போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு
போஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரெனிகா நகரத்தை ஆக்கிரமித்து செர்பிய படைகள் போஸ்னிய இசுலாமியர்களை படுகொலை செய்த ஜூலை 11, 1995 என்ற தேதியின் நினைவாக அந்த நாளானது இனப்படுகொலை நாளாக அங்கு அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரெப்ரெனிகா நகரைக் கைப்பற்றியவுடன், சில நாட்களில் மட்டும் 8000 இசுலாமியர்கள் செர்பிய படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதுவரையில் 80க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகளிலிருந்து 6900 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. போஸ்னியாக் இசுலாமியர்கள் மற்றும் க்ரோட் இன மக்களுக்கு எதிராக செர்பியர்களின் படை நடத்திய தாக்குதல்களில் 1992 க்கும் 1995 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் சுமார் 1,00,000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலையாக பார்க்கப்படுகிறது. ஸ்ரெப்ரெனிகாவில் நடைபெற்ற படுகொலை என்பது இத்தொடர் படுகொலையின் ஒரு அங்கம் மட்டுமே.


போஸ்னிய இனப்படுகொலையின் வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ’யுகோஸ்லாவியக் குடியரசின் சோசலிச கூட்டமைப்பு’ (Socialist Federal Republic of Yugoslavia) என்பது 6 குடியரசுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவை போஸ்னியா-ஹெர்சேகோவினா, குரோட்டியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, செர்பியா மற்றும் ஸ்லோவேனியா ஆகும். யுகோஸ்லாவியாவின் அதிபரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டிட்டோ(Josip Broz Tito) 1980-ல் இறந்த பிறகு அங்கு அரசியல் சிக்கல்கள், குழப்பங்கள் உருவாக ஆரம்பித்தன. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் 1991-ம் ஆண்டு யுகோஸ்லாவிய கூட்டமைப்பு பல்வேறு சிக்கல்களின் உடைவுறத் தொடங்கியது.
போஸ்னியாவின் விடுதலை அறிவிப்பை ஏற்காத போஸ்னிய செர்பியர்கள்
1992-ம் ஆண்டு போஸ்னியா-ஹெர்சேகோவினா குடியரசானது யுகோஸ்லாவிலிருந்து தனது விடுதலையினை அறிவித்தது. போஸ்னியா-ஹெர்சேகோவினா குடியரசில் போஸ்னிய இசுலாமியர்கள், போஸ்னிய செர்பியர்கள், குரோட்டியர்கள் எனும் மூன்று இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்தார்கள். அவர்களின் மக்கள் தொகையில் 44 சதவீதம் போஸ்னியாக் எனும் இசுலாமியர்களும், 31 சதவீதம் செர்பியர்களும், 17 சதவீதம் குரோட்டியர்களும் இருந்தனர். இசுலாமியர்கள் பெரும்பான்மையினராக இருந்ததாலும், இசுலாமிய கட்சி ஆட்சியில் இருந்ததாலும், அங்கு வசித்த செர்பியர்கள் இந்த விடுதலை அறிவிப்பினை ஏற்கவில்லை. அவர்கள் யுகோஸ்லாவியாவுடன் சேர்ந்திருக்கவோ அல்லது செர்பியாவுடன் இணைந்து கொள்ளவோ விரும்பினார்கள். அப்போது அங்கு வளர்ந்திருந்த இனவாத சக்திகள் போஸ்னியாவின் செர்பிய மக்களை, போஸ்னியாக் எனும் இசுலாமியர்களுக்கு எதிராகவும், குரோட்டியர்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டன.

செர்பியர் படையின் இசுலாமியர் மீதான தாக்குதல்
போஸ்னியாவின் செர்பியர் கட்சியின் தலைவர் ரேடோவான் கராட்சிக் என்பவர் செர்பியர்களுக்கான தனி ’செர்பிய தேசிய அவை’(Serbian National Assembly)-யை உருவாக்கினார். செர்பியர்களின் படையும் தனியே இருந்தது. 1992 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் போஸ்னியாவின் விடுதலையை அங்கீகரித்தன. இதன் பின்னர் போஸ்னியாவில் இருந்த செர்பியர்களின் படை, யுகோஸ்லாவிய ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு போஸ்னியாவின் தலைநகரத்தை தாக்கியது.

கிழக்கு போஸ்னியாவில் இருந்த இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கினார்கள். போஸ்னியாவின் பல பகுதிகளை செர்பியர்களின் படை கைப்பற்றியது. இதற்கிடையில் இசுலாமியர்கள் மிகப் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டன. அரசியல் தலைவர்களும், அறிவுஜீவிகளும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஏராளமான குரோட்டியர்களும், போஸ்னிய இசுலாமியர்களும் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.


ஸ்ரெப்ரெனிகா படுகொலை
1995ம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா, செபா, கொராஸ்டெ ஆகிய மூன்று நகரங்கள் போஸ்னிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்பகுதியில் அகதிகள் ஏராளம் இருந்ததால் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, ஐ.நாவின் அமைதிகாப்புப் படை அங்கிருந்தது. அங்கு 50,000 இசுலாமியர்கள் இருந்தார்கள்.

ஆனால் ஜூலை 11, 1995 அன்று ராட்கோ மிளாடிக் எனும் தளபதியின் உத்தரவுப்படி செர்பியர்களின் படை ஸ்ரெப்ரெனிகா பகுதிக்குள் நுழைந்தது. போஸ்னிய இசுலாமியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏராளமான போஸ்னிய இளைஞர்களை அவர்களின் மரணத்திற்கு முன்பு அவர்களையே குழிவெட்ட சொல்லி, அக்குழியில் அவர்களை சுட்டுத் தள்ளியது செர்பியர்களின் படை. இந்நிகழ்வில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு வார கால இடைவெளிக்குள் இந்த படுகொலைகள் நடைபெற்றன.

வேடிக்கை பார்த்த ஐ.நா அமைதிகாப்புப் படை
நெதர்லாந்திருந்து வந்திருந்த ஐ.நாவின் அமைதி காப்புப் படை இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கவே செய்தது. மேலும் போஸ்னிய இளைஞர்கள் பலர் கொல்லப்படுவார்கள் என தெரிந்தும் அவர்களை செர்பியர்களின் படையின் கையில் ஒப்படைத்தது. நவம்பர் மாதத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இவை முடிவுக்கு வந்து குரோட்டிய-போஸ்னியாக் பகுதி மற்றும் செர்பிய குடியரசு என இரு பகுதிகளும் தனித்தனியாக இணைந்த கூட்டமைப்பாக போஸ்னியா-ஹெர்சேகோவினா மாற்றியமைக்கப்பட்டது.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கம்
இந்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. International Criminal Tribunal for the former Yugoslavia (ICTY) என்று அத்தீர்ப்பாயம் அழைக்கப்பட்டது. செர்பியர்களின் படை தனது குற்றங்களை மறைப்பதற்காக கொல்லப்பட்ட இசுலாமியர்களின் உடல்களை துண்டுத் துண்டாக் வெட்டி தனித்தனி இடங்களில் புதைத்தது. இதனால் ஏராளமானோரை அடையாளம் காண முடியாமல் போனது.
செர்பியர்களின் படையின் ராணுவ தளபதி ராட்கோ மிளாடிக், செர்பியர்களின் கட்சித் தலைவர் ரேடோவான் கராட்சிக் ஆகியோர் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்டிருப்பதாக ICTY குற்றம் சாட்டியது.

மேலும் 161 தனிநபர்கள் மீது பல்வேறு குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. 2002-ம் ஆண்டு முன்னாள் செர்பிய அதிபர் மிலோசோவிக்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் 2006-ம் ஆண்டிலேயே இறந்து விட்டார்.
பல ஆண்டுகள் விசாரணை நடைபெற்று கடந்த 2017-ம் ஆண்டு ICTY தனது தீர்ப்பினை வழங்கியது. அதில் மிளாடிக் இனப்படுகொலை குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.
நாயகனாக சித்தரிக்கப்படும் இனப்படுகொலையாளி
போஸ்னிய செர்பியர்களின் படைத் தளபதியான மிளாடிக் இன்றுவரை பல செர்பியர்களால் நாயகனாகவே சித்தரிக்கப்படுகிறார். அவர் தன் மீதான ஆயுள் தண்டன தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார். அதற்கான இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. இப்போது இந்த கொரோனா பேரிடரின் காரணமாக தீர்ப்பாயம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், இறுதித் தீர்ப்பு 2021-க்கு தள்ளிப் போகிறது. இன்றும் நடந்தது இனப்படுகொலை என்பதை செர்பிய தலைவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட இனப்படுகொலை நினைவேந்தல்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று இனப்படுகொலையை நினைவு கூறும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நினைவு கூர்வது வழக்கம். இந்த ஆண்டு 25வது ஆண்டு என்பதால் இந்த நினைவு தினத்தினை மிகப் பெரிய அளவில் அனுசரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை.
இருந்தபோதிலும் சிறிய எண்ணிக்கையில் தனித்தனியாக வந்து கொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.
இனப்படுகொலையை மறுப்பவர்கள் யாராக இருந்தாலும், கொலையாளிகளை பெருமைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் இறுதி வரை போராடுவோம் என்று போஸ்னிய இசுலாமியர்கள் 25 ஆண்டுகள் கழித்து இன்றும் உறுதியாய் சொல்கிறார்கள்.


எலும்புகளைத் தேடும் போஸ்னியாக்
ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் இருந்து தப்பி வந்த ரமீஸ் நூகிக்(Ramiz Nukik) எனும் போஸ்னியர், 2005-ம் ஆண்டு தனது தனது தந்தை மற்றும் சகோதரர்களின் எலும்புகளை தேடத் தொடங்கினார். அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அத்தோடு நில்லாமல் கொல்லப்பட்ட பிற மக்களை அடையாளம் காண்பதற்கு தேட ஆரம்பித்து, போஸ்னியர்களின் எலும்புகளை 15 ஆண்டுகளாக இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் 300 பேரை அடையாளம் காண்பதற்கு உதவியிருக்கிறார். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவர்களின் எலும்புகளை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தால் அவர்களின் தாய்மார்களுக்கு தன்னால் குறைந்தபட்ச நிறைவினை கொடுக்க முடியும் என்று உறுதியாய் தேடிக் கொண்டிருக்கிறார் நூகிக்.

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி எப்போது!