பாஜக புதுச்சேரி

பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!

இதுவரை தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாரதிய ஜனதா இந்த முறை பாண்டிச்சேரியில் ரங்கசாமியின் பின்னால் நின்று ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று  வேலை செய்து கொண்டிருக்கிறது. 

ஆளுநரைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜக மேற்கொண்ட நகர்வுகள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அரசை நியமன கவர்னர் மூலம் செயல்பட விடாமல் பல்வேறு தொந்தரவு கொடுத்து வந்தது மத்தியில் ஆளும் பாஜக. இதுவரையில் நியமன எம்.எல்.ஏ-க்களை மாநில அமைச்சரவை பரிந்துரையில் இருந்தே நியமித்த விதியை மீறி கவர்னர் நேரடியாகவே நியமித்தார். சபாநாயகருக்கு பதில் ஆளுநரே பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். 

தேர்தலின் இறுதி காலத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களைக் காட்டி மிரட்டியும், குதிரை பேரம் நிகழ்த்தியும் ஆட்சியைக் கவிழ்த்தது.

அதிமுக-வை இல்லாமல் செய்யும் வேலையை துவங்கிய பாஜக 

நாராயணசாமி ஆட்சியைக் கவிழ்த்த பின் தற்போது அதிமுக-வை முழுவதும்  இல்லாமல் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளது. புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் இரண்டு முறை ஆளுங்கட்சியாகவும், நல்ல வாக்கு வங்கி கொண்ட கட்சியாகவும் கடந்த தேர்தல் வரை தனது தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட அதிமுகவை இந்தமுறை எந்த வாக்கு வங்கியும் இல்லாத  பாஜக தனது கைப்பாவையாக மாற்றியுள்ளது. 

கடந்த தேர்தல்களில் அதிமுக – பாஜக பெற்ற வாக்குகள்: ஒப்பீடு

கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில்  இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும். 

முன்னாள் முதலைமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனை எதிர்த்து வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் ஒம்சக்தி சேகர் நெல்லிக்குப்பம் தொகுதியில் மட்டும் பெற்ற வாக்குகள் 13,301 ஆகும். இந்த தேரதலில் அதிமுக வாங்கிய மொத்த வாக்கு சதவீதம் 13.75%. 

2016 தேர்தலில் பாஜக மொத்தமாக 19,303 வாக்குகள் மட்டுமே பெற்றது. இது 2.4% வாக்குகள் ஆகும். அதிமுக வாங்கிய மொத்த வாக்குகள் 134,597. அதிமுக பெற்ற வாக்குகள் மலை அளவும், பாஜக பெற்ற வாக்குகள் மடுவளவும் உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ”நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன், ஊதி ஊதி சாப்பிடலாம்” என்று அதிமுக-வினர் மீது சவாரி செய்த பாஜக, தற்போது முழுவதும் அதிமுகவை இல்லாது செய்யத் துவங்கியிருக்கிறது.

வெற்றியே பார்க்காத பாஜக தலைமை தாங்குகிறது

பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனியாக நின்று கணிசமாக வாக்குகள் பெறக் கூடிய அளவிற்கு அதிமுகவின் வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஏற்கனவே 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு இந்த முறை வெறும் 3 இடங்கள் மட்டுமே அளிப்பதாக பாஜக கூறியது. பின்னர் உள்ளூர் அதிமுக தொண்டரின் நீண்ட எதிர்ப்பிற்குப் பிறகு 5 இடங்களை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத, இதுவரை பாண்டிச்சேரி தேர்தல்களில் எதிலும் வெற்றி பெறாத பாஜக அதிமுகவிற்கு தலைமை தாங்கியுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் ஆட்களை இறக்கியுள்ள பாஜக

பாஜக கடந்த பல மாதமாக கர்நாடகத்தில் இருந்து நிர்மல் குமார் சுரேனாவை பாண்டிச்சேரிக்கு அனுப்பி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்களை இறக்கியுள்ளது. அதில் முன்னாள் மேயர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று  ஏற்கனவே தேர்தல் வேலை பார்த்தவர்கள் தற்போது படையெடுத்து வந்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியினர் இதுவரை, குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக எந்த வெற்றியும் பெறாத நிலப்பகுதியில், தற்போது அதிமுகவை கைப்பற்றி  தன்னை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. வெறும் 2.4 % வாக்குகளை வைத்துக் கொண்டு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.

தேர்தல் வேலைகளுக்கு தேசிய கட்சிகளில் இருந்து மேலிடப் பார்வையாளர்கள் வருவது கடந்த கால வழக்கமாக இருந்து வந்துள்ளது.  ஆனால் களப்பணிக்கும், துண்டறிக்கை கொடுக்கவும் ஒரு படையெடுப்பைப் போல ஆர்.எஸ்.எஸ் ஆட்களை இறக்கியுள்ளது. சுவரொட்டி கூட ஒட்ட ஆள் இல்லாத கட்சி மத்தியில் இருக்கும் அதிகாரத்தின் வழியாக மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது.

இடதுசாரிகளை வெளியேற்றி பலவீனமடையும் காங்கிரஸ் கூட்டணி

இதே காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, இடதுசாரிகளுக்கு குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காமல் புறக்கணிக்கிறது. இது அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழலை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் இருந்து ஆர்.எஸ்.எஸ் இறக்குமதி செய்திருக்கும் தேர்தல் பணியாளர்களை  எதிர்கொள்ள இடதுசாரிகளின் அணி மிக முக்கியமான தேவை என்பதனை காங்கிரஸ் உணரவில்லை என்றே தெரிகிறது. கடந்த தேர்தலில் இடதுசாரிகள் தனியாக நின்று கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பதை கணக்கில் எடுத்து வலுவான கூட்டணி அமைத்து குதிரை பேரம் நடத்த வாய்ப்பில்லாத எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதே பாண்டிச்சேரியின் நிலையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *