ஜெய்சங்கர் மொரீஷியஸ்

மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்

இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு, மொரீஷியஸ் சுற்றுப்பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இருநாள் பயணமாக கடந்த சனிக்கிழமை மாலத்தீவிற்குச் சென்ற அவர், திங்கட்கிழமை மொரீஷியஸ் வந்தடைந்தார். மாலத்தீவு பயணத்தின்போது இந்தியாவிற்கும், மாலத்தீவிற்குமிடையே ராணுவத் தளவாட விற்பனை, கூட்டு கடற்படைத் திட்டம் மற்றும் சாலைக் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மிக முக்கியமாக, உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத்தள பயன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையும், ஒப்பந்தமும் கையெழுத்தாகியது.

படிக்க: மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் மொரீஷியஸ் சென்றார். மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நவுத் (Pravind Jugnauth) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலன் கனூ (Alan Ganoo) ஆகியோருடன் சந்திப்பு மேற்கொண்டார். இந்தியா சார்பில் மொரீஷியசுக்கு ஒரு லட்சம் பேருக்கான கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய அவர், அதைத் தொடர்ந்து அந்நாட்டுடன் வணிக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 

முதல்முறையாக ஆப்ரிக்க நாட்டுடன் போடும் தடையற்ற வணிக ஒப்பந்தம்

ஆப்ரிக்க நாடொன்றுடன், இந்தியா முதல்முறையாக இத்தகைய தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இதன்மூலம் இந்தியா விவசாய உற்பத்தி பொருட்கள், ஆடைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட 310 பொருட்களை மொரீஷியசிற்கு ஏற்றுமதி செய்யமுடியும். 

சகோஸ் தீவு தொடர்பான பேச்சுவார்த்தை

வணிக ஒப்பந்தம் ஒருபுறமிருந்தாலும், மொரீஷியசுடன் இந்தியா கையெழுத்திட்டிருக்கும் ராணுவத் தளவாட விற்பனை ஒப்பந்தம் கடற்போக்குவரத்து தொடர்பில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க கடற்படைத் தளமான டியாகோ கார்சியா (Diago Garcia) அமைந்திருக்கும் சகோஸ் தீவு (Chagos Island) தொடர்பாக இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீன-அமெரிக்க பனிப்போரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியம்

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் ஆயுதத் தளவாட விற்பனை உறவையும், கடற்சார் இராணுவ உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தி வருவதை மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் உடனான இந்திய ஒப்பந்தங்கள் தெளிவுபடுத்துகின்றன. சீன- அமெரிக்க பனிப்போரின் களமாக இந்தோ- பசுபிக் பிராந்தியம் மாறியிருக்கிறது. 

இப்பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தலைமையில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாற்தரப்புக் கூட்டணி அமைத்துள்ளன. அதன் விளைவாக  இந்தோ- பசுபிக் பிராந்திய நாடுகளுடன் ஒருபுறம் சீனாவும், மறுபுறம் அமெரிக்க நாற்தரப்புக் கூட்டு நாடுகளும் தங்களது உறவை வலுப்படுத்தி வருகின்றன.

இதனடிப்படையில், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவினுடைய மேலாதிக்க அரசியல் நோக்கில், பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் விளைவே இந்திய- மாலத்தீவு / மொரிஷியஸ் உறவு. 

தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள ராணுவத் தளவாட உற்பத்தி முனையம்

மேலும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டின் விளைவாக, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், ராணுவத் தளவாட உற்பத்தி முனையம் அமைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ராணுவத் தளவாடங்கள், அமெரிக்க- நாற்தரப்புக் கூட்டு ஆதரவுடைய இந்தோ- பசுபிக் நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளும் இருப்பதாக கருதப்படுகிறது.

இதற்காகவே, இந்திய மாநிலங்களிலேயே மிகச் சிறப்பான போக்குவரத்து சாலைக் கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டுள்ள போதும், தமிழ்நாட்டு இராணுவத் தளவாட உற்பத்தி முனையத்தை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் நோக்கில், தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பிற்காக பிப்ரவரி மாத பட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ராணுவத் தளவாட போக்குவரத்துக்கான சாலைக் கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *