ஓ.பி.எஸ் மற்றும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) பிரிவில் வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டமசோதா தற்காலிகமானதே என்று ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

தேர்தல் நேரத்தில் ராமதாசின் போராட்ட அறிவிப்பு

தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவிருந்த சூழ்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர் ராமதாஸ் போராட்டம் அறிவித்தார். 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு MBC பிரிவில் உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என்று சட்டமசோதாவினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். மேலும் சீர்மரபினர் எனப்படும் DNC பிரிவினருக்கு 7% சதவீத ஒதுக்கீடும், மற்ற சாதிகளுக்கு 2.5% ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆளுநரும் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார். 

சாதனையாக பரப்புரை மேற்கொண்டுவரும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு உள் ஒதுக்கீடாக பெற்றதை தங்களது சாதனையாக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வன்னியர்கள் அனைவரும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றெல்லாம் ராமதாஸ் பேசி வருகிறார். ”உங்கள் 40 வருட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது அப்பா” என்று அன்புமணி ராமதாஸ் தனது தந்தையிடம் தொலைபேசியில் கண்கலங்கி பேசுவதைப் போன்ற காணொளியும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. 

சீர்மரபினர் பகுதிகளில் அதிமுகவினருக்கு எதிர்ப்பு

இந்த சூழலில்தான் தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் (DNC) பிரிவில் வரக்கூடிய மறவர்கள், பிறமலைக்கள்ளர் போன்ற பிரிவினைச் சேர்ந்தவர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர்களின்  பகுதிகளில் எதிர்ப்பினை தெரிவிக்கத் தொடங்கினர். ஒரு இடஒதுக்கீடு கோரிக்கையானது முறையான ஆய்வின்றி, தேர்தல் நலனுக்காக அவசர கதியில் அறிவிக்கப்பட்டதால், இது மிகவும் பிற்படுத்தப்பட்ட பல்வேறு சாதிகளுக்கிடையிலான முரணாக மாற்றப்பட்டுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். 

ஆர்.பி.உதயகுமாரின் சர்ச்சை கருத்து

இந்த சூழலில்தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வெறும் 6 மாத காலத்திற்குத்தான். தேர்தலுக்கு பின்னர் மாற்றியமைக்கப்படும் என்று பேசி சர்ச்சைக்கு உள்ளானது. 

தற்காலிகமானதே என்று கூறியுள்ள துணை முதலமைச்சர்

இந்த சூழலில் தற்போது போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே கருத்தை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. 

”வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எனும் கோரிக்கையை கேட்பதற்கு முன்னர் அவர்கள் சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதையே கோரிக்கையாக வைத்திருந்தனர். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த உள் ஒதுக்கீடும் மக்கள் தொகையின் அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. எனவே சாதிவாரி மக்கள் தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பழைய மக்கள் தொகை தரவுகளை வைத்துக்கொண்டு இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதை வன்னியர்களின் பிரதிநிதிகளிடம் முன்னரே தெரிவித்து விட்டோம். ஆனால் இந்த நேரத்தில் தற்காலிமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டனர். சாதி வாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் இடஒதுக்கீடு அளவினை முடிவு செய்ய முடியும் என்று சொன்னதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தால்தான் நிரந்தர இறுதி உத்தரவை போட முடியும்” என்று இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்பே அறிவிக்க கேட்கப்பட்டது

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும் என்றால் தேர்தல் முடியும் வரை காத்திருந்திருக்க முடியாதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”நாங்கள் முதலில் அப்படித்தான் சொன்னோம். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அச்சமூகத்தின் தலைவர்கள் இப்போதே ஒரு தற்காலிகமாக ஒரு அறிவிப்பு வேண்டும் என்று கேட்டதால், 10.5% என்பது அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். 

அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் வன்னிய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தான் அவசர அவசரமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டதா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

மீண்டும் தற்காலிகமானதே என்று உறுதியாக சொன்ன ஓ.பி.எஸ்

சீர்மரபினருக்கு (DNC) 7% என்ற அறிவிப்பு அவர்களிடையே கோபத்தையோ வருத்தத்தையோ ஏற்படுத்தியிருக்கிறதா என்ற கேள்வியும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், ”20% இடஒதுக்கீட்டின் கீழ் சீர்மரபினர் மட்டுமல்லாமல் MBC-ன் பிற சாதிகளும் இருக்கிறார்கள். 98 சாதிகள் இருக்கின்றன. பிறமலைக் கள்ளர்கள், மறவர்கள் மற்றும் கள்ளர்களில் ஒரு சிறிய பகுதியினரும் இருக்கிறார்கள். அகமுடையார்கள் இல்லை. பிறமலைக்கள்ளர்கள் பெரும்பாலும் மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளிலும், மறவர்கள் தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் இருக்கின்றனர். சீர்மரபினருக்கு 7% மற்றும் பிற MBCயினருக்கு 2.5% அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்காலிகமானதே” என்று மீண்டும் தெரிவித்துள்ளார். 

நிரந்தரமானது என்று ராமதாஸ் அறிக்கை

ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இடஒதுக்கீடு நிரந்தரமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்து புரிதல் இல்லாத சிலர் கூறிவருகின்றனர் என்று பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது நிரந்தரமான சட்டம்தான். தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் நிறைவேற்றப்படும் வரை இதுவே நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் வன்னியர் இடஒதுக்கீடு நிரந்தரமானதுதான் என்று உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கூட்டணிக்குள்ளும், சமூகத்திலும் சலசலப்பு

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் கூறுவதும், அவருடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் அது நிரந்தரமானது என்று கூறுவதும் அரசியல் வட்டாரத்தில் கடுமையான சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த சலசலப்பு தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்குமோ என்று அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல், எந்தவித ஆய்வுமின்றி தேர்தல் நலனுக்காக வன்னியர்களின் வாக்குகளை குறிவைத்து அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பு, தற்போது பல்வேறு சமூகங்களுக்கிடையில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவுகளை தென்மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக சந்திக்கிறார்கள்.  தேர்தலுக்கு முன்பே தற்காலிகமாக ஒரு ஏற்பாட்டை செய்து அறிவிக்குமாறு ராமதாஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக, பன்னீர்செல்வம் கூறியிருப்பது, எந்த ஆய்வும் இல்லாமல் அவசர அவசரமாக இந்த அறிவிப்பு தேர்தல் நலனுக்காக வெளியிடப்பட்டதை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *