உத்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயலாளர் சச்சின் செளதாரிக்கு பிணை வழங்கிய போது, அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சமூக ஊடகங்கள் கையிலிருக்கும் துப்பாக்கியைப் போன்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசும், இந்திய ஒன்றிய அரசும் கொரோனா பெருந்தொற்றினை முறையாகக் கையாளவில்லை என்று ஊரடங்கு நேரத்தின் போது, பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தியதற்காக உத்திரப்பிரதேச காங்கிரஸ் செயலாளர் சச்சின் செளதாரி கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரைக் குறிவைத்து அவதூறு பரப்பியதாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66-A மற்றும் 67, குற்றவியல் பிரிவுகள் 188, 269 -271, 153 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதியப்பட்டன. தேசத்துரோக வழக்கு எனப்படும் பிரிவு 124-Aன் கீழும் வழக்கு பதியப்பட்டது.
ஏப்ரல் 11ம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு மே 20-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தின் உத்தரவில், இந்த விசாரணை முடிவுக்கு வரும்வரை சச்சின் செளதாரி சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என நிபந்தனை உத்தரவும் வழங்கப்பட்டது.
அவர் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய போது, அதை மறுத்து ”18 மாதங்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது அல்லது இந்த வழக்கு விசாரணை முடியும் வரை பயன்படுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளது..
பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் இந்த வழக்கில் ஆஜரானார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கருத்து சுதந்திரத்தினை பறிக்கக் கூடியதாய் உள்ளது என்று வாதிட்டார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அவரது வாதத்தினை ஏற்க மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பது நீங்கள் சமூக வலைதளத்தினைப் பயன்படுத்துவதை பற்றியும் கூட இருந்தால், அதனை பயன்படுத்த தடை விதித்து ஏன் உத்தரவிடக் கூடாது? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது. அவர் சமூக வலைதளத்தினை பயன்படுத்துவதை தடுக்கும் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் சட்டங்களை உச்சநீதிமன்றம் வகுக்க உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சமூக வலைதளங்களை ஒருவர் பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களை துப்பாக்கியுடன் ஒப்பிடும் நீதிபதிகளின் கருத்து சரிதானா என்றும், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு-19 வழங்கும் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தினை எப்படி தடை செய்ய முடியும் என்றும் விவாதங்கள் எழ ஆரம்பித்துள்ளன.