தூய்மைப் பணியாளர்கள்

கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு

கொரோனா பேரிடரில் ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அகற்றுகிற மிக முக்கியமான பணியைச் செய்த முன் களப்பணியாளர்களான துப்புரவுத் தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் மொத்தமாகக் கைவிட்டிருக்கிறது.

ஊரடங்கின் துவக்கத்தில் முன்களப் பணியாளர்களுக்கு என்று பல்வேறு அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால் உண்மை நிலை என்பது வேறாக இருக்கிறது.

கொரோனா பணியின் போது துப்புரவும் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்குவதாகச் சொன்ன அமைச்சர் உதயகுமார்

ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை

முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை.

கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில்  நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள். 

கொரோனா பேரிடரில் பணியாற்றிய இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து தொழிலாளர்களுக்கு இந்த பேரிடர்கால பணிக்கான ஊதியம் கூட வழங்கப்படவில்லை.

துப்புரவுப் பணியாளர்களின் சிக்கல்கள் குறித்து Madras Review ஊடகத்திடம் பேசிய தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி பெறுவதற்கு தாங்கள் நடத்திவரும் போராட்டங்களைப் பற்றி தெரிவித்தார்.

பேரறிவாளன்

பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களின் நிலையைக் குறித்து தெரிவித்த அவர், தொடர்ச்சியாக நடைபெறும் தூய்மைப் பணியாளர்கள் மரணத்தின் போதும், பாதிப்புகளின் போதும் பெரும் போராட்டத்திற்குப் பிறகே அவர்களுக்கான இழப்பீடு கிடைக்கிறது என்று தெரிவித்தார். முன்களப்பணியாளர்களாக இருந்த அனைத்து  பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு நிர்ணயம் செய்த முழு ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர் நலவாரியம் முறையாக செயல்படவில்லை. அது தன் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   

ஊதியம் இல்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மதுரை வேல்முருகன்

மதுரை மாவட்டம் வண்டியூரைச் சேர்ந்த வேல்முருகன் தூய்மைப் பணியாளர். இவர் ஒப்பந்த ஊழியராக ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரர் பணியாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்கவில்லை என்ற குற்றசாட்டு இருந்தது. தற்போது ஒப்பந்தம் எடுத்திருப்பவர் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து பிப்ரவரி 18 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்ப்புலிகள் கட்சி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இவருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும்தான் வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.

கிருமிநாசினிக் கருவி வெடித்து 90% பார்வையை இழந்த மாரிமுத்து

அதேபோல மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி மதுரை சிங்கராயர் காலனியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது கிருமிநாசினிக் கருவி வெடித்து ரசாயனம் அவரது முகத்தில் அடித்ததில், 90 சதவீதம் அவரது பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வாய், உணவுக் குழாய் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு உரிய சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை. மேலும் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் முன்பு போல் வேலைக்குச் செல்ல இயலவில்லை. குடும்பத்தின் ஒரே வாழ்வாதராமாக இருந்த அவர் வேலைக்கு செல்ல முடியாததால் தற்போது அவரது மனைவி குழந்தைகளோடு  வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார். இப்பொழுது அந்த குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவர் ஒப்பந்த ஊழியர் என்பதால் முன்களப்பணியாளருக்கான இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புலிகள் கட்சியினரின் உதவியுடன் அவரது மனைவி சாந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி  ஆணையர், குடிநீர் மற்றும் வடிகால் துறைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கையை இழந்து நிவாரணம் பெறப் போராடிய பாக்கியலட்சுமி

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றைப் பிரிக்கும் மையத்தில்  ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றினார். அங்கு நடந்த விபத்தில் அவரது ஒரு கையை முழுவதுமாக இழந்துள்ளார். இவரும் ஒப்பந்த ஊழியர் என்ற காரணத்தாலேயே இழப்பீடு மறுக்கபட்டு வந்துள்ளது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிதி அளித்துள்ளனர். அதன்பின்னும் நடந்த தொடர் போராட்டங்கள் காரணமாக திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பளையம் மண்டல அலுவலகத்தில்  வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

மாநில துப்புரவுப் பணியாளர் நலவாரியம் உருவாக்கிட உத்தரவு

கடந்த 2019-ம் ஆண்டு தமிழகம் வந்த தேசிய துப்புரவுப் பணியாளர் நலவாரியத் தலைவர் துப்புரவுப் பணியாளர்களின் இறப்பு குறித்து தமிழக அரசு வழங்கக்கூடிய புள்ளி விவரங்களும், சங்கங்களின் புள்ளி விவரங்களும் வெவ்வேறாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 நகரங்களில் மீண்டும் கணக்கெடுக்கப்பட உள்ளது. அதேபோல அவர் மாநில அளவில் துப்புரவுப் பணியாளர் நலவாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளதோடு, அதனை 2 மாதத்திற்குள் உருவாக்கிட வேண்டுமென கால அவகாசமும் கொடுத்துள்ளார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை 

மலக்குழியில் இறங்கி பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முழுமையாக தரவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகம் உள்ளது. துப்புரவுப் பணியாளர்களுக்கான நலன்களைப் பாதுகாப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பிறகும் தமிழக அரசு துப்புரவுப் பணியாளர் நலனில் அக்கறையுடன் செயல்படவில்லை. பெருந்தொற்றில் முன்களப்பணியாளராக ஆபத்தான பணி செய்த துய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளராக மாற்றுவது தான் இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *