உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

   “ஏற்க முடியாத வகையில் உச்ச நீதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிரதிநித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” – ராம்நாத் கோவிந்த, இந்திய குடியரசுத் தலைவர் (2017ம் ஆண்டு தேசிய சட்ட நாள் மாநாட்டில் பேசியது)

மேற்குறிப்பிட்ட மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர்,”17000 நீதிபதி இடங்களில் 4700, அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

வேறொரு சமயத்தில் பெண்கள் நீதிபதியாக பங்கேற்பது குறித்து கருத்துக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான SA பாப்தே, “பெண்கள் வீட்டு பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தால் உயர் மட்ட நீதிமன்ற பொறுப்புகளை ஏற்பதில்லை” என கூறினார்.

இந்திய நீதியமைப்பு பெண்களையும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களையும், சிறுபான்மையினரையும் போதிய அளவு பிரிநிதித்துவப்படுத்துவதில்லை. நீதியமைப்பில் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகிறது.  இந்திய நீதியமைப்பு முறை அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றுவதை விட, மேற்கூறியவர்களை கீழானவர்களாக கருதி விலக்கி வைக்கும் மணுநீதி சட்ட அமைப்பையே கடைப்பிடித்து வந்திருப்பதை நீதிபதிகள் நியமனம் வழி அறியலாம்.  

இந்திய ஒன்றிய நீதியமைப்பின் உச்சபட்ச நீதி அமைப்பாக இருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் நியமனத்தில் இருக்கின்ற உயர்சாதியினரின் ஆதிக்கம் இதை நமக்கு பட்டவர்த்தனமாக காட்டக்கூடியதாக உள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சாசனம் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமத்திற்காக முன்வைக்கும் தகுதிகளானவை,

*அரசியலமைப்பு சாசனம் சரத்து 124 இன் கீழ் 65 வயது பூர்த்தியாகாத எந்த ஒரு இந்திய குடிமகனும்

*குறைந்தபட்சம் ஐந்து வருட காலம் உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வகித்த அல்லது

*பத்து வருட காலம் வழக்கறிஞராக பணியை மேற்கொண்டவர் அல்லது

*அரசியலமைப்பு சாசனம் சரத்து 124 இன் கீழ் 65 வயது பூர்த்தியாகாத எந்த ஒரு இந்திய குடிமகனும்

*குறைந்தபட்சம் ஐந்து வருட காலம் உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வகித்த அல்லது

*குடியரசுத் தலைவர் பார்வையில் தேறிய நடுவர் ஒருவர் 

மேற்கூறிய தகுதியுடையோர் அனைவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இதைத் தவிர  உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு சட்டத்தில் குறிப்பிடப்படாத 3 வியப்பிற்குறிய வழிகளிலும் நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

*1947 ஆண்டு வரை ஐசிஎஸ் (ICS) அதிகாரிகளாக பணிபுரிந்த சுமார் ஆறு நபர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ் கே தாஸ், KN வன்சோ, KC தாஸ் குப்தா, R. தயால், V. ராமசாமி, V பார்கவா, AK முகர்ஜி ஆகிய முன்னாள் ஐசிஎஸ் அதிகாரிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் தனியாக சட்ட பயிற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இதில் KC தாஸ் குப்தா என்கிற முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி சட்டம் தொடர்பான பட்டப்படிப்பு எதுவும் மேற் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் KN வன்சோ உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

*ஏறத்தாழ ஒன்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்றைய இந்தியாவில் பிறக்காதவர்கள் ஆவார்கள். JL கபூர், SM சிக்ரி, ID துவா ஆகியோர் இன்றைய பாகிஸ்தானில் பிறந்தவர்கள். ஜஸ்வந்த் சிங் இன்றைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவர். AN குரோவர், AP சென், MP தாக்கர் ஆகியோர் பர்மாவிலும் AK சர்க்கார், KC தாஸ் குப்தா ஆகியோர் இன்றைய வங்கதேசத்திலும் பிறந்தவர்கள் ஆவார்கள்.

அரசியல் சாசனத்தில் மற்றொரு பிரிவை பயன்படுத்தி சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் ஓய்வு பெற்ற  பின்பும் நிதிபதி பணிகளை தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சாசனம் நிர்ணயித்துள்ள மேற்குறிப்பிட்ட அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதியுள்ள பலர் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்ட அம்சங்களை தாண்டி சில குறிப்பிடப்படாத  அம்சங்களையும் கைக்கொண்டு வருகிறார்கள். அத்தகைய அம்சங்கள் என்ன என்பதை சற்று பார்ப்போம்.

இதை பார்ப்பதற்கு முன் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படாத தகுதிகளை இரண்டாக பிரித்து ஒன்று ‘அறியப்பட்ட’ காரணங்கள் இரண்டாவதாக ‘அறியப்பட்ட’ ஆனால் ‘மறைக்கப்பட்ட  காரணங்கள்’ என இருவகையாக காண்போம்.

அறியப்பட்ட  காரணிகளாக வயது, பணிமூப்பு, தகுதியின் ஒருமைப்பாடு மற்றும் நல்ல ஆரோக்கியம் என கொள்ளலாம். அறியப்பட்ட ஆனால் மறைக்கப்பட்ட காரணிகளாக ஜாதி, வகுப்பு, குடும்பம், நீதித்துறை வம்சா வழியின் பிரதிநிதித்துவம், பின்புலம், அரசியல் தொடர்பு, மதம், பிராந்திய பிரதிநிதித்துவம் ஆகியவை அடங்கும். இந்த அறியப்பட்ட ஆனால் மறைக்கப்பட்ட காரணிகளில் முக்கியமாக இருக்கும் சாதி மற்றும் மதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என பார்ப்போம்.

சாதி – பார்ப்பனிய மேலாதிக்கம்

இன்றைய தேதி வரை 247 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கபட்டுள்ளனர். ஆரம்பத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 8ல் இருந்து தற்போது 34 ஆக உயர்த்தபட்டுள்ளது. 

பாரம்பரியமாகவே உச்ச நீதிமன்ற நீதிபதி பணிகளில் பார்ப்பனர்களே அதிகபட்ச இடங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்ட காலத்தில் HJ கனியா உச்ச நீதிமன்ற தலைமை நீதபதியாக பொறுப்பேற்றார். இவருடன் MP சாஸ்திரி, S பசல் அலி, MC மகாஜன், BK முகர்ஜி, SR தாஸ் ஆகியோர் நீதிபதிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.

உச்சநீதிமன்ற நீதிபதி குழுவில் எப்பொழுதும் ஒரு இடம் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது;  அந்த இடத்தை பசல் அலி முதலில் நிரப்பத் துவங்கினார். முதல் உச்சநீதிமன்ற நீதிபதி குழுவில் பசல் அலி தவிர மற்ற அனைவரும் சாதி இந்துக்களாகவே நிரப்பப்பட்டு இருந்தனர். முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஆறு நபர்களில் இருவர்(MP சாஸ்திரி மற்றும் BK முகர்ஜி) பார்ப்பனர்கள் ஆவர். அதாவது பார்ப்பனர்கள் மட்டும் 33.33% இடத்தை ஆக்கிரமித்தனர். இதற்குப் பின்னர் சந்திரசேகர ஐய்யர் மூன்றாவது பார்ப்பன உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்கு பின்னர் நீதிபதிகளின்  எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.  இதில் மூவர் அதாவது 42.85 % பார்ப்பனர்களாக இடம் பிடித்தனர்.

மேற்கூறிய வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் சாசனத்தில் எங்கேயும் குறிப்பிடப்படாத பார்ப்பனர்களுக்கான இந்த சிறப்பு ஒதுக்கீடு முறை இன்றைய தேதி வரை பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

இன்று வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மொத்தம் 47  நீதிபதிகளில் 14 பேர் (சாஸ்திரி, BK முகர்ஜி, PB கஜேந்திராகாத்கர், KN வஞ்சு, AN ரே, YV சந்திரசூட், RS பதக், ES வெங்கட்ராமையா, சப்யாசசி முகர்ஜி, ரங்கநாத் மிஸ்ரா, MN வெங்கடசாலிய, தீபக் மிஸ்ரா, SA பர்த்டே) பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்களே. இதனால் தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ள பார்ப்பன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பங்கேற்பு சதவிதம் சுமார் 27.6 சதவீதம் ஆகும்.

நீதிபதி கணியா இறந்த சமயத்தில் மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பதவி விலக போவதாக மிரட்டினர். பின்னர் நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு வெங்கட்ராம ஐயர் என்பவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து பார்ப்பனர்களின் ஒதுக்கீட்டு முறையை தகர்ந்து போகாமல் காப்பாற்றினார். 

1950-1970 வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்த்தப்பட்டது. 

இக்காலகட்டத்தில் பெரிய அளவிலான பார்ப்பன நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புகளில்  நியமிக்கப்பட்டனர் (B ஜகன்னதாதஸ்,TL வெங்கட்ராம ஐயர், PB கஜேந்திர கட்கர், KN வஞ்சு, N ராஜகோபால ஐயங்கார், JR முதொல்கர், V ராமசாமி, JM ஷீலட், V பார்கவா, CA வைத்தியலிங்கம், AN ரே)

1971-1989 காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை இன்னும்  விரிவடைந்தது. DG பலேகர், SN திவ்வெடி, AK முகர்ஜியா, YV சந்திரசூட், VR கிருஷ்ண அய்யர், PK கோஸ்சுவாமி, VD துள்சாபுர்கர், DA தேசாய், RS பதக், ES வெங்கட்ராமையா, RB மிஸ்ரா, சப்யாசசி முகர்ஜி, RN மிஸ்ரா, GL ஓசா, LM ஷர்மா, MN வெங்கடசலியா,              S ரங்கநாதன், DN ஓஜா என பார்ப்பனர்களின் எண்ணிக்கை விரிவடைந்தது. இதைத் தவிர பிற உயர் சாதியை சேர்ந்தவர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் பார்ப்பன சமூகம் பெற்றதைப் போன்று வேறெந்த குறிப்பிட்ட ஒரே சமூகமும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இந்தளவிற்கான அதிகளவு பிரதிநிதித்துவம்  பெறவில்ல. 

1998ல் 17 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 நபர்கள் பார்ப்பனர்கள் (RS பதாக்,                 ES வெங்கட்ராமையா, S முகர்ஜி, RN மிஸ்ரா, GL ஓஸா, LM ஷர்மா, MNR வெங்கடசலியா, S ரங்கநாதன், DN ஓஜா) ஆவார்கள். இக்கால கட்டத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பார்ப்பன சமூகத்தின் பிரதிநித்துவம் 50 சதவீதமாக இருந்தது.

இது போன்று பல்வேறு காலகட்டத்தில் பார்ப்பனர்களின் பிரதிநிதித்துவம் உச்சநீதிமன்றத்தில் அதிகளவிலே இருந்து வந்துள்ளது. பார்ப்பன நீதிபதிகள் தவிர உயர்சாதி நீதிபதிகளே மீதமிருந்த இடத்தை ஆக்கிரமித்தனர்.

இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் 1980 ஆண்டு வரை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 1980 ஆம் ஆண்டில் தான் முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த A வரதராஜன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

நீதி அரசர் வரதராஜன்

இவர் ஓய்வு பெற்ற இரு மாதங்களுக்கு பின்னர் BC ரே என்ற மற்றொரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அவ்விடத்தில் நியமிக்கப்பட்டார்.

பின்னர் 1988-1989 காலகட்டத்திற்கு பிறகு தான் பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, பட்டியலின நீதிபதிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் 1988 மற்றும் 1989 காலக்கட்டங்களில் சட்ட அமைச்சராக இருந்த சங்கரனந்த் மற்றும் P சிவசங்கர் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாக அமைந்ததே ஆகும். ஆயினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  25 நபர்கள் அடங்கிய குழுவில் 7 நபர்களாக (28%) பார்ப்பனர்களே பதவி வகித்தனர்.

இக்காலகட்டத்திற்கு பின்புதான் உச்சநீதிமன்ற நீதிபதி குழுக்களில் ஒரு பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக குழுவில் இருக்குமாறு நியமிக்கப்படத் தொடங்கினர். 

நீதிபதி பாலகிருஷ்ணன் முதல் பட்டியலின வகுப்பை சேர்ந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

 இதேபோல 1980 வரை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதிபதி கூட உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை. S ரத்தினவேல் பாண்டியன் முதல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது சுய சரிதை வெளியிட்டு விழாவில் நடுவில் இருப்பவர்

இந்திய ஒன்றியத்தில் யாரோட ஆட்சி இருந்தாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் குழுவில் 30 முதல் 40 சதவீதம் வரை பார்ப்பனர்களே ஆக்கிரமித்து இருந்தனர் என்பது இந்திய நீதியமைப்பின் பார்ப்பன சாதிய ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது. பார்ப்பனர்களுக்கு அடுத்ததாக உயர் சாதியினர் ஆக்கிரமிக்கும் இடமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இருக்கிறது.

தற்போதைய 27 நீதிபதிகளில் 5 பேர் பார்ப்பனர்கள் (UU லலித், DY சந்திரசுட், SK கவுல், இந்திரா பேனர்ஜி, V சுப்பிரமணியன்). 3 நீதிபதிகள் கயஸ்தா சாதியை சேர்ந்தவர்கள் (அசோக் பூஷன்,நவின் சின்ஹா,கிருஷ்ணா முராரி). மேலும் இதில் 5 நீதிபதிகள் (MR ஷா, ஹேமந்த் குப்தா, வினீத் சரண், அஜய் ரஸ்தோகி மற்றும் தினேஷ் மகேஸ்வரி) ஆகியோர் முன்னேறிய பனியா அல்லது வைசியா சாதியை சேர்ந்தவர்கள்.

பார்ப்பன பனியா ஆதிக்கத்தில் உச்ச நீதி மன்றம்

2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட 35 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பெண்கள், ஒரு இஸ்லாமியர், ஒரு கிருத்துவர், ஒரு பார்சி மற்றும் ஒரு பட்டியலின சமூகத்தை சார்ந்த நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர். 

ஆனால் 2004 முதல் 2014 வரை நியமிக்கபட்ட 52 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் பார்ப்பன சாதியை சார்ந்தவர்களாக இருந்தனர். இது மட்டுமின்றி ஐந்து நபர்கள் பனியா/ வைசியா சாதியை சேர்ந்தவர்களும், இருவர் தாக்கூர்/ ராஜபுத்திர சாதியை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். இக்காலகட்டத்தில் பனியா/ வைசியா சாதியை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பார்ப்பன மற்றும் உயர் சாதியினருக்கான இடமாக உச்ச நீதிமன்றம் இருப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் பார்ப்பன- உயர்சாதி போக்கே காரனம்.

இன்று வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்  நீதிபதிகள் அடங்கிய குழுவில்(collegium) ஐந்தில் மூவர் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களாவே உள்ளனர். 

இக்குழுவில் நீதிபதிகள் ஓய்வு பெற்று புது நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் பார்ப்பனர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையில் எவ்வித மாறுபாடுகளும் ஏற்படுவதில்லை. 

உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் கைப்பற்றிய இடங்களை, இந்திய ஒன்றியத்தில் இருக்கும் பார்ப்பனர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இந்திய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரிய வரும்.

அநீதியிலும் அநீதியாக தற்போது வரை பட்டியல் பழங்குடியினர்(ST) வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது இல்லை.

மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பை சேர்ந்த நீதிபதிகள் குறித்தான எந்த ஒரு தரவுகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு வேதனைக்குரிய விடயம்.

கடந்த 15 ஆண்டு காலத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து தேர்வாகி வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் பனியா/ மார்வாரி/வைசியா சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர். 

மதமும் உச்சநீதிமன்றமும்

மதத்தை அடிப்படையாக வைத்து நியமிக்கப்படும் நீதிபதிகள் குறித்தான தரவுகளை ஆராய்வோம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு நீதிமன்ற நீதிபதி குழுவில் தலா ஒரு முஸ்லிம் நீதிபதிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படுகிறது.

முதலில் அப்பதவியை  ஏற்றுக் கொண்ட பசல் அலிக்கு  பின்னர் குலாம் ஆசாத் பதவியேற்றார்.

1958 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இரண்டு முஸ்லிம்கள் (இதயத்துல்லா மற்றும் சையது  ஜாபர் இமாம்) இடம் பெற்றனர். பின்னர் 1968 ஆம் ஆண்டு இதயத்துல்லா முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இதற்கு பின் நீதிபதி பெக் இரண்டாவது முஸ்லிம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். பின்னர் 9 ஆண்டுகாலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த AM அகமதி மூன்றாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

AM அகமதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில்தான் பாத்திமா பீவி என்கிற முஸ்லிம் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின் 2012 ஆம் ஆண்டு காலத்தில் அல்தாமஸ் கபீர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

 தற்போது நீதிபதி அப்துல் நசீர் மட்டுமே ஒரே முஸ்லிம் பிரதிநிதித்துவ நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பதவி வகித்து ஓய்வுபெற்ற 219 நீதிபதிகள் மற்றும் தற்போது பதவியில் உள்ள 27 நீதிபதிகளில், இதுவரை 18 பேர் அதாவது 6.75 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை RS சர்க்காரியா, குல்திப் சிங், HS பெடி, JS கேகர் ஆகிய நான்கு நபர்கள் மட்டுமே சீக்கிய சமூகத்தை  சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களும் சீக்கிய மதத்தில் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களே. விளம்பு நிலை சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் தற்போது வரை இடம் பெறவில்லை.

DP மடூன், SH கபாடியா, பருசா, SN வைரவா, RF நரிமன் ஆகிய பார்சி மதத்தை சேர்ந்த நீதிபதிகள் தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நீதிபதிகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனர். விவியன் போஸ், KK மேத்தியு,TK தோம்மென், KT தோமஸ் விக்ரம்ஜித் சென், சிரியாக் ஜோசப் குரியன் ஜோசப், பானுமதி மற்றும் KM ஜோசப் ஆகியோர் தற்போது வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய விடயங்கள் மூலம் நாட்டின் உச்சபட்ச நீதி வழங்கப்படும் இடமாக நம்பப்படும் உச்ச நீதிமன்றத்திலேயே, பாரம்பரியமாக விளிம்புநிலை மக்கள் நிர்வாகத்தில் பெரிதாக பிரதிநிதித்துவம் பெறுவதில்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

 நீதிபதிகளை நியமிக்கும் கோலிஜியத்தின் நியமன முடிவுகள் எந்த  குறிப்பிட்ட முறையில் செயல்படுகிறது என்பதற்கான தெளிவு இல்லை. மதரீதியான நியமனங்களில் கூட உயர் வர்க்கம் மற்றும் உயர் சாதியைப் சேர்ந்த நபர்களே  நியமிக்கப்படுவது வாடிக்கையானதால்  விளிம்புநிலை சமூக பின்னணியில் இருந்து வரும் நபர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் இருப்பதில்லை.

இது தவிர அரசியல் செல்வாக்கு மற்றும் அரசியல் தொடர்புகள் மூலம் செய்யபடும் நியமனங்கள் கணிசமான அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. நீதிபதிகள் நியமனத்தில் செயல்படும் இந்த அரசியல் வலைப்பின்னல் அரசியல், அதிகார மட்டத்தில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக உள்ளது.

உதாரணமாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய போர்க் குரல் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். உச்ச நீதிமன்றத்திற்கு வரக்கூடிய வழக்குகளை அனுபவமிக்க நீதிபதிகளிடத்தில் பிரித்துக் கொடுக்காமல், உள்நோக்கத்தோடு மிக இளநிலை நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒப்படைக்கிறார் என்று ஊடகங்கள் வாயிலாக தீபக் மிஸ்ராவுக்கு எதிரான இப்பிரச்சனையை நீதிபதிகள் இந்திய மக்களிடையே அடையாளப்படுத்தினர். தீபக் மிஸ்ரா வழக்குகள் ஒப்படைக்கப்பட்டவர் அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் மிக இளநிலை நீதிபதி அருண் மிஸ்ரா. கலகக் குரல் எழுப்பிய நீதிபதிகளால் இப்பிரச்சனை பொதுவெளிக்கு வந்ததையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக பார் கவுன்சிலால் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவை அமைத்தவர் பார் கவுன்சில் தலைவர் மணன் மிஸ்ரா. இப்பிரச்சனையில் அரசு தலையிட அரசு சார்பாக நியமிக்கப்பட்டவர் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் நிரிப்பேந்திர மிஸ்ரா.  ஒரு மிஸ்ராவுக்காக பார் கவுன்சில் மட்டத்தில், பிரதமர் அலுவலக மட்டத்தில் இத்தனை மிஸ்ராக்கள் ஒன்றினைகின்றனர். மிஸ்ரா என்பவர்கள் ஒடிஸாவிலுள்ள பார்ப்பன சமூகத்தினர் ஆவர். 

குறிப்பிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னாள் உச்சமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் அண்ணன் மகன் ஆவார். ரங்கநாத் மிஸ்ராவின் தந்தை கோதாவரிஸ் மிஸ்ரா மற்றும் இரு சகோதரர்களும் ஒடிசா மற்றும் டெல்லி அரசியலில் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள் ஆவர். கோதாவரிஸ் மிஸ்ரா காலத்திய அரசியல் செல்வாக்கு நிலை தலைமுறைக் கடந்து தீபக் மிஸ்ராவின் காலத்திலும் நீடிக்கிறது.

உயர்சாதியைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள குடும்பம் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் எவ்வாறு செலுத்துகிறது என்பதற்கும், நீதியமைப்பு- அரசியல் அதிகார வலைப்பின்னலில் பார்ப்பனிய சாதி மேலாதிக்கம் எவ்விதம் செயல்படுகிறது என்பதற்கும் தீபக் மிஸ்ரா விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இதன் காரனமாக இந்திய நீதியமைப்பும், அதன் தீர்ப்புகளும் சாதிய, மத மேலாதிக்க தன்மை உடையதாக இருக்கிறது. தவிர்க்க முடியாதபடி இந்திய நீதியமைப்பினுடைய தீர்ப்புகளின் சாரம்சத்தில் பார்ப்பனியம் கலந்துவிடுகிறது. அது நீதிபதிகளின் கருத்துகளிலும், தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது.

நீதியமைப்பினுடைய இத்தகைய பார்ப்பனிய போக்கின் வெளிப்பாடாகவே 2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி அணில் R டேவ் “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்திருந்தால் கீதை மற்றும் மகாபாரதத்தை பள்ளிகளில் கட்டாய கல்வியாக திணித்திருப்பேன்” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

2015ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி J. D.  பர்டிவாலா,” இட ஒதுக்கீடானது இந்த நாட்டை அழிக்கிறது” என தான் வழங்கிய தீர்ப்பில் இந்த வாக்கியம் தேவைப்படாவிட்டாலும் சம்பந்தமில்லாமல் சேர்த்திருந்தார். 

2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் A. K. கோயல் மற்றும் U.U. லலித் ஆகியோர்,” பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்-1989, சாதியை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசமைப்புச் சட்ட மதிப்புகளுக்கு விரோதமாக உள்ளதாக” குறிப்பிட்டனர்

மேலும் 2019 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் நல்லொழுக்கங்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன சமுகம் எழுந்து போராட வேண்டுமென அறைகூவல் விடுத்தார். 

பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிக்கும் இவர்களின் கருத்து மற்றும் போக்கு, இந்திய சமூகத் தளத்தில் பார்ப்பன சமூகத்திற்கான பாதுகாப்பும், அவர்களுக்கான அதிகார பலமும் நிலைநிறுத்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

இந்திய துனைக்கண்ட மக்கள் எல்லோருடைய வாழ்விலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்து இந்திய நீதியமைப்பு சாதிய மேலாதிக்க அமைப்பாக இருப்பது இயல்பிலே சமூகத்தில் சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும். சமூகத்தை மேலும் மேலும் சமத்துவமற்றதாக மாற்றும். இது அநீதியாகும். எனவே நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு நடைமுறை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அது சமூகத்திற்கான நீதியாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *