ஜெயலலிதா

மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 1981-ல் அதிமுக-வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் ஆனார். அதன்பிறகு 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, எம்ஜிஆரின் மனைவி ஜானகியோடு மோதி  அதிமுகவை கைப்பற்றினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-வது ஆண்டில் அதிமுக-வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991 வரை ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

காட்டாட்சி என்று விமர்சிக்கப்பட்ட 1991 ஆட்சி

ராஜிவ் காந்தி மரணத்தின் காரணமாக 1991-ம் ஆண்டு காங்கிரசோடு  கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதாவின் இந்த முதல் ஐந்தாண்டு கால ஆட்சி என்பது ஒரு காட்டாட்சி என்றே விமர்சிக்கப்பட்டது.

1992-ம் ஆண்டு மகாமக குளத்தில் ஜெயலலிதா குளிக்கச் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60 பேர் பலியானார்கள். 

இந்த ஆட்சியில் நடந்த ஒரே நல்லது

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 1.2.1980 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். 1989-ல் முதல்வர் கலைஞர் 28.3.1989 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு ஆணையை அளித்தார். பட்டியல் இன மக்களுக்கு 18 சதவீதம் இருப்பது போல், பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக 1 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தார்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, இன்றைக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்டரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் மண்டல் வழக்கில் 19.11.1992 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தது. “கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டு, 31.12.1993 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 1994-ம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இச்செயலுக்காக ஜெயலலிதாவை சமுகநீதி காத்த வீராங்கனை என்று திக தலைவர் கி.வீரமணி பாராட்டினார்.

1996-ல் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா

பல்வேறு மனித உரிமை மீறல்களை காவல்துறையின் மூலமாக மேற்கொண்டது, தமிழீழ ஆதரவாளர்களை வேட்டையாடியது, கரசேவைக்கு ஆள் அனுப்பியது, பல்வேறு ஊழல்கள், வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம் என்று தமிழகமே அல்லோகப்பட்டது. அதன் காரணமாக 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதாவே  தோல்வியடையும் நிலை எற்பட்டது.

முதன்முதலில் கலர் டிவி ஊழலில் கைது

ஜெயலலிதா கலர் டிவி ஊழலில்தான் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.  அதாவது 1995-ம் ஆண்டு கிராம ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கைது  செய்யப்பட்டனர். ஜெயலலிதா 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளிவந்தார்.

டிசம்பர் 7-ம் தேதி ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜனவரி 3-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களை விசாரிப்பதற்காக மூன்று சிறப்பு நீதிமன்றங்களைக் கூட அரசு அப்போது ஏற்படுத்தியிருந்தது.

பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதா

1998 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 18 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரியது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் இழுத்தடித்த பின்னர்தான் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா. இந்த ஒரு வார காலமும் பாஜகவை நடுங்க வைத்தார். அத்தோடு முடியவில்லை துயரம். 14 மாதங்கள் நீடித்த பாஜக ஆட்சியில் அதிமுக-வால் படாதபாடு பட்டார் வாஜ்பாய்.

தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அப்போதைய கருணாநிதி அரசை கலைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தொடர்ந்து நெருக்கி வந்ததாகக் கூறப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால் வாஜ்பாய் பணியவில்லை. இதையடுத்து ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் வாஜ்பாயின் 2-வது ஆட்சி கவிழ்ந்தது. இப்படிப்பட்ட ஜெயலலிதாவைத் தான் ராஜ்நாத் சிங் அண்மையில் பாஜகவோடு ஜெயலலிதா நெருங்கிய நட்பைக் கொண்டவர் என்று பேசியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் அடுத்த ஆட்சியும் காட்டாட்சியாகவே விமர்சிக்கப்பட்டது

2001 – 2006ல்  ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்தது, கோவில்களில் ஆடு, கோழியை பலியிடுவதைத் தடுக்கும் உயிர்பலி தடைச் சட்டம் கொண்டுவந்தது, மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவந்தது, பொடா கைதுகள் என்று தொடர்ந்ததால் 2004-ம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இத்தோல்விக்குப் பிறகு தன்னை கொஞ்சம் திருத்திக் கொண்டார். இதற்கு முன்னர் நிறைவேற்றிய அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெற்றார்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட மாற்றம்

இந்தியாவின் அதிகார மையங்களை எதிர்த்து, சங்கரராமன் கொலை வழக்கில்  சங்கராச்சாரியை துணிச்சலாக கைது செய்தார். 

2011-ம் ஆண்டு ஆட்சி அமைத்தபோது தன் கடந்தகால ஆட்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆட்சியை  அமைக்க முயன்றார். சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார். 

ராஜிவ் காந்தி  மரணத்தில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறித்தபோது, முதலில் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சியினர் பேசுவதற்கே அனுமதி மறுத்தார்.

தமிழ்நாடு முழுவதும் நடந்த மக்கள் திரள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக 29.8.2011 அன்று ”திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினார்.    

2013-ம் ஆண்டு இனப்படுகொலைக்கு நீதிகேட்டு மாணவர் போராட்டம் நடைபெற்ற போது, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.

மோடியா? லேடியா?

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் வளர்ச்சி மாடல் என்று ஊதிப் பெருக்கப்பட்டபோது, தென்சென்னை தேர்தல் பிரச்சாரத்தில், ”குஜராத் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போர் 16.6 சதவிகிதம். அதே, தமிழகத்தில் 11.3 சதவிகிதம் தான் உள்ளனர். குஜராத் வளர்ந்துள்ளதாகக் கூறுவது தவறு. உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 மெட்ரிக் டன்தான். ஆனால், தமிழகத்தில் 101.57 மெட்ரிக் டன். அதேபோல் மகளிருக்கான குற்றங்கள் 65 சதவிகிதம் குஜராத்தில் அதிகரித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் 29 சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 36,996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாகப் பணிபுரிகின்றனர். இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடியா? இந்த லேடியா?” என்று கேள்வி எழுப்பினார்.

உதய் மின் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்

2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுக்கூட்டங்களில் பேசியபோது, உதய் மின் திட்டம் குறித்து கடுமையாக விமர்சனமும் செய்து வந்தார். விருதாசலத்தில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “உதய் திட்டம் பொதுமக்களிடம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று சொன்னார். “மின்துறையின் கடனை மாநில அரசு ஏற்பதால் மாநில அரசுக்குக் கடும் நிதி நெருக்கடி ஏற்படும். மேலும் உதய் மின் திட்டத்தில் கூறியபடி 3 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” என்று கூறினார். ஜெயலலிதா இந்தத் திட்டத்தில் சேரமுடியாது. என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.

நீட் தேர்வு எதிர்ப்பு

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வந்தார். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு தடை விதித்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், மீண்டும் நீட் தேர்வு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அதற்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தார். 

பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கை  நடைபெறும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஜி.எஸ்.டி-யை எதிர்த்த ஒரே கட்சி

2016-ம் ஆண்டு பாஜக அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்த போது, எல்லா கட்சிகளும் ஆதரித்த போது, இந்தியாவிலேயே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மட்டுமே ஒற்றைக் கட்சியாக அதனை எதிர்த்தது. ஜி.எஸ்.டி என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அன்றைய அதிமுக பாராளுமன்றத்தில் பேசியது.

தன் இறுதி காலத்தில் அரசியல் காரணங்களுக்காகவேனும் மாநில உரிமை பேசுபவராக இந்தார் ஜெயலலிதா. இதுவே இந்தியாவின் அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஜெயலலிதா மீது கோபம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். கரசேவைக்கு ஆள் அனுப்புபவராக இருந்து, பிற்காலங்களில் மோடியா லேடியா என்று சவால் விடுபவராக மாறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *