கொரோனா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் மிக சிக்கலாகி ஏராளமானோரை பலிகொண்டிருக்கும் இந்த சூழலில் மிகப் பரவலாக “மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்” (Herd Immunity) என்ற பதம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ‘மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்’ பற்றிய விரிவான கட்டுரை ஏற்கனவே நமது ‘மெட்ராஸ் ரிவியூ” வில் வந்திருக்கிறது.
படிக்க: பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?
தற்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னவிதமான மாறுதல்கள் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலில் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மந்தை நோய் எதிர்ப்பு ஆற்றலின் முக்கியத்துவம்
கொரோனா தடுப்பூசி பற்றிய விவாதங்களில், மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைவது குறித்து மேலும் குறிப்புகளைக் கேட்டு வருகிறோம். இது தடுப்பூசி பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த இலக்கை அடைந்தவுடன் தொற்றுநோய் பரவலை நிறுத்தி கடுமையான நோய் பரவலையும் மற்றும் இறப்புகளையும் தடுக்கும் என்றும் நினைக்கிறோம். அதே நேரத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட முடியாது என்பதால் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தட்டம்மை மற்றும் போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் நுண்கிருமிகளுக்கு எதிராகவும் மற்றும் சில சில நோய்களுக்கு எதிராகவும் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைந்ததில் மனிதர்களுக்கு நிறைய அனுபவம் உண்டு. உண்மையில் மனிதகுலத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெரியம்மை மற்றும் கால்நடைகளில் பரவிய ரைண்டர்பெஸ்ட் (Rinderpest) ஆகிய இரண்டு நோய்களையும் நாம் ஒழித்துக்கட்டியதில் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலே உதவிபுரிந்தது.
உலக சுகாதார நிறுவனம் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை ஒரு தொற்று நோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய மறைமுக பாதுகாப்பு ஏற்பாடு என்றே வரையறுக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில வாழும் மக்களுக்கு தடுப்பூசி அல்லது முந்தைய நோய்த்தொற்றின் மூலம் உருவாக்கப்பட்ட நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவாக இருக்கும்போது நிகழ்கிறது. அத்தகைய நிலையை எட்டும்போது நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் கூட நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். ஏனெனில் வைரஸ் அங்கு மேலும் பரவுவதற்கான சூழல் தடைபடுகிறது. அதனால் அங்கு பரவலானது சிறிது சிறிதாக குறையக்கூடும்.
இனப்பெருக்க வீதம் அல்லது ‘R ’ என குறியீட்டில் குறிப்பிடப்படும் எண்ணானது கொரோனா பாதித்த ஒவ்வொருவரும் அவரால் எத்தனை பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பதை அளவிடும் ஒரு எண்ணாகும். இந்த எண் ‘1’ ஐ விட குறைவாக இருக்கும்போது பரவுகின்ற நோயானது மந்தநிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

இஸ்ரேலின் நிலை
தற்போது கொரோனாவுக்கு எதிரான மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை இஸ்ரேல் நெருங்கி வருவதாகத் தெரிகிறது. எனவே எந்தவித நோய் பரவலையும் எதிர்கொள்ளாததால் சமீபத்திய விடுமுறை நாட்களையும் ,விழாக்களையும் கொண்டாட மக்களை அனுமதித்துள்ளது. “நாங்கள் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை நெருங்கி வருகிறோம் என்பது என் கருத்து ஏனென்றால், பல தொழிலகங்கள், கடைவீதிகள் திறப்புகளுக்கும், பூரிம் எனப்படும் யூதர்களின் பண்டிகைக்குப் பிறகும் இஸ்ரேலில் கொரோனா வைரஸின் இனப்பெருக்கம் (R ) விகிதம் 0.7 முதல் 0.8 வரையே காணப்படுகிறது” என்று இஸ்ரேலிய பேராசிரியர் சிரில் கோஹன் கூறுகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் பாதியில் இஸ்ரேல் தனது தடுப்பூசி பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது அங்கு 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தடுப்பூசியை போட இயலாதவர்கள் என சுமார் மூன்று மில்லியன் மக்கள் தடுப்பூசிக்கு தகுதியற்றவர்களாக இருந்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் அங்கு மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைய முடியும் என்று நம்பினர். ஆனால் மிக விரைவாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் ‘பிரிட்டிஷ் பிறழ்வு’ (British variant) நாட்டிற்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியதால் இந்த நம்பிக்கை விரைவில் கைவிடப்பட்டது: இஸ்ரேலின் ஒன்பது மில்லியன் குடிமக்களில் குறைந்தது 80% மக்களுக்கு தடுப்பூசி போடாமல் அந்த இலக்கை எட்ட முடியாது என நிபுணர்கள் எச்சரித்தனர்.
மந்தை நோய் எதிர்ப்பு ஆற்றலின் சூத்திரம்
அதேவேளையில் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் என்பது புரிந்துகொள்ள முடியாத கருத்து அல்ல.மக்கள் தொகையில் எந்த சதவீதத்தை பாதுகாக்க வேண்டும் என்பதைக் கணக்கிட எளிய கணித சூத்திரம் உள்ளதாகவும் அதன்படி ஒவ்வொரு தொற்றையும் நிறுத்த 1–1 / R என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடலாமென்றும் கோஹன் குறிப்பிடுகிறார். கொரோனா வைரஸின் அசல் திரிபில் (Original strain) ‘R’ என்பது 3 குறியீட்டெண்ணில் நிற்கிறது. இது சுமார் 66% மக்கள் தொகையுடன் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைய முடியும் என்பதை குறிக்கிறது.
‘பிரிட்டிஷ் பிறழ்வில் (British variant) அதன் ‘R’ எண் அதன் அசல் திரிபை விட 70% சதவிகிதம் அதிக தொற்றுநோயாகக் கருதப்படுகிறது இதன் ‘R’ எண் 5 ஆக உள்ளது, எனவே மக்கள் தொகையில் 80% சதவிகித மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது. தட்டம்மை நோயில் அதன் ‘R’ எண் 18-20 ஆக உள்ளது, எனவே அதற்கு எதிரான மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு 95% மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படும். தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டு பரவிக்கொண்டிருக்கும் இரட்டை பிறழ்வு கொண்ட கொரோனா வைரஸின் ‘R’ எண் ஆனது கடந்த இருவாரங்களில் 1.18 லிருந்து 1.30 என்ற எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இது இன்னும் பரவிக்கொண்டிருப்பதால் முழுவதுமாக கணக்கிடப்படவில்லை . அதேவேளையில் இரு வாரங்களில் இதன் உயர்வானது இதன் தீவிரத்தை குறிக்கிறது.
அறமில்லாத இஸ்ரேலின் செயல்
இஸ்ரேல் நாட்டின் சமீபத்திய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி , இஸ்ரேலில் வைரஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீண்ட 800,000 பேர் உட்பட அதன் பொது மக்களில் 63% தற்போது நோயெதிர்ப்புத் திறன் கொண்டவர்கள்.
தற்போது இந்த இலக்கை எட்டியிருப்பதாக கூறும் இஸ்ரேல் தொடர்பான மற்றொரு தகவலையும் இங்கு குறிப்பிடவேண்டும். இஸ்ரேலின் இந்த இலக்கை எட்டுவதற்கு தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த கடந்த ஆண்டு 2020 ஏப்ரல் மாதத்திலேயே தன்னுடைய உளவு அமைப்பான ‘மொசாத்’ அமைப்பை முழுவதுமாக களமிறக்கியது. அப்போது தொற்றுநோய்களின் போது தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி விலைமதிப்பற்ற மருத்துவ உபகரணங்கள் மீது கை வைக்கிறோம் என்று மூத்த மொசாட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியான ‘சேனல் 12’ ன் “உவ்டா” என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறையின் தொழில்நுட்பத் துறையின் தலைவர் தாங்கள் நாடுகள் கடுமையான மற்றும் இரகசியப் போரில் ஈடுபட்டிருப்பதாக கூறியதாக தெரிவித்தது.
2020ம் ஆண்டில் மருத்துவப் பொருட்களுக்கு நிலவிய உலகளாவிய பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் பெயர் குறிப்பிடப்படாத நாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்களான 25,000 N95 சுவாச முகமூடிகள், 20,000 வைரஸ் சோதனை கருவிகள், 10 மில்லியன் அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் வழக்கமாக ஆரம்ப பரிசோதனையை மேற்கொள்ளும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 700 மேலதிகப் பொருட்களைப் பெற மொசாத் உதவியுள்ளது. அப்போது பெயர் குறிப்பிடப்படாத மொசாத் அதிகாரி 7,000 வென்டிலேட்டர்களைப் பெறுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தனது அமைப்பு பூர்த்தி செய்யும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
இப்படி குறுக்கு வழியில் மருத்துவ உபகரணங்களை பெற்று இந்த இலக்கை அடைந்த இஸ்ரேல் இதில் பெருமைப்பட ஏதுமில்லை. கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியுடன் ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு ஏழை நாடுகள் போரிட்டு கொண்டிருக்கும்போது இப்படி முறைகேடாக செயல்பட்டு தன் மக்களை காக்கும் நாடு அதன் குடிமக்களுக்கு மறைமுகமாக சொல்லவரும் செய்தி என்ன என்பதை அறம் சார்ந்தோர் கூறட்டும்.
மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துகள்

மீண்டும் கட்டுரைக்கு வருவோம்..மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைவதென்பது நாம் நினைப்பதை விட மிக சிக்கலான ஒன்றாக இருக்கக்கூடும் என்கிறார் ஐயர்லாந்தில் பெல்பெஸ்ட் நகரத்தில் இருக்கும் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் ஆய்வாளர் கானர் பாம்போர்ட் (Connor Bamford,research fellow, virology, Queen’s University ,Belfast) அதற்கான காரணங்களையும் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தவறான கருத்துக்களையும் அவர் பட்டியலிடுகிறார்.
தவறான கருத்து 1:
ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலின் தொடக்கமென்பது அங்கு நிகழும் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அதற்கெதிராக தொடங்குவதென்பது எளிதல்ல. ஏனென்றால் மக்களின் சமூக குழுக்கள் ஒரே மாதிரியானவை அல்ல. பல்வேறு சமூகங்கள் அவற்றில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான வகையில் தனித்தியங்கும் பல்வேறு மக்கள் சமூகங்களாக செயல்படக்கூடும்.
மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலைக் கணக்கிடும்போது பெரிய மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் அங்கு வாழக்கூடிய சமூகங்களுக்கு இடையிலான அனைத்து வகை வாழ்வியல்களையும் தவறாக கணக்கிடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
சில சமூக குழுக்களுக்கு அதன் மக்கள்தொகையில் நோயெதிர்ப்பு ஆற்றலின் அளவு அதிகமாக இல்லாவிட்டால் அந்த குழுக்களுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டால் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவ வாய்ப்புள்ளது. இதனால் தடுப்பூசியை தொடர்ந்து போட்டுக்கொள்ளக்கூடிய அவசியத்தை இது சிக்கலாக்கக் கூடும்.
தவறான கருத்து 2:
குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீங்கள் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைய முடியும்
குறைந்த அளவில் தடுப்பூசி போடப்பட்டபோதும் அதன் தொற்று விகிதத்தில் மாறுபாடு ஏற்பட்டு அதன் வீழ்ச்சி காணப்பட்டால் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் தொடங்கப்பட்டதாக எண்ணலாம் என்று ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
உண்மையில் எளிதில் நோயினால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் பாதுகாப்பானவர்களாக மாற்றப்பட்டு அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நாம் இந்த பெருந்தொற்று முடிவிற்கு வந்துவிட்டதாகவும் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைந்துவிட்டாகவும் கருதமுடியாது.
ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் நோயெதிர்ப்பு ஆற்றலின் ஒரு குறிப்பிட்ட வரம்பை எட்டும்போது மட்டுமே மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் தொடங்குகிறது . கொரோனாவின் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலின் துல்லியமான வரம்பு என்பது இப்போதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. இந்த அளவை நாம் தொற்றுநோயானது அதன் பரவும் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடுகளின் ஏற்ற இறக்கங்களை கொண்டு யூகமாக சொல்வதானால் 80% சதவீதமாக இருக்கக்கூடும்.
தவறான கருத்து 3:
தடுப்பூசி இல்லாமல் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை நீங்கள் எளிதாக அடையலாம்.
கொரோனாவிற்கு எதிரான மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை தடுப்பூசி மூலம் அடைய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது. பிரேசிலின் சில பகுதிகளில் மிக அதிக அளவிலான நோய்த்தொற்றுகள் உள்ள மக்கள் சமூகங்களில் கூட அங்கு இயற்கையான நோய்த்தொற்றின் மூலம் மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
கூடுதலாக சொல்வதானால் தடுப்பூசிகள் இயற்கையான தொற்றுநோயைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானவை. அவை சிறந்த அளவிலான நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்தக்கூடும். மேலும் கவலைப்படக்கூடிய பிறழ்வுகளை, மாறுபாடுகளைக் கையாள்வதற்கு அவை புதுப்பிக்கப்பட்டு புதியவகை பிறழ்வுகளுக்காக மாற்றம் செய்யப்படலாம். தற்போது கொரோனாவிற்கு எதிராக பல பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசிகள் கிடைக்கின்றன மேலும் அவை நோய்த்தொற்றின் பரவலை குறைக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்றன.
தவறான கருத்து 4:
போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலின் இலக்கோடு பொருந்தும்போது மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைவோம்.
உண்மையில் சொல்வதானால் மனித இனத்திலிருந்து கொரோனா வைரஸை விரைவில் ஒழிப்பதென்பது இயலாத ஒன்றாகவே இருக்கக்கூடும். இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலும், தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோயெதிர்ப்பு ஆற்றலும் நீண்ட நாட்களுக்கு பலன் தராமல் போகக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் 100% சதவிகிதம் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதையும் உறுதியாக சொல்ல இயலாது.
இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் பல வைரஸ் நுண்கிருமிகளை போல கொரோனா வைரசும் மனித உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலினால் சிறிதளவே பாதிப்படையகூடிய அளவிற்கு அவை அவ்வப்போது தங்களை புதுப்பித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இது இன்னும் பரவக்கூடிய ஆற்றலை அந்த நுண்கிருமிக்கு வழங்கக்கூடும்.
மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை நாம் எவ்வாறு அடைவோம் என்பது தனிநபர்களை எவ்வளவு சிறப்பாக பாதுகாக்க முடியும் என்பதைப் பொறுத்தது. ஏனெனில் ஒவ்வொரு தனிநபர்க்கும் செலுத்தப்படும் தடுப்பூசியின் வீரியம் என்பது அவர்கள் கொண்டுள்ள நோயெதிர்ப்பு ஆற்றலை பொறுத்தது. தனிப்பட்ட நபர்களின் நோயெதிர்ப்பு ஆற்றலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். தெளிவாக சொல்வதென்றால் ஒருவர் தடுப்பூசி போடப்பட்ட பின்பு அவர் அலட்சியமாக இருப்பதென்பதும், அவரை பாதுகாக்க இயலாத சூழ்நிலைகளும் கொரோனா பெருந்தொற்று குறையக்கூடிய சூழலை தடுக்கும்.
தவறான கருத்து 5:
இது மனிதர்களை மட்டுமே பாதிக்கக்கூடியது.
இறுதியாக, Sars-CoV2 எனப்படும் கொரோனா வைரஸை பொறுத்தவரை இது மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை இந்த வைரஸ் தொற்று ‘மிங்க்’ போன்ற விலங்குகளிடையேயும் நன்கு பரவியிருக்கின்றன. கூடுதலாக, தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்படும் வெளவால்கள், சார்ஸ் போன்ற வைரஸ்களின் மிகப்பெரிய ஆதார மையமாக விளங்குகின்றன. இதனால் இதேபோன்ற நோய்த்தொற்றுகள் மனிதர்களிடம் மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் கொரோனாவிற்கு எதிராக மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலை அடைவதென்பது கோவிட் -19 க்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு பெரிய வரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உண்மையில் நோயெதிர்ப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்க உதவுகிறார்கள். மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படாவிட்டாலும் அல்லது அதற்கான வாய்ப்புகள் வெகு தொலைவில் இருந்தாலும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் வருகின்ற தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் மனித இனம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் மிக முக்கியமான பாதையின் வழிகாட்டிகளில் ஒன்றாகும்.
-Madras Review