அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
காவலர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தை மிதிக்கும் காணொளி
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்டை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது கால் முட்டியால் 9 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கழுத்தை மிதிக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்னபோலிஸ் நகரத்தில் உள்ள கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொடுத்த பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடைக்காரர் தெரிவித்த புகாரில் காவலர்கள் நான்கு பேர் அவரை கைது செய்வதாகச் சொல்லி மிருகத்தனமாக நடந்து கொண்டார்.

“என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று கத்திய ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்தே போனார். அவர் எழுப்பிய இறுதி வார்த்தைகள் உலகம் முழுதும் நிறவெறிக்கு எதிரான போராட்ட முழக்கமாக உருவெடுத்தது. நான்கு காவலர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
தீவிரமடைந்த Black Lives Matter போராட்டங்கள்

#BlackLivesMatter என்ற பெயரில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. பல நாடுகளில் கருப்பின மக்களும், வெள்ளை மக்களின் ஜனநாயக சக்திகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். இனவெறியர்களாகவும், நிறவெறியர்களாகவும் இருந்தவர்களின் சிலைகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உடைக்கப்பட்டன. கொலம்பஸ், வின்ஸ்டன் சர்ச்சிள் போன்றோரின் சிலைகளை போராட்டக்காரர்கள் தூக்கி எறிந்தனர்.

கட்டுப்படுத்த முடியாத பெரும் போராட்டங்களாக கருப்பின மக்களின் எழுச்சி விளங்கியது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகர காவல்துறையை கலைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. காவல்துறைக்கான நிதிகளை குறைக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் நடந்தன.
இதையும் படிக்க: Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
வழங்கப்பட்ட தீர்ப்பு
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தற்போது குற்றவாளியாக 12 நீதிபதிகள் கொண்ட அம்ர்வினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பிணையில் வெளியே இருந்த டெரெக் தீர்ப்பு வாசிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டாம் டிகிரி கொலை, மூன்றாம் டிகிரி கொலை, தாக்குதல் உள்ளிட்ட மூன்று குற்றங்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போதுதான் மீண்டும் மூச்சுவிட முடிகிறது
”எங்களால் இப்போதுதான் மீண்டும் மூச்சுவிட முடிகிறது. ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை” என்று ஜார்ஜ் ப்ளாய்டின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
`காவல்துறை அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையின் அடிப்படையில் பார்த்தால் 40 ஆண்டுகள் வரை காவலர் டெரெக் சாவின் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிறவெறிக்கு எதிரான சண்டையில் இது முக்கியமான நகர்வு என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பினை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்கன் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், டெரெக் சாவினுக்கு தண்டனை அளித்துள்ளது வரவேற்க வேண்டிய விடயம் என்றாலும், இந்த தண்டனையின் மூலம் கருப்பின மக்களை கொல்லும் இந்த நாட்டின் அமைப்புமுறை மாறிவிடாது என்று தெரிவித்துள்ளனர். கருப்பின மக்களின் நீதிக்காக காவல்துறை கண்காணிப்பினை மாற்றிடவும், கொள்கை அளவில் மாற்றத்தினைக் கொண்டுவரவும் நாம் தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-Madras Review