அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மறைந்தார். கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் தனது 93-வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழ்நாட்டு உயர்கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றிய பேராசிரியர்.
கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்தவர். ஐ.நா அவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநராக பதவி வகித்தார். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட்டார். தமிழ்நாட்டு உயர்கல்வி அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய பேரா.ஆனந்த கிருஷ்ணன் பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தினார்.
பொறியியலுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததில் முக்கியப் பங்கு
கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது ஒற்றைச் சாளர முறைச் சேர்க்கை (Single Window System) என்பதனைக் கொண்டுவந்து பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்துவிட்டு 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர வழி செய்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அந்த வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மாணவர்களின் வாழ்வில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தியவர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள்.
மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழும், தமிழர்களும் இன்று எட்டியிருக்கிற நிலைக்கும் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். கணினியும், தகவல் தொழில்நுட்பமும் தமிழ்நாட்டுமயமான காலக்கட்டத்திலேயே தமிழும் கணினிமயமாகத் தொடங்கியுள்ளது. இன்று நாம் கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்குக் காரணமான அடிப்படை ஒழுங்கோடு கூடிய தரப்படுத்துதல் உருவாவதற்கு பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் பெரிதும் பங்களித்துள்ளார்.
இணையத் தமிழுக்கு ஆனந்த கிருஷ்ணன் ஆற்றிய பங்கு குறித்து ஆழி செந்தில்நாதன்
பேராசிரியரின் தமிழ்-இணையப் பங்களிப்பு குறித்து அவர் அருகிருந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்ற, தமிழ்–இணைய அமைப்பாக தொடங்கப்பட்ட உத்தமம் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான ’ஆழி’ செந்தில்நாதன் (தன்னாட்சித் தமிழகம்) அவர்களிடம் Madras Review சார்பாக பேசினோம். பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டினை நெறிப்படுத்த எப்படியெல்லாம் வேலை செய்தார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
”1996-ம் ஆண்டைய திமுக ஆட்சிக் காலத்தில் முனைவர் ஆனந்த கிருஷ்ணன் தமிழ்நாடு உயர்க் கல்வி ஆணையத்தில் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார். அக்காலத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப வசதியை தமிழ்நாட்டில் பரவலாக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப பணிக் குழு (IT Task force) உருவாக்கப்பட்டிருந்தது.
1997-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குப் பிறகு நாங்கள் உட்பட சிலர் குழுவினராகச் சென்று, தகவல் தொழில்நுட்ப பணிக்குழுவின் துணைத் தலைவராக இருந்த முரசொலி மாறனை சந்தித்தோம்; அவரிடம் தமிழ் மொழிக்கான கணிப்பொறி இணைய வசதிகள் உருவாக்குவது குறித்து பேசினோம்; உலகம் முழுவதிலுமுள்ள கணினிகளில் தமிழ் மொழி எழுத்துக்கள் ஒரே மாதிரியாக தெரிவதற்கான encoding தரப்படுத்துதல் தொடர்பாகப் பேசினோம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கையில் அதை நெறிப்படுத்தும் பொறுப்பை முனைவர் ஆனந்த கிருஷ்ணனிடம் கொடுத்தார்கள்.
15-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களை இணைத்தார்
பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆனந்த கிருஷ்ணன் 1998-ம் ஆண்டு சென்னையில் தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார். அவரின் முயற்சியின் காரணமாக 2000-ம் ஆண்டு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம் (INFITT- International Forum for Information Technology in Tamil) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒருங்கிணைத்தார். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தமிழ் இணைய மாநாடுகள் நடத்தினார். 15-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்த தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கணிப்பொறி, இணையப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தமிழை தரப்படுத்துவதற்கான குழுவாக மாற்றினார்.
இந்திய அரசாங்கம், மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் உலக முழுவதிலுள்ள ஒவ்வொரு மொழிக்குமான கணிப்பொறி தரவுகளைத் தரப்படுத்தும் Unicode Consortium ஆகியவற்றின் அதிகாரிகளை சந்தித்து கணிப்பொறியில் தமிழை தரப்படுத்துவதற்காக (Standardization) அக்குழு வேலை செய்தது.
10, 15 நாடுகளிலுள்ள தமிழர்களை ஒரு குறிப்பிட்ட வேலைக்காக இணைப்பது அவ்வளவு எளிய வேலை கிடையாது. தனிப்பட்ட முறையில் போட்டிகள் நிறைந்த, ஒருங்கிணைய இயலாத, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாத தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒருங்கமைவு முனைவர் ஆனந்த கிருஷ்ணன் என்ற ஜாம்பவான் மூலமே சாத்தியமானது. வேறொருவரால் இது சாத்தியப்பட்டிருக்குமா, சாத்தியப்படுத்தியிருப்பார்களா என்பது கேள்விக் குறியே! ஆகையால் வெளிநாட்டு வாழ் தமிழர்களால் ஆனந்த கிருஷ்ணன் ஒரு நாயகனாகவே பார்க்கப்பட்டார்.
ஆகையால் பேராசிரியர் ஒன்றை சொல்கிறாரென்றால் அதற்கு மறுபேச்சே கிடையாது என நாங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவருடைய நீண்ட, நெடிய பணி அனுபவம் இருந்தது. அவர் ஐ.நா அமைப்பு உட்பட பல்வேறு நாடுகளில், பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து வந்தவர். அவருடைய நீண்ட நெடிய பணி அனுபவத்தையெல்லாம தமிழுக்காக (தமிழ் கணினிமயமாவதற்கு) செலவிட்டார்.
இந்திய மொழிகள் கணினிமயமானதற்கு பின்னிருந்த சிந்தனை அவருடையது
அவர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு தமிழை கணினிமயமாக்கிய காலக்கட்டத்தில் கணிப்பொறி, இணைய அரங்கில் இந்திய மொழிகள் தமிழ் மொழியளவிற்கு வளர்ச்சியடையவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை கணினிமயமாக்க அவர் எடுத்த முயற்சிகள் தான், பின்னர் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மொழிகளை கணினிமயமாக்குவதற்கு உதவியது; தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய மொழிகளுக்கான பிரிவு உருவாக்கப்பட்டது. இந்திய மொழிகள் இன்று கணினிமயமாகி இருப்பதற்கு பின்னிருந்த சிந்தனை யாருடைய சிந்தனையென்றால் முனைவர் ஆனந்த கிருஷ்ணனுடைய சிந்தனை தான்! அவருடைய வழிகாட்டுதல் தான் இந்தியாவினுடைய கணினி மொழிக் கொள்கையையே மாற்றியது.
இணையத்தில், கணிப்பொறியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்குக் காரணமான பல முன்னோடிகளில் மிக முக்கியமானவர் ஆனந்த கிருஷ்ணன். இன்று வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தமிழைப் பயன்படுத்துவதற்காக நாம் நன்றியோடு நினைவுகூர வேண்டியவராக ஆனந்த கிருஷ்ணன் இருக்கிறார்” என ஆழி செந்தில்நாதன் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கணினி காலத்திலும் தமிழும், சமூக நீதியும் தமிழ்ச் சமூகத்தின் இரு கண்களாய் விளங்கியதற்கான அடையாளமாய் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் நம்மோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.