தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் 63 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் 12 மருத்துவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்த 382 மருத்துவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறந்த மருத்துவர்கள் மாவீரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் குடும்பத்திற்கு உரிய மரியாதையினையும், இழப்பீட்டினையும் அரசு வழங்கிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ராஜன் ஷர்மா, பொதுச்செயலாளர் ஆர்.வி.அசோகன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையானது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நோயுற்ற தன்மையினையும், மரணத்தையும் மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
”இந்தியாவைப் போல எந்த தேசமும் இத்தனை மருத்துவர்களையும் சுகாதாரப் பணியாளர்களையும் இழக்கவில்லை. எத்தனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தினை அரசு பராமரிக்கவில்லை என்றால், தொற்றுநோய் சட்டம் (Epidemics act) மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act) ஆகியவற்றை நிர்வகிப்பதற்கான தார்மீக அதிகாரத்தினை அரசு இழந்து விடுகிறது. ஒருபக்கம் மருத்துவர்களை கொரோனா போராளிகள் என்று அழைத்துக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களின் குடும்பங்களுக்கு தியாகிகளுக்கான அந்தஸ்த்தினையும் அதன் மூலம் கிடைக்கும் இழப்பீடுகளை மறுப்பதும் இரட்டைத் தனத்தினை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
43 மருத்துவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இறந்திருப்பதாக கடந்த மாதம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்த போது, அதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்த நிலையில், தற்போது இந்த பட்டியல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் ரவீந்திரநாத் அவர்கள் முன்வைத்த கோரிக்கை
இச்செய்தி குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”இத்தனை மருத்துவர்கள் இறந்து போனதற்கு, அரசு போதிய அளவிற்கு மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கப்படாததே காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் ”மேலும் உலகத்திலேயே கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்றும், குறிப்பாக பொது மருத்துவர்கள்(General practitioners) அதிகளவில் இறப்பதாகவும் தெரிவித்தார். இறந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும், மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், மாநில அரசு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் பின்னர் அதனை மாநில அரசு 25 லட்சம் ரூபாயாக குறைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிவாரண உதவியும் தனியார் மருத்துவர்கள் தவிர்த்து, அரசு நிரந்தர மருத்துவர்களுக்கு மட்டுமே என அறிவித்தது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் புள்ளி விவரத்தை முறையாகக் கணக்கிட்டு, மத்திய அரசு அறிவித்த 50 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் மாநில அரசு அறிவித்த 50 லட்ச ரூபாய் நிதி உதவியை விரைந்து வழங்கவேண்டும் எனவும், இறந்த மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.