குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலைப் பொழுதை பாலுடனே தொடங்குகிறோம். குழந்தைகளின் பசிக்காக, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்துக்காக, பெரியவர்கள் டீ ,காபி என எதோ ஒருவகையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக பால் மாறியுள்ளது. இப்படி தினசரி பயன்பாட்டில் நமக்கு கிடைக்கிற பால் உண்மையில் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
பாலில் வேதிப்பொருட்கள் கலப்படம்
- கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை, நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
- Consumer Guidance Society of India (CGSI) எனும் தன்னார்வலர் அமைப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பால் கலப்படம் குறித்து ஆய்வை மேற்கொண்டது. அதில் சந்தையில் விற்கப்படும் 79% பாலில் கலப்படம் உள்ளது என்பதை வெளிப்படுத்தியது.
- 2008-09 ஆம் ஆண்டு சீனாவில் 6200 குழந்தைகள் உடல் நிலை பாதிப்படைந்தது. இதில் மூன்று குழந்தைகள் இறந்தனர். 138 குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதற்கு பால் பவுடரில் இருந்த மெலமைன் என்ற வேதிப்பொருள் காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது. சீன அரசானது அந்த பால் பவுடர் நிறுவனங்களை தடை செய்தது. இதன் காரணமாக இந்தியா சீனாவிலிருந்து பால் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது.
- இந்த மெலமைன் என்பது பிளாஸ்டிக் ஒட்டும் பசை பொருட்கள், சமையலறைப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளாகும். இதைத்தான் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடரில் கலந்தது சீன நிறுவனங்கள். பாலில் புரோட்டின் அளவை கூட்டுவதற்காக இந்த வேதிப் பொருட்களை தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
- குழந்தைகளில் சிறுநீரக பாதிப்பைத் தொடர்ந்து இந்தியாவும் சீன நிறுவனங்களின் பால் பொருட்கள் இறக்குமதியை தடை செய்தது.
- 2011-ம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSAAI) தேசிய அளவிலான பால் கலப்படம் குறித்தான ஆய்வு செய்தது. இதில் டிடர்ஜெண்ட் கலப்படம் இருப்பது தெரியவந்தது. சோதனைக்காக எடுத்துக்கொண்ட பால் மாதிரிகளில் 8% பாலில் டிடர்ஜெண்டுகள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் யூரியா, ஸ்டார்ச், பார்மலின் உள்லிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2017-ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் தனியார் நிறுவனங்களின் பாலில் காஸ்டிக் சோடா மற்றும் பிலீச்சிங் பவுடர் கலப்படம் இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் மனுவில் தனியார் பாலில் பாலில் ஹைட்ரஜன் கார்பனேட் கலந்திருப்பதால் அந்நிறுனத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்டிருந்தார்.
- fssai பால் கலப்படம் குறித்து கண்டறிய கடந்த மே 2018 இல் 6,432 மாதிரிகளை சேகரித்தது. அந்த ஆய்வின் முடிவில் 39% மாதிரி பால்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்றும் 9.9% பால் குடிக்க பாதுகாப்பற்றவை என்பதும் தெரியவந்தது.
- 2017 தமிழ்நாட்டில் fssai 393 பால் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்தது. இதில்101 கலப்பட பால்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டது. 68 வழக்குகள் பதியப்பட்டு ரூ.4.19 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
- 2018 தமிழ்நாட்டில் 847 பால் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது. இந்த சோதனையில் 157 பால் மாதிரிகளில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் மூன்று கிரிமினல் வழக்குகளும் 93 சிவில் வழக்குகளும் பதியப்பட்டது.125 வழக்குகளில் 14.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும் பால் இரண்டின் கெட்டித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாக்கெட்டுகளில் வருவது உண்மையில் பால் அல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
87% தண்ணீரும் 13% இதர பொருட்களாலும் ஆனது தான் மாட்டிலிருந்து கிடைக்கும் பால். ஆனால் நாம் வாங்கும் பாக்கெட்டுகளில் கிடைக்கும் பாலானது வெறொரு கலவையில் கிடைக்கிறது. பாலின் நிறம்,கெட்டித்தன்மை, கெடாமல் இருக்க, கொழுப்புத்தன்மையைக் கூட்ட என பல்வேறு காரணங்களுக்காக யூரியா, டிடர்ஜண்ட், காஸ்டிக் சொடா, மெலமைன் என்று உடல் நலத்தைக் கெடுக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.
சரி பாக்கெட் பால், பால் பவுடர் வேண்டாம். மாட்டு பால்…?
பசு சினை பிடிக்க வேண்டுமெனில் காளையுடன் சேர வேண்டும். அது தானே இயற்கை. ஆனால் தற்போது காளை தேவையில்லை.சினை ஊசி மூலமாக சினை பிடிக்க செய்யப்படுகிறது. இப்படி காளையுடன் சேராமல் ஊசி மூலமாக கன்று ஈன்று கிடைக்கும் பால் எப்படி மனித உடலிற்கு ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.
இப்படி ஊசி மூலமாக கன்று ஈன்ற பிறகு, பசு தன் கன்றின் தேவைக்கேற்ப பால் சுரக்கிறது. பொதுவாகவே மாட்டுப்பால் தன் கன்றின் வளர்ச்சிக்கு தேவைக்கேற்ப சத்துக்கள் மிகுந்ததாகவே இருக்கும். குழந்தைகளைப் பொருத்தவரையில் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே மாட்டு பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைத்ததற்கு பிறகு திட உணவு, கஞ்சி, பழங்கள், தேவைக்கேற்ப தேங்காய் பால் கொடுப்பது நல்லது.
நம் நாட்டு மாடு வகைகள் அதிகம் பால் கறப்பதில்லை. பால் வணிக ரீதியான பொருளாக மாறிய பின்னர் அதிகமான பால் சுரக்கும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டது. அது கரக்கும் பால் அளவும் போதாது என்று ஆக்சிடோசின் எனும் ஹார்மோன் ஊசி பசுக்களுக்கு செலுத்தப்பட்டு பசுவின் ஹார்மோன் செயற்கையாக தூண்டப்பட்டு அதிகப்படியான பால் சுரக்கச் செய்யப்படுகிறது.
இந்த ஆக்சிடோசின் மாட்டின் ரத்தத்தில் கலந்து பிறகு பாலிலும் எஞ்சிவிடுகிறது. இந்த ஆக்சிடோசின் பாலோடு கலந்து மனித உடலிற்குள் செல்லும்போது ஹார்மோன்கள் தொடர்பான பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
பால் குறித்தான ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
1997 ஹார்வர்டு பலகலைக்கழகம் பாலிற்கும் எலும்பு உறுதிக்கும் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வை வெளியிட்டது. தினசரி பால் அருந்துவோரின் எலும்பின் பலம் தொடர்பாக 77,000 செவிலியர்களிடம் 10 ஆண்டுகள் ஆய்வு நடத்தியது. அதாவது வாரத்திற்கு ஒரு டம்ளர், அதற்கும் குறைவாக அருந்துவோர், இரண்டு டம்ளர்களுக்கு மேலாக அருந்துவோர். இவர்களிடையே எலும்பு முறிவு தொடர்பான எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை என்று வெளியிட்டது.
இதேபோல் 3,30,000 ஆண் சுகாதார ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும் எலும்பு முறிவு விகிதங்களில் எந்த வேறுபாடும் இல்லை என்று தெரியவந்தது.
2104-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஸ்வீடன் ஆய்வில் ஒரு நாளில் மூன்று டம்ளர் பால் அருந்துவோருக்கு எலும்பில் ஆரோக்கியத்தில் உதவவில்லை எனவும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஆய்வு முடிவு வெளியிட்டது.
பால் குறித்தான பல ஆய்வுகள் பால் குடிப்பதால் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், எலும்பு பலவீனத்திற்கு வழிவகுப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. காரணம் அதிக அளவிலான பால் அருந்தும்போது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.இந்த கூடுதலான அமிலத்தன்மையை சரி செய்ய எலும்புகளில் சேகரிக்கப்பட்டுள்ள கால்சியம் வெளியேற்றப்படுகிறது.
2014 பிரிடிஸ் மெடிகல் ஜெர்னல் ஆய்வுக் கட்டுரையின் படி, அதிகப்படியான பால் அருந்துவோரிடம் எலும்பு பலவீனம் கண்டறியப்பட்டது.
செரிமானமும் சத்து உருவாக்கமும்
பால் தவிர்க்க முடியாத உணவாகக் கருதப்படுவதற்குக் காரணம் அதில் உள்ள கால்சியம் சத்து. எலும்பு, பற்கள் உறுதிக்கு கால்சியம் சத்து அவசியம் என்பதால் பால் முக்கிய உணவு பொருளாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால் உயிரினங்களின் செரிமான அமைப்பு என்பது கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருந்து தேவையான சத்துக்களை உருவாக்கிக் கொள்வதாகவே அமைந்துள்ளது. என்ன சத்து தேவையோ அதே சத்து அடங்கியுள்ள பொருட்களை உணவுப் பொருளாக உண்ண வேண்டிய கட்டாயம் இல்லை.
இது குறித்தான ஆய்வை பிரெஞ்சு விஞ்ஞானி லூயி கேர்வரான் மேற்கொண்டார். பாலிலிருந்து கால்சியம் கிடைக்கிறது அப்படியென்றால் கால்சியம் அடங்கிய பால் கொடுக்கும் மாட்டிற்கு கால்சியம் எப்படி கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்தார். மாடு உண்ணும் புல்லில் மெக்னீசியம் தான் அதிகமாக இருக்கிறது ஆனால் அது கால்சியமாக மாற்றமடைகிறது என்பதைக் கண்டறிந்தார்.
உயிரினங்களில் செரிமானத்தின்போது ஒன்று மன்றொன்றாக மாற்றமடைகிறது. உடலுக்கு எது தேவையோ அதை கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருந்து உருவாக்கிக் கொள்கிறது. புல் செடிகளையே உணவாக உண்ணும் ஆட்டின் உடலில் கொழுப்புகள் உருவாவதும், ஆட்டின் தேவையைப் பொருத்தே ஆடு உண்ணும் உணவில் கொழுப்பு இல்லை என்றாலுல் அதை உருவாக்கிக்கொள்கிறது. பசி உணர்வு உடலால் அறிவிக்கப்படும்போது செயற்கை ரசாயன கலப்பற்ற, பிடித்த உணவை உண்ணும்போது உடலுக்கு தேவையான சத்துக்களை உடலே செரிமானத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.
குழந்தைகளுக்கு தாய் பாலே சிறந்தது. தாய்ப்பால் கிடைக்காத போது தவிர்க்க இயலாத நிலையில் ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படாத நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை உணவாகக் கொடுக்கலாம். பெரும்பாலும் சுறுசுறுப்பை ஏற்படுத்த தேநீர் அருந்துகிறோம். தேவையான நேரங்களில் பால் கலக்காத தேநீர்,சுக்கு காபி என வித விதமான தேநீர் அருந்தலாம். தற்போது தேநீர் கடைகளில்லுமே பிளாக் டீ,லெமன் டீ என பால் கலக்காத டீக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தயிர், மோர் போன்ற பால் பொருட்கள் (இங்கு பால் என்பது ஹார்மோன் பாலோ பவுடர் பாக்கட் பால் அல்ல.உண்மையான் மாட்டு பால்) ஏற்கனவே நுண்ணுயிர்களால் சிதைக்கப்படுவதால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படுவதில்லை. வயிற்று தொந்தரவுகள், செரிமான தொந்தரவுகள், மலச்சிக்கல் உள்ளவர்கள் பாலை தவிர்ப்பது நல்லது.
சில நேரங்களில் டீ குடித்தே ஆக வேண்டும் என்று மனம் விரும்பும். அந்த நேரங்களில் இந்த ஆய்வுகளை நினைவு கூறாமல் விருப்பத்திற்கு குடிக்கலாம். அது தொடர் உணவாக மாறிவிடாதவாறு பார்த்துக் கொள்வது நலம்.