ஐ.ஐ.டி

IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான பேராசிரியர் பணியிடங்கள் பாதிக்கும் மேல் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பதில்

பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்திருக்கும் பதிலின் மூலமாக இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் OBC பேராசிரியர் பணியிடங்கள் 50% சதவீதத்துக்கு மேலாகவும், SC பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பணியிடங்கள் 40% சதவீதத்துக்கும் அதிகமாகவும் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

OBC பிரிவினருக்கான இடங்கள்

OBC பிரிவினரைப் பொருத்தவரை மத்திய பல்கலைக்கழகங்களில் 50% பணியிடங்களும், IIT-களில் 42% பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. OBC பிரிவினருக்கான மொத்தமுள்ள 9960 பணியிடங்களில் 5142 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேராசிரியர் பணியிடத்தைப் பொறுத்தவரை OBC பிரிவினருக்கான 378 பணியிடங்களில் 5% கூட நிரப்பப்படவில்லை.

SC பிரிவினருக்கான இடங்கள்

42 பல்கலைக்கழகங்களில் SC பிரிவினருக்கான 7,409 பணியிடங்களில் 2,847 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. IIT-களில் 36% சதவீதமும், IIM-களில் 62% சதவீதமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. 

ST பிரிவினருக்கான இடங்கள்

42 பல்கலைக்கழகங்களில் ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 709 ’துணை பேராசிரியர்’ பணியிடங்களில் 500 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. அதேசமயம் ST பிரிவினருக்கான 137 ’பேராசிரியர்’ பணியிடங்களில் வெறும் 9 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 93% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தமுள்ள 1,062 ’பேராசிரியர்’ பணியிடங்கள் ST பிரிவைச் சார்ந்தவர்கள் 1% சதவீதத்திற்கும் குறைவானவர்களே இருக்கிறார்கள். 

நிரப்பப்படாத இடங்களில் OBC, SC, ST பிரிவினரின் இடங்களே அதிகம்

மொத்தமுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், IIT, IIM, NIT, IISER உள்ளிட்ட நிறுவனங்களை சேர்த்து மொத்தமுள்ள 39,822 பணியிடங்களில் 14,372 இடங்கள் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படாத இடங்களில் பெரும்பாலானவை OBC, SC பிரிவினருக்கான இடங்களாகவே இருக்கின்றன.

IIM-களில் மட்டும் 60 சதவீதத்திற்கும் அதிகமான OBC, SC, ST பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

நிரப்பப்படாத பணியிடங்களின் சதவீதம்

நிறுவனம்SCSTOBC
42 மத்திய பல்கலைக்கழகங்கள்39%42%52%
சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகம்12%13%13%
IGNOU41%49%67%
IIT36%47%42%
IIM62%79%63%
IISER39%58%44%
IISC20%55%90%
மொத்தம்38%43%52%

முறையாக பின்பற்றப்படுவதாக சொல்லும் கல்வி அமைச்சர்

ஆனாலும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டே வருவதாக பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் தெரிவிக்கிறார். மத்திய கல்வி நிலையங்கள் சட்டம் (ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு) 2019-ன் படி OBC இடஒதுக்கீடு அனைத்து மட்டங்களிலும் சரியாகவே கடைபிடிக்கப்படுவதாக தெரிவிக்கிறார். கல்வி அமைச்சகம் காலி பணியிடங்களை கண்காணித்து வருவதாகவும், ஆனால் அந்த இடங்களை நிரப்புகின்ற பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சிறப்பு தகுதி மூலம் இடஒதுக்கீட்டை நீக்கும் ஒன்றிய அரசு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 20 IIM நிர்வாகங்கள் ஒன்று சேர்ந்து இடஒதுக்கீட்டில் இருந்து IIM-களுக்கு விலக்கு அளிக்கவும் கோரின. அந்த பல்கலைக்கழகங்களில் பல்வற்றிற்கு ‘Institutions of Excellence’ எனும் தகுதியினை வழங்குவதன் மூலம் அப்பல்கலைக்கழகங்களை இடஒதுக்கீடு எனும் சமூகக் கடமையிலிருந்து விடுவிக்கச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *