுயிர் பெருக்க அதிகரிப்பு எனும் இலக்கை 2050-ம் ஆண்டிற்குள் அடைய முடியும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் நிலை

இந்தியாவைப் பொறுத்தவரை 12% அளவிற்கு வன பாலூட்டிகள்கலும், 19% நில மற்றும் நீர் வாழ் உயிரினங்களும், 5% பறவை இனங்களும் கடந்த 40 ஆண்டுகளில்  குறைந்துள்ளதாக WWF திட்ட இயக்குநர் செஜல் வோரா (Sejal Worah) தெரிவித்துள்ளார்.

கைலாஷ் சந்திரா, இந்திய விலங்கியல் ஆய்வின் திட்ட இயக்குநர் முதுகெலும்புடைய விலங்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் வரை  1.02 லட்சம் விலங்கு உயிரின வகைகள் இருப்பதாகவும், இதில் 6800 முதுகெலும்புடைய விலங்கு இனங்கள் ஆகும். இதில் கிட்டத்தட்ட 550 உயிரினங்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியல்களில் உள்ளதாக தெரிவித்தார். கிட்டத்தட்ட 60% விகிதத்தில் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மொத்த உலக நிலப்பரப்பில் 2.4% கையில் வைத்துள்ளது. 8% அளவிற்கு பல்லுயிர்களை தன் வசம் கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 16% இந்தியாவில் தான் உள்ளனர். இந்த மக்கள்தொகை பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கின்றது என கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் அனிருதா முகர்ஜி கூறுகிறார். இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய தற்போதைய நிலையை ஒப்பிட்டால் 148% மடங்கு அதிக இயற்கை வளங்கள் தேவை என கூறுகின்றது. இந்தியாவில் உள்ள 85%-க்கும் மேற்பட்ட சதுப்புநிலகாடுகள் மாசு அடைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. 

யாருக்கானது இந்த உலகம்?

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது என்ற சிந்தனையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். வனங்களின் இயற்கையையும், வனவாழ் உயிரினங்களையும் நாம் பாதுகாத்து நிற்பதன் மூலமே இந்த உலகத்தின் சமநிலையை பாதுகாக்க முடியும். காலநிலை மாற்றத்தின் வழியாக ஏற்படப்போகும் பேரழிவினை சமாளிக்க முடியும். வனங்கள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்துவது குறித்தான பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாடுகள் தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *