ஆர்மீனியா இனப்படுகொலை

ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!

கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார். அவ்வாறு  தெரிவித்ததன் மூலம் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை அதிகாரபூர்வமாக உபயோகித்த முதல் அதிபராக பைடன் கருதப்படுகிறார். முதலாம் உலகப் போரின் முடிவில் 20-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆர்மீனிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும், கொலைகளையும் விவரிக்க “இனப்படுகொலை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார் பைடன்.

அவரின் அறிக்கையில் “ஒட்டோமான் கால ஆர்மீனிய இனப்படுகொலையில் இறந்த அனைவரின் வாழ்க்கையையும் நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஜோ பைடன்

“வெறுப்பு என்பது எல்லா விதத்திலும் நம் மனதை அரிக்கக் கூடியதாக செல்வாக்கைப் பெறும்போது அதற்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்கிறோம். 106 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இனப்படுகொலையில் அழிந்துபோன ஆர்மீனியர்கள் அனைவரையும் இன்றும் அமெரிக்க மக்கள் மதிக்கிறார்கள்…இதன்வழியாக வரலாற்றை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் இதைச் செய்வது குற்றம் சாட்டுவதற்காக அல்ல, ஆனால் நடந்தது ஒருபோதும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காகவே.” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

‘ஆர்மீனிய இனப்படுகொலை’ எப்படி நிகழ்ந்தது?

ஆர்மீனிய இனப்படுகொலை

1948 டிசம்பரின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. மாநாட்டின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பது “ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க” நோக்கம் கொண்ட செயல்களைச் செய்வதாக விவரிக்கிறது.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடந்த பேரரசுக்கான போட்டியில் ஆர்மீனியர்கள் பலியாகினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில் ஒட்டோமான் பேரரசு அதன் எல்லைகளில் வீழ்ச்சியடைந்தபோது, ​​ஆர்மீனியர்கள் கான்ஸ்டான்டினோப்பிளிலின் (Constantinople) ஆட்சியாளர்களால் ஐந்தாம் படை போன்று எதிரிகளுக்கு உளவு சொல்லும் குழுவினராக பார்க்கப்பட்டனர். 1877-78ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ருஸ்ஸோ-துருக்கியப் போரில் தங்களது நிலப்பகுதியை பெருமளவில் (Russo-Turkish war) துருக்கியர்கள் இழந்தனர். 

இந்த போருக்கு பின் ஒப்பந்தமான ‘பெர்லின் உடன்படிக்கை’யில் (Treaty of Berlin) போரில் வென்றவர்கள் ஒட்டோமான்களுக்கு சில விதிமுறைகளை விதித்தனர். இதில் துருக்கியின் இரண்டாம் சுல்தான் அப்துல்ஹமிட் (Sultan Abdülhamid II)  அவர்களிடம் ஆர்மீனியர்கள் வசிக்கும் மாகாணங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்கவும், சர்க்காசியர்கள் மற்றும் குர்துகள் ஆகியோர் (Circassians and Kurds) ஆர்மீனியர்களுக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைகளை கட்டுப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அழுத்தம் கொடுத்தனர். 

இந்த  விதிமுறையை ஆர்மீனியர்களுக்கும் பிற போட்டி நாடுகளுக்கும், குறிப்பாக ரஷ்யாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் அடையாளமாக சுல்தான் கருதினார். இந்த ஒப்பந்தத்தின் பின்னர் துருக்கிய மற்றும் குர்திஷ் போராளிகளால் அங்கிருக்கும் ஆர்மீனியர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தன. 1908-ம் ஆண்டில் இளம் துருக்கியர்கள் (Young Turks) சுல்தானிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றி துருக்கிய ஏகாதிபத்திய மகிமையை மீட்டெடுப்பதாக உறுதியளித்தனர்.

1914 அக்டோபரில் துருக்கி ஜெர்மனிக்கு ஆதரவாக முதல் உலகப் போரில் இணைந்தது. காகசஸ் (Caucasus) பகுதியில் அவர்கள் தங்களது புவிசார் அரசியல் போட்டியாளர்களான ரஷ்யர்களுக்கு எதிராகப் போரிட்டனர். ஆனால் ஜனவரி 1915-ல் ரஷ்யர்களால் சாரிகாமிஷ் போரில் (Battle of Sarikamish) ஒட்டோமான்கள் பேரழிவுகரமான தோல்வியைச் சந்தித்தனர்.

ஆர்மீனியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள்

ஆர்மீனியர்கள் ஏப்ரல் 24, 1915 நாளினை தங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் தொடக்கமாகக் குறிப்பிடுகின்றனர். ஒட்டோமான் பேரரசின் கிழக்கு எல்லைகளில் ஆர்மீனியர்கள் பெருமளவில் வாழ்ந்தனர். ஒட்டோமான் துருக்கியர்கள், துருக்கிய மற்றும் குர்து போராளிகளை அவர்கள் மீது ஏவிவிட்டு, பல்லாயிரக்கணக்கான ஆர்மீனியர்களை கொன்று அவர்களின் பொருள்களை கொள்ளையடித்தனர். இதன்பின் 1915-16 ம் ஆண்டுகளில்  லட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் கிழக்கு அனடோலியாவிலிருந்து (இன்றைய துருக்கி) சிரிய நாட்டின் புல்வெளி பகுதியில் அமைக்கப்பட்ட வதை முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட பயணத்தில் பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்தன. 

இடம்பெயர்ந்து செல்லும் ஆர்மீனியர்கள்
இடம்பெயர்ந்து செல்லும் ஆர்மீனியர்கள்

ஆர்மீனிய பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துதலும் மற்றும் அனைவரையும் துன்புறுத்துவதும் நிகழ்ந்தன. இந்த துன்புறுத்தல்களிடமிருந்து தப்பித்தவர்கள் அங்கிருக்கும் மலைகள் மற்றும் பாலைவனங்கள் வழியாக உணவு, குடிநீர் மற்றும்  தங்குமிடம் ஆகியவை மறுக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர். இதன் முடிவில் லட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர் என்று வரலாற்றாசிரியர் ‘டேவிட் ஃப்ரோம்கின்’ (David Fromkin) தனது புத்தகமான ‘A Peace to End All Peace’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அட்டூழியங்கள் குறித்து ஊடகவியலாளர்கள், மிஷனரிகள், தூதர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சாட்சிகள் அறிக்கை அளித்தனர்.

15 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்

இறந்த ஆர்மீனியர்களின் மொத்த எண்ணிக்கை சர்ச்சைக்குரியது. 1.5 மில்லியன் (15 லட்சம்) பேர் இறந்ததாக ஆர்மீனியர்கள் கூறுகின்றனர். துருக்கி குடியரசு அந்த எண்ணிக்கையை மறுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 300,000 என கூறியிருக்கிறது. ‘இனப்படுகொலை அறிஞர்களின் சர்வதேச சங்கம்’ (International Association of Genocide Scholars – IAGS) கணக்கின் படி, இறப்பு எண்ணிக்கை “ஒரு மில்லியனுக்கும் அதிகமானதாகும்”.

துருக்கிய பிரதமராக 2005-ம் ஆண்டு ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) பணியாற்றியபோது அவருக்கு  IAGS  எழுதிய கடிதத்தில்,  “ஆர்மீனிய இனப்படுகொலையை உறுதிப்படுத்துவது என்பது  ஆர்மீனியர்களுக்கு மட்டுமல்ல, இனப்படுகொலை வரலாற்றை உற்றுநோக்கும் அறிஞர்களின் பெரும் கருத்தாகும் என்பதை நாங்கள் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று கூறியிருந்தது.

ஆர்மீனிய இனப்படுகொலை நினைவிடம்

சிதறிப்போன ஆர்மீனிய மக்கள்

இந்த இனப்படுகொலை நவீன ஆர்மீனிய வரலாற்றின் ஆரம்ப நிகழ்வாக கருதப்படுகின்ற அதேவேளையில் புலம்பெயர்ந்த ஆர்மீனியர்களை ஒன்றாக இணைக்கிறது. இன்று ஆர்மீனியர்கள் பெரும் கலாச்சார பெருமை கொண்ட மக்களிலிருந்து இனப்படுகொலையால் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் சிதறிய மக்களாக மாறிப்போயிருக்கின்றனர்.

ஆர்மீனிய இனப்படுகொலை குறித்த பொதுவிவாதத்தை தடை செய்த துருக்கி

துருக்கியில் இந்த விவகாரம் குறித்த பொது விவாதம் தடை செய்யபட்டுள்ளது. இதையும் மீறி யாரவது கேள்விகள் எழுப்பினால் 301-வது பிரிவு “துருக்கியை அவமதித்தல்” என்ற தண்டனைப் பிரிவின் கீழ்  ஆர்மீனியர்களின் வெகுஜனக் கொலைகளை முன்னிலைப்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அப்படி தண்டிக்கப்பட்டவர்களில் நோபல் பரிசு பெற்ற ஓர்ஹான் பாமுக்(Orhan Pamuk) ஒருவர். ஹ்ரான்ட் டிங்க் (Hrant Dink) என்ற எழுத்தாளர் 2007 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் அரசியலாளர் , ஓகுன் சமஸ்ட் (Ogun Samast) ஜூலை 2011-ல் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உறுதிமொழி வழங்கியிருந்த ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இதேபோன்ற உறுதிமொழியை வழங்கினார். ஆனால் பதவியில் இருந்தபோது ஒருபோதும் பின்பற்றவில்லை. மேலும் ஒபாமா ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை எப்போதும் தவிர்த்தே வந்தார். அவருக்குப்பின் அமெரிக்க அதிபராக பதவிக்குவந்த டிரம்பும் துருக்கி அதிபர் எர்டோகனுடன் நட்பு உறவை வளர்த்துக் கொண்டதால் அவரும் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்.

அமெரிக்க – துருக்கி புவிசார் உறவில் என்ன மாற்றங்களை உருவாக்கும்

பைடனின் இந்த அறிவிப்பு என்ன விதமான மாற்றங்களை புவிசார் அரசியலில் ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேவேளை துருக்கியின் தலைநகரான அங்காராவிற்காக  துருக்கிய அரசு ரஷ்ய நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு முறையை வாங்கியிருப்பதும் மற்றும் துருக்கிய படைகள் பிராந்திய மோதல்களில் ஈடுபடுவதும் பதட்டங்களை அதிகரித்திருக்கின்றன.

ஆர்மீனிய இனப்படுகொலையை அங்கீகரிப்பது வாஷிங்டனுக்கும் அங்காராவிற்கும் இடையிலான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று துருக்கியின் வெளியுறவு மந்திரி இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அறிக்கைக்கு முன்னதாக கூறியிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உலகெங்கிலும் ஆர்மீனியர்கள் இனப்படுகொலையை நினைவேந்தும் நாளில் இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. அவர்களின் நூற்றாண்டிற்கும் மேலான கோரிக்கைக்கும், அறவழி போராட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது. புவிசார் அரசியலில் இந்த அறிவிப்பு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. 

முகப்புப் படம்: 1915-ல் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆர்மீனிய கிராமம் ஒன்றில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புகளும், மண்டை ஓடுகளும் சிதறிக் கிடக்கின்றன.

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *