மாலத்தீவுடன், இந்தியக் கப்பற்படை துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவினில் உள்ள உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தளத்தின் (Uthuru Thila Falhu naval base) வளர்ச்சி தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
மாலத்தீவிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்; இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்ட இச்சுற்றுப்பயணத்தில் சில முக்கிய ஒப்பந்தங்களை அந்நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியா கடனாக வழங்கிய 5 கோடி டாலர்
அவற்றில் குறிப்பாக உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தள ஒப்பந்தம் புவிசார் அரசியல் முக்கியத்துவமுடைய ஒப்பந்தமாகும். இதனுடன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளின் படைகளுக்கும் தேவையான கப்பற்படை வசதிகளுக்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கிடையேயான ராணுவப் பாதுகாப்பு திட்டத்திற்கு என 5 கோடி அமெரிக்க டாலரை மாலத்தீவிற்கு, இந்தியா கடனாக வழங்கியுள்ளது.
இந்தோ-பசுபிக் கடலின் பிராந்திய அரசியல் விரிவாக்கம்
இந்தோ- பசுபிக் பெருங்கடல் புவிசார் அரசியலை மையப்படுத்தி அமெரிக்க ஆதரவு நாடுகளான இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாற்தரப்புக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்நாடுகள் இணைந்து இந்தியப் பெருங்கடற் பரப்பில் கூட்டு கடற்படை பயிற்சியினையும் மேற்கொண்டன.
இந்நிலையில் இந்நாடுகளின் இந்தோ- பசுபிக் கடற் பிராந்திய அரசியலின் விரிவாக்கமாக மாலத்தீவினில் இந்தியா இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தின் முதல் நாளான சனிக்கிழமையன்று இந்தியா சார்பில் மாலத்தீவிற்கு ஒரு லட்சம் பேருக்கான கொரோனா தடுப்பூசி மருந்தினை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
அதனைத் தொடர்ந்து, மாலத்தீவின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் வீடுகள் கட்டுமான திட்ட ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகின. 5 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மீன் பதனக் கூடத்தை வட மாலத்தீவின் கேந்திக்குல்ஹூதூ அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.