“பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்க முடியாவிட்டால் இந்தியாவின் ஜனநாயகம் நிலைத்திருக்காது” என்று 2014-ம் ஆண்டு பதவியேற்றவுடன் நரேந்திர மோடி தனது கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார். அது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களைப் பார்க்கும்போது கட்டாயம் இந்தியாவில் ஜனநாயகம் மழுங்கிப்போனது வெளிப்படையாகத் தெரிகிறது.
பத்திரிக்கை சுதந்திரத்தில் 142வது இடம்
இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கொல்லப்பட்ட நான்கு பத்திரிக்கையாளர்களைக் குறிப்பிட்டு ”தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடு. பத்திரிக்கை சுதந்திரம் மறுக்கப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அடங்கியுள்ளது என்று அவ்வறிக்கை கூறுகிறது.
பத்திரிக்கையாளர்கள் வெளியிடும் எந்தவொரு விமர்சனமும் ”தேச விரோதமானது” அரசுக்கு எதிரானது என்று பாஜக ஆதரவாளர்களால் ஒரு பீதியான சூழலை உருவாக்குகின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படும் பத்திரிக்கையாளர்கள்

“நிருபர்களுக்கு எதிராக காவல் வன்முறை, அரசியல் குழுக்கள், குற்றவியல் குழுக்கள், ஊழல் நிறைந்த உள்ளூர் அதிகாரிகளால் தூண்டப்பட்டும் குழுக்கள் என பல்வேறு குழுக்களால் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். 2019-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்து தேசியவாத அரசாங்கத்தின் கால்களைப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்திற்கு துணைநில்லாத அனைவரும் தேசவிரோதிகள் என்று பொது விவாதங்களில் முத்திரை குத்தப்படுகின்றனர்.
அதேபோல் இந்துத்துவா எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அரசு அதிகாரிகளை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதியப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சில விடயங்களில் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
காஷ்மீரில் துன்புறுத்தப்படும் பத்திரிக்கையாளர்கள்
2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் மொபைல் இணைப்புகள் மற்றும் இணைய சேவைகள் அரசாங்கத்தால் மூடப்பட்டபோது பத்திரிகை சுதந்திரம் கடுமையாக பாதிக்கத் துவங்கியது. இந்த கட்டுப்பாடு பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. காவல்துறையும் துணை ராணுவப் படைகளும் காஷ்மீர் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. அவர்களின் வேலையை செய்யவிடாமல் தடுத்து வருகிறது.
தாக்கப்பட்ட 198 பத்திரிக்கையாளர்கள்
2014-19க்கு இடைப்பட்ட காலத்தில் 198 பத்திரிக்கையாளர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதாக “Getting away with murder” என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த போக்கு எந்த கட்டுப்பாடும் இன்றி அதிகரித்து வருகிறது.
டெல்லி கலவரத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்
பிப்ரவரி 2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் கடுமையாக காயம்பட்டார். அதேபோல் டெல்லி கலவரத்தைப் பதிவு செய்த பெண் பத்திரிக்கையாளர் கற்களாலும், நீண்ட தடிகளாலும் தாக்கப்பட்டார். இதுபோன்று நூற்றுக்கணக்கான வன்முறைகள் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்தால், அதை அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு இந்துத்துவா குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்
கொரோனா கால ஊரடங்கின்போது குறிப்பாக மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை பத்திரிக்கையாளர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு, உடல் ரீதியான தாக்குதல், கேமரா உபகரணங்கள் உடைப்பது போன்ற 55 சம்பங்கள் பதிவாகியுள்ளதாக Rights and Risks Analysis Group (RRAG) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சியில் அதிக தாக்குதல்கள்

உத்திரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் போன்ற பாஜக கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து Free Speech Collective என்ற அமைப்பு Behind Bars: Arrests and Detentions of Journalists in India 2010-2020 என்ற அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மொத்த வன்முறை சம்பவத்தில் 40% கடந்த 2020-ம் ஆண்டு நடந்தவை என்று அவ்வறிக்கை கூறுகிறது.
2020-ம் ஆண்டில் ஊடகவியலாளர்கள் மீதான கொடும் ஒடுக்குமுறை
2020ம் ஆண்டு குறைந்தது மூன்று பத்திரிகையாளர்கள் தங்களது வேலையை முறையாக செய்ததற்காக கொல்லப்பட்டனர். மூன்று பேரில் 2 பேர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டில் 67 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 200 பேர் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர் என்று BEHIND BARS Arrest and Detention of Journalists in India 2010-20 என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
விவசாயிகள் போராட்டத்தை பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீது வழக்குகள்
டெல்லியில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை செய்யவிடாமல் காவல்துறை தடுத்துள்ளது. மேலும் அங்கு மூண்ட வன்முறையின்போது பத்திரிக்கையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தேசத்துரோகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கு விரோதமான அறிக்கைகளை வெளியிடுவது போன்ற குற்றவியல் வழக்குகள் எட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக காவல்துறை பதிவு செய்தது.
கேரவன் ஊடகம் மீதான தாக்குதல்
விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்த மரணம் தொடர்பான ஒரு செய்தியை எழுதியதற்காக மற்றும் சில ட்வீட்டுகளுக்காக புலனாய்வு செய்தி இதழான கேரவன் (Caravan) மீதும் அதன் மூத்த பத்திரிக்கையாளர்கள், வெளியீட்டாளர், தலையங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஆசிரியர் என்று பத்து பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த மதக்கலவரம் மற்றும் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் குறித்தான அறிக்கை வெளியிட்டதற்காக நான்கு கேரவன் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல்
ஊடகவியலாளர்கள் – குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பெண்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்படுகின்றனர். கொலை அச்சுறுத்தல் மற்றும் பாலியல் வசவுகளுக்கு உள்ளாக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பத்திரிக்கை சுதந்திரத்தை அங்கீகரித்தாலும் நடப்பில் உள்ள காலனிய கால குற்றவியல் சட்டங்கள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்காமல் அதற்கு தடையாக உள்ளது.
பத்திரிக்கையாளர்களின் மீதான இந்த அடக்குமுறை, சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், சட்டம் போன்ற பல்வேறு கூறுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையே சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதுதான். அவற்றை செய்ய முடியாத அளவுக்கு இந்தியா மாறியுள்ளது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இன்றைய இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. ஒரு ஊடகம் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படை தேவை.
-Madras Review