இன்றைய நமீபியா நாடு ஜெர்மன் நாட்டின் காலனி ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தபோது ஜெர்மனி ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட நில அபகரிப்புகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது. இதில் மிக முக்கிய திருப்பமாக இன்று (28/05/202) ஜெர்மனி இந்த கொலைகளை ‘இனப்படுகொலை’ என்று ஒப்புக் கொண்டுள்ளது. இது நீண்ட காலமாக நீதி கேட்டுப் போராடிய நமீபிய மக்களுக்கு அவர்கள் வாழ்வின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
கொரோனா பேரழிவு நோய்க்கு உலகமே அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் சிறிய வெளிச்சத்தைக் கொடுக்கும் விதமாக நீதியின் கரங்கள் நீண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சில நாட்களுக்கு முன்புதான் ஆர்மீனியப் படுகொலைகளை அமெரிக்க அரசாங்கம் ‘இனப்படுகொலை’ என்று அங்கீகரித்து குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆர்மீனியர்களின் போராட்டமானது கிட்டத்தட்ட நூறாண்டுகளை கடந்திருக்கிறது. நூறாண்டுகள் கடந்தும் நீதியின் நம்பிக்கை ஆர்மீனியர்கள் வாழ்வில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்மீனிய இனப்படுகொலையைப் பற்றி நமது ‘மெட்ராஸ் ரிவியூ’ வில் வந்த கட்டுரை.
படிக்க: ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது
இனப்படுகொலை என்று அழைப்போம்

நமீபியாவில் நடந்த கொலைகளுக்கு ஜெர்மனி முன்னர் “தார்மீக பொறுப்பை” ஒப்புக் கொண்டாலும், இழப்பீடு கோரல்களைத் தவிர்ப்பதற்காக அந்த படுகொலைகளுக்கு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதை இதுவரை தவிர்த்தே வந்துள்ளது. ஆனால் நீண்ட நமீபிய மக்களின் போராட்டங்களுக்குப் பின்பு ஜெர்மனி பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நமீபியாவுடனான ஒரு ஒப்பந்தத்தை அறிவிக்கும் அறிக்கையில் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ‘ஹெய்கோ மாஸ்’ (Germany’s foreign minister, Heiko Maas), ஜெர்மன் காலனித்துவ காலத்தின் நிகழ்வுகளுக்கு “அவற்றைக் காப்பாற்றவோ அல்லது மேல்பூச்சு பூசாமல்” பெயரிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் “இந்த நிகழ்வுகளை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து, இனிமேல் அதிகாரப்பூர்வமாக “இது ஒரு இனப்படுகொலை” என்று அழைப்போம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் “ஜெர்மனியின் வரலாற்று மற்றும் தார்மீக பொறுப்பின் வெளிச்சத்திலிருந்து, நமீபியாவிடமும் அங்கிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினரிடமும் மன்னிப்பு கேட்போம்.” என்று கூறியிருக்கிறார்.
நிவாரணம்
நமீபியாவில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நிவாரணமாக 1.1 பில்லியன் யூரோக்களை (1.3 பில்லியன் டாலர்) நமீபியாவின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிதி அளிக்கப்போவதாக ஜெர்மனி குறிப்பிட்டிருக்கிறது.
மறுக்கும் நமீபிய பாரம்பரிய தலைவர்கள்

பெர்லினுக்கும் நமீபிய அரசாங்கத்துக்கும் இடையிலான வரலாற்றின் முக்கிய திருப்பம் ஏற்பட்டபோதிலும் தங்கள் முன்னோர்களின் துன்பங்களுக்கு ஈடுசெய்யும் விதமாக ஜெர்மனி அறிவித்த தொகை மிக குறைவானது என்று ஹெரேரோ மற்றும் நாமாவின் பாரம்பரிய தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். இன்றுவரை நமீபியாவில் குடியேறிய ஜெர்மானியர்களின் சந்ததியினர் அங்கு அதிக பரப்பளவில் நிலங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். பொருளாதார சமத்துவமற்ற மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான நமீபியாவில் ஜெர்மனிய சந்ததியினர் அதிகளவில் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது நாட்டை பிளவுபடுத்தும் காரணிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
நமீபியா சமூகத்தின் சில உறுப்பினர்களைக் கலந்தாலோசித்ததாக ஜெர்மனி வாதிட்டாலும், இனப்படுகொலைக்கு உள்ளான மக்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டனர் என்று நமீபியாவின் பாரம்பரிய இனத்தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
“ஜெர்மனியின் சலுகை எங்களுக்கு மிகப்பெரிய அவமானம். இது எங்கள் திறமையை முற்றிலும் அவமதிப்பதாகும்” என்றும் நமீபியாவின் தலைவர்கள் அதை நிராகரிக்க வேண்டும் என்று ஓவஹெரோ பாரம்பரிய அதிகாரசபையின் தலைவர் ‘வெக்குய் ருகோரோ’ (Vekuii Rukoro, the head of the Ovaherero Traditional Authority) இவ்வாரத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தார். மேலும் “நம் முன்னோர்களின் இரத்தத்திற்கு அது போதாது. நாங்கள் இதுவரை சந்தித்த நரகத்திற்கு பின்னாலும் போராடுவோம்.” என்று கூறியிருக்கிறார்.
நமீபியாவில் வசிக்கும் 34 வயதான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ‘அன்னே மார்கஸ்’, நமீபியா நிதி ரீதியாக பாதிக்கபட்டிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்திருப்பதால் இது குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். “வரலாற்று ரீதியாக ஜெர்மனியர்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு இதை விட எளிதான சந்தர்ப்பம் எப்போதும் அமையாது மேலும் நமீபியாவிற்கும் இப்போதிருக்கும் பொருளாதார சிக்கல்களில் ஜெர்மனி எந்த உதவியைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையே அமைந்திருக்கிறது. எனவே சரியான நீதி வழங்கப்பட்டதா என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை,” என்று கூறியிருக்கிறார்.
நமீபியா நாட்டின் சார்பில் இந்த பேச்சுவார்த்தையாளர்களை வழிநடத்திய நமீபிய தூதர் ‘ஜெட் நகாவிரு’ (Zed Ngavirue) பேச்சுவார்த்தைகளைப் பற்றி “இது நாங்கள் தேடும் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம்” என்று கூறியுள்ளார்.
உண்மையான நல்லிணக்கத்திற்கு இன்னும் தூரமிருக்கிறது
நமீபிய அறிஞரும் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹென்னிங் மெல்பர் (Henning Melber) மக்களிடையே தேவைப்படும் நல்லிணக்கத்திற்கு “அரசாங்கங்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களை விட அதிகமாக நடவடிக்கைகள் தேவைப்படுகிறது, மேலும் இவை இரண்டும் மக்களின் பொது சமூகத்தின் அர்த்தமுள்ள தேவையை கணக்கில் கொண்டிருக்கவில்லை” என்றும் “அடுத்த படிகள் எதுவாக இருந்தாலும், உண்மையான நல்லிணக்கத்திற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்று அவர் கருத்து கூறியிருக்கிறார்.
நமீபிய இனப்படுகொலை வரலாறு

1870-களின் முற்பகுதியில் ஜெர்மனியின் அதிபர் ஓட்டோ வான் பிஸ்மார்க் ( Otto von Bismarck) ஆட்சிக்காலத்தில் உலகில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களைத் தொடர்ந்து மூன்றாவது மிகப்பெரிய காலனிகளை ஏற்படுத்திய நாடாக மாறியது ஜெர்மனி. ஜெர்மனி நாட்டின் காலனிகள் பல ஆப்பிரிக்க நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இதில் இன்றைய புருண்டி, ருவாண்டா, தான்சானியா, நமீபியா, கேமரூன், காபோன், காங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், நைஜீரியா, டோகோ, கானா, நியூ கினியா மற்றும் பல மேற்கு பசிபிக் / மைக்ரோனேசிய தீவுகள் (Parts of present-day Burundi, Rwanda, Tanzania, Namibia, Cameroon, Gabon, Congo, Central African Republic, Chad, Nigeria, Togo, Ghana, New Guinea, and numerous other West Pacific / Micronesian islands) ஆகியவற்றை உள்ளடக்கியது .
பின்பு வந்த 1884 ஆம் ஆண்டில் ஜெர்மானியப் பேரரசு பெரும்பாலான காலனி பிரதேசங்களின் மீது ஆட்சியை ஏற்படுத்தி, ‘ஜெர்மன் தென் மேற்கு ஆபிரிக்கா’ (German South West Africa) என்று அழைக்கப்படும் ஒரு காலனியை உருவாக்கியது. இது விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்கியது. இந்த நேரத்தில் இன்றைய நமீபியா (Namibia) நாட்டில் 1904 ஜனவரியில் ‘சாமுவேல் மஹாரெரோ’ (Samuel Maharero) தலைமையிலான ‘ஹெரேரோ’ (Herero) இன மக்களும், ‘கேப்டன் ஹென்ட்ரிக் விட்பூய்’ (Captain Hendrik Witbooi) தலைமையிலான ‘நாமா’ (Nama) இன மக்களும் ஜெர்மன் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.
இந்த கிளர்ச்சிகளை எதிர்கொள்ள ஜெர்மன் பேரரசால், ஹெரேரோ, நாமா மற்றும் ஜெர்மன் தெற்கில் உள்ள சான் இன மக்களுக்கு எதிராக வன்முறைகள்,கொலைகள் என மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்த படுகொலைகள் 1904 ஆண்டிலிருந்து 1908 ம் ஆண்டுவரை நிகழ்த்தப்பட்டது.
1904ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி ஹெரேரோ மற்றும் ஜெர்மன் படையினருக்கு இடையே நடந்தமோதலில் 100கும் மேற்பட்ட ஜெர்மனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் ஜெர்மானிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிளர்ச்சிக்காரர்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஜெர்மனியின் ஜேர்மன் ஜெனரல் ‘லோதர் வான் ட்ரோதா’ (German General Lothar von Trotha) தலைமையில் நடந்த ‘வாட்டர்பெர்க்’ (Battle of Waterberg) போரில் ஹெரேரோ மக்களை தோற்கடித்து அவர்களை சிறைபிடித்து கடும் பாலைவனப் பகுதியான “ஒமாஹேக்'(Omaheke) பகுதியில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அங்கு அவர்களில் பெரும்பாலோர் கடும் தண்ணீர் வறட்சி காரணமாக இறந்தனர். அதன்பின்பு அக்டோபரில் நாமா மக்களும் ஜேர்மனியர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களுக்கும் இதேவிதமான கொடும்தண்டனை ஜெர்மனிய படையினரால் வழங்கப்பட்டது.
இந்த இனப்படுகொலையில் 24,000 முதல் 100,000 ஹெரேரோ இனமக்களும், 10,000 நாமா இனமக்களும் மற்றும் எண்ணிக்கையில்லா சான் இனமக்களும் தங்கள் உயிரை இழந்தனர். இந்த இனப்படுகொலை பல்வேறு கட்டங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதன் முதல் கட்டமாக ஹெரெரோ இனமக்கள் நமீபியா பாலைவனபகுதியை விட்டு வெளியேறுவதை ஜெர்மானிய படைகள் தடுத்தன. இதன்மூலம் ஹெரெரோ மக்கள் பட்டினி மற்றும் கடும் வறட்சியில் மரணமடைந்தனர். இவர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன், ஆயிரக்கணக்கான ஹெரெரோ மற்றும் நாமாக்கள் அங்கிருக்கும் வதை முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு பெரும்பான்மையானவர்கள் நோய்கள், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் உடல்சோர்வு காரணமாக இறந்தனர்.
நமீபியாவில் ஜெர்மனியின் ஆட்சி 1915-ல் தென்னாப்பிரிக்க படைகளுக்கெதிராக ஏற்பட்ட தோல்வியுடன் முடிவடைந்தது. 1920-ம் ஆண்டில், முதலாம் உலகப் போர் முடிந்த பின்னர் நமீபியாவை தென்னாப்பிரிக்கா நிர்வகிக்கத் தொடங்கியது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விடுதலையைக் கோரும் பூர்வீக ஆப்ரிக்க அரசியல் ஆர்வலர்களின் எழுச்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகள் ஆகியவற்றால் 966-ம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் சபை நமீபியாவின் மீது நேரடிப் பொறுப்பை ஏற்றது. பின்னர் தொடர்ந்த உள்நாட்டு மோதல்களால் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. தொடர்ந்து உள்நாட்டு மோதல்கள் நடந்த நிலையில் 1985-ல் நமீபியாவில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நிறுவியது தென்னாபிரிக்கா. அதன்பின் நமீபியா 1990-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிடமிருந்து முழு சுதந்திரத்தைப் பெற்றது.
எப்படியிருந்தாலும் வரலாற்றின் கொடூரக்காலகட்டங்களில் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் சமீப காலங்களில் அடுத்தடுத்து அவை ‘இனப்படுகொலை’ என்ற சொல்லால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுவது நாகரீகமடைந்த மனிதகுலத்தின் நீதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இது மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட நீதி எவ்வளவு காலமாயினும் அவை மீண்டும் முளைத்தெழும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. தமிழீழ இனப்படுகொலை எப்போது இனப்படுகொலையாக அங்கீகரிக்கப்படும்?
– அருண்குமார் தங்கராஜ், Madras Review