மனித குலத்தை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அனைத்து விதமான அன்றாட நிகழ்வுகளையும் உறைய வைத்திருக்கிறது. தொழில்கள், அலுவலகங்கள் அனைத்தும் முடங்கியிருக்கின்றன. இதில் பள்ளிகள் விதிவிலக்கல்ல. எனினும் அரசுகள் தற்போது பரிந்துரைக்கும் இணைய வழி கற்றல் உண்மையிலேயே வகுப்பறை கற்றலுக்கு மாற்றானதா? பார்ப்போம்.
இந்த பெருநோய்த் தொற்று காலத்தில் உலகெங்கும் தங்கள் வகுப்பறைகளை இழந்திருக்கும் மொத்த மாணவர்களில் சரிபாதியினர் அதாவது 826 மில்லியன் (82.62 கோடி) மாணவர்கள் தங்களுக்கென சொந்தமாக கணினி வசதியற்றவர்கள். மேலும் 43% மாணவர்கள் (706 மில்லியன் அல்லது 70.6 கோடி) மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் இணையதள வசதியற்றவர்கள் என்கிறது யுனெஸ்கோ அமைப்பு.
சர்வதேச நிலவரங்களை விட நம் நாட்டு நிலவரங்களை அலசுவோம்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது. அதிலும் கிராமப் புறங்களில் வெறும் 4 சதவீதத்தினரின் வீடுகளில் தான் இவ்வசதிகள் இருக்கின்றன.
கல்விக்கூடம் என்பது புத்தகங்களை படிக்கச் செய்கிற இடம் மட்டுமல்ல. அது கற்பதற்கான சூழலை உருவாக்கித் தரும் இடம். அனைவரையும் ஒன்றாய் அமரச் செய்து, அனைவருக்கும் ஒரே மாதிரியாக கற்றுத் தரும் இடம். அது சக நண்பர்களோடு அமர்ந்து கல்வியை கற்றுக் கொள்ளும் ஒரு சரணாலயத்தைப் போன்றது. விளையாட்டு, குறும்புகள், கேள்விகள், பழகுதல் இவை அனைத்தும் சேர்ந்த வடிவம் தான் கல்வி. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான நேரடி உறவையும் அது வளர்க்கிறது.
இவை இல்லாமல் ஒரு ஒளித்திரையின் வழியே மாணவர்களுக்கு அறிவைப் புகட்டிவிட முடியும் என சொல்வது தவறானது. கல்விக் கூடங்கள் புகட்டும் அறிவினையும், அனுபவத்தினையும் கணினித் திரைகள் ஒரு போதும் புகட்டிவிட முடியாது. கல்விக்கூடங்கள் பாடங்களை கற்றுத் தருவதோடு நில்லாமல் சமூகத்திற்கு ஒரு சமூக மனிதனை உருவாக்கித் தரும் பணியையும் செய்கின்றன. பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்குமான மனோவலிமையையும் வகுப்பறைகள் மாணவர்களுக்கு உருவாக்குகின்றன.
வகுப்பறைகளில் பட்டாம்பூச்சிகளாய் வலம்வந்த மாணவர்கள் சிறகொடிந்த பறவைகளாய் தங்களது சுயத்தை இழந்து தனித்து விடப்பட்டதாய் உணர்வர். இந்த இணையவழி கற்றல் என்பது ஆசிரியர்களின் பணியின், முக்கியத்துவத்தையும் கூட குறைத்திருக்கிறது.
UGC அமைப்பின் தலைவர் சமீபத்தில் அளித்திருக்கிற ஒரு பேட்டியில், “இந்த கொரோனா நேரத்திலும் சரி, இந்த பேரிடர் முழுதும் முடிந்த காலத்தின் பின்பும் கூட இணைய வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவில் இருக்கிறோம். நாட்டில் கல்வி சேர்க்கை விகிதத்தினை (Gross Enrollment Ratio) அதிகப்படுத்த இது உதவும்” என்று தெர்வித்திருக்கிறார்.
இதன் மூலம் இந்த இணைய வழிக் கல்வி என்பதை தற்காலிக நடவடிக்கையாக மட்டுமின்றி, ஒரு நிரந்தர தொடர் நடவடிக்கையாகவும் மாற்ற அரசு முயற்சித்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது.
இணைய வழிக் கல்வி என்பது உண்மையிலேயே மாணவர்களுக்கு அறிவைப் புகட்டும் செயல்முறையில் சிறப்பாக செயல்படுகிறதா என்று எந்த சமூக-பொருளாதார ஆய்வும் மேற்கொள்ளப்படாமல், இன்று அவசரகதியில் நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணைய வழிக் கல்வி நடப்பதைக் காரணமாகக் காட்டி, இந்த பேரிடர் காலத்திலும் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்துமாறு கேட்டு நிர்பந்தித்து வருவதும் நடக்கிறது.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
தினந்தோறும் 8 மணி நேரம் இணையவழி கற்றல் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் நீளும் இத்தகைய இணையவழிக் கல்வி கணினி அல்லது கைபேசி வழியே நீள்வதால் ஒளிர்திரைக்கு மாணவர்கள் தங்களை அறியாமலேயே அடிமையாகின்றனர். ஒளி உமிழும் திரைகளை அதிகம் உற்று நோக்குவதால் மாணவர்களின் பார்வைத் திறனிலும் இது குறைபாட்டை ஏற்படுத்துகிறது. அதிக நேரம் இதில் செலவிடுவதால் கவனக் குறைபாடு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் வரும் வாய்ப்பிருக்கிறது.
பெற்றோர்களின் உளவியல் சிக்கல்கள்
நாட்டின் பெரும்பான்மை குடும்பங்கள் இந்த இணையவழிக் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வசதியற்றவர்களாகவே அவர்களின் வாழ்க்கைத் தரம் வைத்திருக்கிறது. இத்தகைய வாழ்வாதாரத்தைக் கொண்டவர்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை தருவதற்கு இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வசதியற்றவர்களாய் உணர்வது அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.
பிள்ளைகளுக்கு தங்கள் நிலையை மற்ற மாணவர்களோடு ஒப்பிடும் போக்கு பல விபரீதங்களுக்கு வித்திடும். இந்த நேரத்தில் கேரளாவில் கல்வி கற்பதற்கான தொலைக்காட்சி வீட்டில் இல்லை என்று தற்கொலை செய்துகொண்ட மாணவியின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொழில்நுட்பங்களை கற்றுத் தெளிந்தவர்களாக இல்லை என்று செயற்கையான குறைபாடும் இனி காண்பிக்கப் படக் கூடும். ஐம்பது வயதைக் கடந்த ஆசிரியர்கள் அனைவரும் பவர்பாய்ண்ட் எனப்படும் கணினி நுட்பத்தில் தடுமாறுவதை பார்க்க முடியும். அது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது இனி அறிவுக் குறைபாடாகத் தான் பார்க்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இன்னும் இணைய வசதி என்பது சாத்தியப்படாத இந்த நேரத்தில் இந்தவிதமான கல்வியை திணிப்பது மாணவர்களை மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரையும் உளவியலாக சிதைக்கக் கூடும்.
குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே சொந்தமானதல்ல கல்வி எனும் செல்வம். அனைவருக்கும் கல்வி சீராக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். தனது மாபெரும் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்ட நேரத்தில் அனிதா நீதிமன்ற படிக்கட்டுகளின் முன்பு நின்று சொல்லியது, “எங்களைப் போன்றோருக்கு எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். கிடைக்கக் கூடிய சிறு வாய்ப்பினையும் இந்த இணைய வழிக் கல்வி தடுக்கிறது.
நவீன துரோணாச்சாரியார்கள் இணையத்தின் வழி வருகிறார்கள். ஏகலைவன்களை இனியும் விரல்களை இழக்கவிடக் கூடாது.
கல்வி அனைவருக்குமானது.
நிழல் நிஜமாகாது.