ருவாண்டா இனப்படுகொலை

‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!

பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மே 27 வியாழக்கிழமை அன்று நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார். 1994-ம் ஆண்டில் நடந்த ருவாண்டா இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் (8,00,000) டுட்சி இனமக்களும், மிதவாத ஹூட்டு மக்களும் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

கிகாலியில் ருவாண்டா இனப்படுகொலை நினைவிடத்தில் ருவாண்டா நாட்டின் ஜனாதிபதி பால் ககாமேவுடன் பேசிய மக்ரோன், “நான் இங்கு பணிவுடனும். மரியாதையுடனும் நிற்கிறேன், எங்கள் மீதுள்ள பொறுப்புகளின் மீதான எதிர்பார்ப்பை நான் உணர்கிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ருவாண்டாவின் வரலாறு

ருவாண்டா அமைவிடம்

‘பெல்ஜியம்’ (Belgium) நாடு ருவாண்டாவை கைப்பற்றி அங்கு ‘டுட்சி’ இனத்தவரைக் கொண்டு அரசாட்சியை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ருவாண்டா மக்களில் 85% சதவிகிதம் பேர் ‘ஹூட்டு’ (Hutu) இனமக்கள் ஆவர். ஆனால் ருவாண்டா நாட்டில் வாழும் சிறுபான்மையினரான ‘டுட்சி’ (Tutsi) இனமக்கள்தான் நீண்ட காலமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 1959-ம் ஆண்டில் ‘ஹூட்டு’ மக்கள் பெல்ஜியம் நாடு உருவாகியிருந்த ‘டுட்சி’ இனத்தின் அரசாட்சியை கிளர்ச்சிகளால் தூக்கியெறிந்தனர். இதன்பின் ‘டுட்ஸி’ அரசாட்சிக்குப் பதிலாக குடியரசு அரசாங்கமாக மாறியது. பின் 1962-ம் ஆண்டில் ருவாண்டா பெல்ஜியத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக மாறியது. இந்த கிளர்ச்சிகளின்போது அப்போது பல்லாயிரக்கணக்கான டுட்சி இனத்தவர் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடினர். இதன் பின்பு ருவாண்டாவிற்கு ஹூட்டு இனத்தின் புரட்சியாளரான ‘கிராகோயர் கெயிபாண்டா’ (Grégoire Kayibanda) முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக 1962 முதல் 1973 வரை பதவியிலிருந்தார். விடுதலை பெற்ற ருவாண்டாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை உருவாகியிருந்தது. முதல் அதிபரான ‘கிராகோயர் கெயிபாண்டா’ 1973 ஆம் ஆண்டில் அவரது பாதுகாப்பு மந்திரி ‘ஜுவனல் ஹபரிமானாவா’ல் (Juvénal Habyarimana) உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தில் பதவியிலிருந்து விலகினார்.

இவருக்கு பின் அதிபரான ‘ஜுவனல் ஹபரிமானாவா’ முதல் அதிபரை போலவே ‘ஹுட்டு’ இனம் சார்பான கொள்கைகளை பின்பற்றினார். ஆனால் இவர் சர்வாதிகாரியாக செயல்பட்டார். இவரின் ஆட்சிக்காலத்தில் நடந்த தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றன. இதனால் 1978 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற தேர்தலில் 98.99% சதவிகித வாக்குகளும்,1983 டிசம்பர் 19 அன்று நடைபெற்ற தேர்தலில் 99.97% சதவிகித வாக்குகளும், 1988 டிசம்பர் 19 அன்று நடைபெற்ற தேர்தலில் 99.98% சதவிகித வாக்குகளும் அவரது கட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சியின் போது ​​ருவாண்டா ஒரு சர்வாதிகார, ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெறும் நாடக மாறியது. அதில் அவரது கட்சி செயல்பாட்டாளர்கள் அரசியல்நிகழ்வுகளில் அதிபரை புகழ்ந்து பாடுவதற்கும் நடனமாடுவதற்கும் வலுக்கட்டாயமாக மக்களை ஈடுபடுத்தினார்.

ருவாண்டா இனப்படுகொலை

அகதி முகாம்களில் டுட்சி இன மக்கள்

அண்டை நாடுகளுக்கு தப்பிச்சென்ற ‘டுட்சி’ இனத்தவர் “ருவாண்டா தேசபக்தி முன்னணி’ (Rwandan Patriotic Front -RPF) என்ற கிளர்ச்சிக் குழுவை உருவாக்கினர். இந்த கிளர்ச்சி குழு 1990ம் ஆண்டிலிருந்து ருவாண்டாவிற்குள் ஊடுருவி உள்நாட்டு மோதல்களை தொடங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடுமையான உள்நாட்டு மோதல்களால் ருவாண்டா நாடு மட்டுமல்லாமல் அருகாமை நாடுகளும் பாதிக்கப்பட்டன.

இதனால் இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ‘ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பும்’ (Organisation of African Unity) மற்றும் ‘ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் உள்ள மாநிலத் தலைவர்களும்’ (Heads of state in the African Great Lakes region) இணைந்து அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தைகள் 1992 ஜூலை 12 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 4, 1993 அன்று முடிவடைந்தன. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ,1993ம் ஆண்டில் அண்டை நாடான தன்சானியாவின் முயற்சியால் அருஷா நகரில் (Arusha, Tanzania) ருவாண்டாவின் அரசாங்கத்திற்கும், ருவாண்டா தேசபக்தி முன்னணிகும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ‘அருஷா அமைதி ஒப்பந்தம்’ (The Arusha Accords) அல்லது ‘அருஷா பேச்சுவார்த்தைகள்’ என்று அழைக்கப்படுகிறது,

ருவாண்டா இனப்படுகொலை நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள கொல்லப்பட்ட மக்களின் எலும்புகள்

இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ருவாண்டாவில் நடந்து வந்த மோதல்கள் குறைந்தனவே தவிர முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை. அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்தும் அண்டை நாடுகளான ருவாண்டா மற்றும் புருண்டியில் நீடித்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ஏப்ரல் 6, 1994 அன்று தான்சானியாவின் பிரதமர் ‘எம்வினி’ (Ali Hassan Mwinyi) தான்சானிய நகரான ‘டார் எஸ் சலாம்’ (Dar es Salaam) நகரில் ஒரு பிராந்திய உச்சி மாநாட்டை கூட்டினார். இந்த மாநாடு ருவாண்டா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர வடிவமைக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையான ‘அருஷா உடன்படிக்கை’களை அமல்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் அமைத்தி ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறுத்தியதற்காக மாநாட்டின் பிரதிநிதிகள் ருவாண்டாவின் அதிபரான ‘ஜுவனல் ஹபரிமானா’வை ( Rwandan President Juvénal Habyarimana) கண்டித்தனர்.

இந்த மாநாட்டில் ருவாண்டாவின் அண்டை நாடான புருண்டியின் பிரதமர் ‘தார்யாமிரா’வும் (Cyprien Ntaryamira) கலந்துகொண்டார். மாநாடு முடிந்த அன்றே (ஏப்ரல் 6 1994) இரவு தலைவர்கள் அனைவரும் நாடு திரும்பும்போது ருவாண்டாவின் அதிபர்’ ஜுவனல் ஹபரிமானா’விடம் புருண்டியின் பிரதமர் ‘தார்யாமிரா’ ருவாண்டன் தலைநகர் கிகாலியில் அவரது மனைவி இருப்பதாகவும் அவரை அழைத்துக்கொண்டு புருண்டி செல்லவிருப்பதால் தானும் ‘கிகாலி’ வரை அவருடன் வரவிரும்புவதாக தெரிவித்தார். இதை ருவாண்டாவின் பிரதமர் ஒப்புக்கொண்டு அவரது பால்கன் 50 ஜெட் விமானத்தில் (Rwandan Dassault Falcon 50 presidential jet) மேலும் இரு புருண்டி நாட்டின் அமைச்சர்களுடன் ருவாண்டா தலைநகர் கிகாலிக்கு விமானத்தில் புறப்பட்டனர். இதை குறிப்பிடும் சில அரசியல் ஆய்வாளர்கள் ருவாண்டாவின் அதிபர் ஹபரியமனா தனக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சியதால் தனது விமானத்தில் மற்றொரு நாட்டின் தலைவர் இருப்பது தாக்குதல்களைத் தடுக்கும் என்று நினைத்ததாகவும் யூகித்துள்ளனர். விமானம் கிகாலி சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ​​இரவு 8:23 மணியளவில், இரண்டு ஏவுகணைகளால் விமானம் வீழ்த்தப்பட்டது . இதில் விமானத்தில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர்.

இந்த விமான விபத்து ருவாண்டாவில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. ‘ஹுட்டு’ இனவாதிகள் ‘டுட்சி’ இனத்தவரின் “ருவாண்டா தேசபக்தி முன்னணி’ (Rwandan Patriotic Front -RPF) மீது குற்றம் சாட்டினர். மேலும் விமான விபத்து நடந்த அடுத்த நாளான ஏப்ரல் 7ம் தேதியே உடனடியாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைக்கான பிரச்சாரங்களை தொடங்கினர். ஆனால் ‘டுட்சி’ இனத்தவரின் ருவாண்டா தேசபக்தி முன்னணி உருவாகவிருக்கும் மோதல்களுக்கு ஒரு காரணத்தை உருவாக்குவதற்காகவே விமானம் ‘ஹூட்டு’ இனத்தவராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியது .

இனப்படுகொலை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கும் மக்கள்

நுணுக்கமான, தெளிவான திட்டமிடலுடன் இந்த இனப்படுகொலை நடைபெற்றது. ‘ஹூட்டு’ இன போராளிகளுக்கு ‘ஹூட்டு’ அரசின் எதிரியாக பார்க்கப்பட்ட ‘டுட்சி’ இனத்தவரின் குடும்பங்களின் பட்டியல் வழங்கப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்கள் உள்ளூர் போராளி குழுக்களுக்கு வழங்கப்பட்டன. உள்ளூர் குழுக்களுக்கு பட்டியலின் இலக்குகளை எங்கு, எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியும். அந்த பட்டியலில் இருப்பவர்கள் குடும்பத்துடனும், அவர்களது நெருங்கிய தொடர்பில் இருக்கும் அனைவருமே கொல்லப்பட வேண்டியவர்களாக ‘ஹூட்டு’ போராளிகளால் கருதப்பட்டது.

ருவாண்டாவின் சமூகங்கள் எப்போதுமே இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சமூகங்களாகவே இருந்து வந்தன. அதன் அதிகாரங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அரசாங்கத்தின் மேல்மட்டம் வரை ஒரு பிரமிடு போல அமைப்பைக் கொண்டிருந்தது. அப்போதைய ‘ஹூட்டு’ இனத்தின் ஆளும் கட்சியான ‘எம்.ஆர்.என்.டி’, ‘இன்டெர்ஹாம்வே’ என்ற இளைஞர் பிரிவைக் கொண்டிருந்தது. இந்த பிரிவின் இளைஞர்கள் இந்த படுகொலையில் போராளிகளாக மாறினார்.

‘ஹூட்டு’ இனத்தவரின் போராளி குழுவான ‘இன்டெர்ஹாம்வே’ (Interahamwe) போராளிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று டுட்ஸிகளை வேட்டையாடினர். அதேநேரத்தில் போராளி குழுவில் அதுவரை சேராத ‘ஹூட்டு’ மக்களையும் பிரச்சாரத்தில் சேரச் சொன்னார்கள். ‘ஹூட்டு’ இனத்தவர் தங்களின் பக்கத்து வீட்டுக்காரர் டுட்ஸியாக இருந்தால் அவர்களைக் கொன்றனர். சில குடும்பங்களில் டுட்சி பெண்ணை மணந்த கணவர்களால் அவர்களின் டுட்சி மனைவியர் கொல்லப்பட்டனர். கணவர்கள் தங்கள் மனைவிகளை கொல்ல மறுத்தால் அவரையும் கொள்வதாக மிரட்டியதால் ஹூட்டு இன ஆண்களை மணந்த டுட்சி பெண்கள் ஏராளமாக கொல்லப்பட்டனர்.

மக்களுக்கு வழங்கபட்ட அடையாள அட்டைகளில் அவர்களின் இனக்குழு பெயர் இருந்ததால் டுட்சி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் தெருக்கள் அடையாளம் காணப்பட்டு தெருக்களில் யாரும் உள்நுழைய வண்ணம் தடைகளை ஏற்படுத்தி டுட்சி மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான டுட்ஸி பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டனர். ஒரு நாளைக்கு 8,000 பேர் வரை கொல்லப்பட்டனர். கொலைகளை எதிர்த்த மிதவாத ஹூட்டு இனத்தவரும் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். கொலைகளை ஒருங்கிணைக்க போராளிகள் ஒரு வானொலி நிலையத்தைப் பயன்படுத்தினர். கொல்லப்பட வேண்டிய முக்கிய நபர்களின் பெயர்கள் வானொலியில் வாசிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ருவாண்டாவின் நயபரோங்கோ (Nyabarongo River) ஆற்றில் வீசப்பட்டன.

டுட்சி மக்கள் தேடித்தேடி வேட்டையாடப்பட்டதால் படுகொலை செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக ஹூட்டுகள் வசிக்கிறார்கள் என குறிப்பிடும் வகையில் ஹூட்டு எழுதப்பட்டுள்ள வீடுகள்

ஹுட்டு அரசாங்கத்தை ஆதரித்த பிரான்ஸ் இந்த இனப்படுகொலையைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. டுட்சி மக்கள் தஞ்சம் புகுந்த தேவாலயங்களை அடையாளம் கண்டும் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ருவாண்டாவின் கத்தோலிக்க திருச்சபை ஆளும் ஹுட்டு அரசாங்கத்திடம் சில ஆழமான உறவுகளைக் கொண்டிருந்தது. மேலும் ருவாண்டாவின் கத்தோலிக்க பேராயர் ‘வின்சென்ட் சென்ஜியுவா’ (Archbishop Vincent Nsengiyumva) ஆளும் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினராக வேறு இருந்தார். பல பாதிரியார்களும் இந்த படுகொலைகளில் ஈடுபட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான டுட்சி இன இளைஞர் ஒருவர்

100 நாள்கள் தொடர்ந்த இந்த படுகொலைகளின் முடிவில் சுமார் 8,00,000 எட்டு லட்சம் டுட்ஸிகள் மற்றும் மிதவாத ஹூட்டு மக்களும் கொல்லப்பட்டனர். வன்முறை மூன்று மாதங்கள் தொடர்ந்தது.2017 இல் ருவாண்டாவிற்கு பயணம் செய்த போப் பிரான்சிஸ் (Pope Francis) நடந்த இனப்படுகொலைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களின் பங்கிற்கு மன்னிப்பு கேட்டார்.

ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸின் பங்கு

அகதி முகாம்களில் டுட்சி இன குழந்தைகள்

இனப்படுகொலையின் போது, ​​அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவற்றின் செயலற்ற தன்மைக்காக குற்றம் சாட்டப்பட்டன. அவர்களின் செயலற்ற தன்மை இனப்படுகொலைக்கு உதவியது. அப்போது பிரான்ஸின் அதிபராக இருந்த ‘பிரான்சுவா மித்திரோண்ட்’ (François Mitterrand) தலைமையிலான பிரான்ஸ் அரசு ‘டுட்சி’ மக்களுக்கெதிரான படுகொலைகளுக்கு உத்தரவிட்ட ‘ஹுட்டு’ தலைமையிலான ருவாண்டா அரசாங்கத்தின் தீவிர கூட்டாளியாக செயல்பட்டது.

ஐ.நா பொதுச்செயலாளரின் தனிப்பட்ட ஒப்புதலுக்குப் பிறகு, ஜூன் 22,1994ல் தென்மேற்கு ருவாண்டாவில் ‘இரத்தினக்கல் நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்ட ‘ஆபரேஷன் டர்க்கைஸ்’ (Operation Turquoise) என்று அழைக்கப்படும் ஐ.நாவின் ஆதரவு இராணுவப் படையை பிரான்ஸ் நிலை நிறுத்தியது. “பலதரப்பு” படை என்று அழைக்கப்பட்டாலும் 2,500 வீரர்களை கொண்டிருந்த அந்த படையில் 32 பேர் மட்டுமே செனகல் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த படை உணவு, நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை விநியோகிப்பது மற்றும் அகதிகள் வெளியேறும் விதமாக பாதுகாப்பான பாதையை அமைக்கும் நோக்கம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அகதிகள் பிரதானமாக மேற்கு நோக்கி தப்பித்து கிழக்கு நைஜர் நாட்டிற்குள் செல்ல முடிந்தது.

ஆனால் இந்த ராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட ‘ஹூட்டு’ இனத்தின் சில தலைவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டப்பட்டது. பிரான்ஸின் இந்த நடவடிக்கையை ‘டுட்சி’ இனத்தவரின் ருவாண்டா தேசபக்தி முன்னணியான RPF எதிர்த்தது.

ருவாண்டாவிலும் ஆபிரிக்காவின் பிற நாடுகளின் தலைவர்களும் பிரான்ஸின் இந்த நடவடிக்கைகளால் கோபமடைந்ததால் இனப்படுகொலைக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் குலைந்தன. பெல்ஜிய ஆட்சியில் இருந்தே ருவாண்டாவின் அலுவலகமொழியாக பிரெஞ்சு மொழி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலைக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுடனான உறவிலிருந்து விலகி அதை அமெரிக்கா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நெருக்கமாக ருவாண்டா பயணித்தது. ருவாண்டா ஒரு கட்டத்தில் பிரான்சுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டது. இதன் விளைவாக பிரெஞ்சு மொழி பேசுபவர்களின் சதவீதம் குறைந்து ஆங்கில மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

மே 2019 ல் பிரான்ஸ் அதிபர் ‘மக்ரோன்’ ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் தனது நாட்டின் பங்கை விசாரிக்க 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தார். இந்த குழு அதிகாரபூர்வ கோப்புகள் மற்றும் இரகசிய ஆவணங்களை ஆராய்ந்து இந்த வருடம் 2021 மார்ச் மாதத்தில் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அதில் ருவாண்டா இனப்படுகொலை நடந்தபோது பிரான்ஸ் நாட்டின் அதிபர் ‘பிரான்சுவா மித்திரோண்ட்’ ஆளப்பட்ட பிரான்ஸ் “பார்வையற்றதாக” இருந்ததற்கும் இனப்படுகொலையிலும் “கனமான மற்றும் பெரும் பொறுப்புகளை” கொண்டுள்ளது என்று கூறியது.

1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவிற்கு எதிரான கொள்கையின் “தோல்வி” குறித்து அப்போதைய பிரதமர் ‘மித்திரோண்ட்’ அவர்களை அறிக்கை குற்றம் சாட்டியது. ருவாண்டா நாடும் ஒரு தனி விசாரணையை குழுவை நியமித்தது. இந்த குழு 2021 ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் பிரான்ஸ் நாடு ருவாண்டாவின் இனப்படுகொலையை “செயல்படுத்தியது” என்று முடிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக இனப்படுகொலைகள் தொடர்பான நீதிகளில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆர்மீனியாவின் இனப்படுகொலை அமெரிக்காவினால் ‘இனப்படுகொலை’ என்று அங்கீகரிக்கப்பட்டது. நேற்று (28/05/2021) ஜெர்மனியின் படைகளால் நமீபியாவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை ஜெர்மனி முதன்முதலாக ‘இனப்படுகொலை’ என்று அழைத்து நமீபியாவிற்கு நிதியுதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் தங்களது பங்கை ஒப்புக்கொண்டு பிரான்ஸ் மன்னிப்பை கோரியுள்ளது. இவை மனித சமுதாயத்தில் நீதியின்பால் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆர்மீனியா இனப்படுகொலை மற்றும் நமீபியா இனப்படுகொலை தொடர்பாக நமது ‘மெட்ராஸ் ரிவியூ’ தளத்தில் வெளியான செய்திகளின் இணைப்பு.

நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா

ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *