தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக ஒகேனக்கலில் துவங்கி காவிரி பூம்பட்டினம் வரையிலான பகுதிகளில் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் மக்கள் இந்த விழாவினை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளன்று இப்புதுப்புனல் விழா கொண்டாடப்படுகிறது.
வாழவைக்கும் காவிரித்தாயை தெய்வமாக வணங்கி, படையலிட்டு வரவேற்று, காவிரியின் புதுப்புனலில் நீராடி மகிழ்வதுதான் இவ்விழாவின் முக்கியத்துவம்.
இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆடிப்பெருக்கு விழாவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விழா களையிழந்து காணப்பட்டது. வழக்கமாக சிறப்பாக நடைபெறும் பகுதிகளான முக்கொம்பு படித்துறை, திருவரங்கம் அம்மா மண்டபம், கல்லணை, திருவையாறு ஆகிய பகுதிகளில் விழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பதாகைகளை ஒட்டியிருந்தனர்.
முக்கொம்பு உள்ளிட்ட காவிரிக் கரையைச் சுற்றியிருந்த மக்கள் ஆங்காங்கே சொந்த ஊர்களிலும், தனித்தனியாக குடும்பங்களுடனும் ஆற்றங்கரையில் படையலிட்டு வணங்கி விழாவினை நிறைவு செய்தனர்.
குறிப்பாக புதுமணத் தம்பதியினர் அனைவரும் ஆற்றங்கரைக்கு வந்து இவ்விழாவில் பங்கேற்று வணங்குவதனால், அவர்கள் வாழ்வு காவிரி போல் சிறப்பாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. பொதுமக்கள் காவிரியை ஒரு அம்மனாக வருவித்து பூ, பழம், தேங்காய் முதலியவைகளை வைத்தும், காதோலை கருகமணி போன்ற பெண்களுக்கான ஆபரணங்களை வைத்தும் படையலிட்டனர்.
சங்க இலக்கியங்களில் புதுப்புனல் விழா
சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் புதுப்புனல் விழா முக்கியமான குறியீடுகள் இருக்கின்றன.
அகநானூறு
முற்கால சோழ நாட்டில் ஆட்டனத்தி எனும் நீச்சல் நட வீரன் இருந்திருக்கிறான். அவனை கரிகாலனின் மகள் ஆதிமந்தி காதலித்து வந்திருக்கிறாள். ஆட்டனத்தி, கரிகாலன் முன்னிலையில் கழார் எனும் காவிரி ஆற்றுத் துறையில் நடந்த புதுப்புனல் பெருவிழாவின் போது, நீச்சல் நடனம் ஆடி காட்டிக் கொண்டிருந்த போது, ஆற்றின் வெள்ளம் அவனை அடித்துசென்றது. அதனை பரணர் எழுதிய அகநானூற்றுப் பாடல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
…………” முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்”…………….
– [அகநானூறு 222, பரணர்.]
கழார்ப் பெருந்துறை என்ற ஊரில் காவேரி ஆற்றங்கரையில் புதுப்புனல் விழா! அந்த விழாவில் குன்றைப்போல் தோள்படைத்த ஆட்டனத்தி நடனமாடுகிறான். (ஆட்டனத்தி ஆடல் கலையில் பெயற்பெற்றவன்). அவன் அழகில் மயங்கிய காவேரி மங்கை அவன் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவனை உடனழைத்துச் சென்றது.( ஆட்டனத்தி காவேரி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டான்). இவ்வாறு ஆட்டனத்தி கதையில் புதுப்புனல் விழா குறித்த முக்கியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தில் புதுப்புனல் விழா குறித்த குறிப்பு பின்வருமாறு இடம்பெறுகிறது.
உழவர் ஓதை மதுகு ஓதை;
உடைநீர் ஓதை; தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப
நடந்தாய்; வாழி, காவேரி!”
‘‘மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப் பூ ஆடை அதுபோர்த்து,
கருங் கயல்-கண் விழித்து,ஒல்கி
நடந்தாய்; வாழி, காவேரி!’
பூவர் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசை பாட
காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்; வாழி, காவேரி
– சிலப்பதிகாரம்
புதுப்புனல் வரக் கண்டு உழவர்கள் ஆரவாரத்தில் ஏர்பூட்டி உழும் ஓசையும், நீரானது கரைகளையும் வரப்புகளையும் உடைத்துச் செல்லும் ஓசையும், நீர் மதகின் வழியாகச் செல்லும் பொழுதும் ஏற்படும் ஓசையும், இதேபோல் புதுப்புனல் விழா கொண்டாடும் மக்களின் ஓசையும் ஒருசேர சிறந்து ஆர்ப்பரிக்க இரு கரைகளோடு நடந்து செல்பவள் நீ! ஆகையினால் நீ வாழ்வாயாக காவிரி! என்று பொருளில் சிலப்பதிகாரப் பாடல் விளக்குகிறது. சங்க இலக்கியங்களில் விழா என்ற சொல் விழவு என குறிக்கப்படுகிறது. இங்கு விழவர் என்பது விழாவைக் கொண்டாடுபவர்கள் என பொருள்படும்.
மேலும் காவிரியில் புதுநீர் வருகை சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு சிறப்பித்துக் கூறப்படுகிறது. பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்கள் கூட்டங் கூட்டமாக ஆடவும், குயில் அதற்கேற்ப இசை பாடவும் உள்ள பக்கங்களையுடைய காவேரி என்றும், மகளிர் காவேரி யம்மனை புதுநீர்ப் பெருக்கின்போது தூபதீபங்காட்டி வழிபட்டு வழியனுப்பும்போது இடும் பூமாலைகளை தாங்கிச் செல்லும் காவேரி என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரிபாடலில் வைகையில் நடந்த புதுப்புனல் விழா
மேலும் காவிரி மட்டுமல்லாது வைகை, தாமிரபரணி நதிகளை மையப்படுத்தியும் புதுப்புனல் விழாக்கள் நடத்தப்படுகின்றன. பரிபாடலில் வைகையில் நடந்த புதுப்புனல் விழா குறித்தான குறிப்பு இருக்கிறது. கரும்பிள்ளைப்பூத்தனார் எனும் புலவர் வைகையில் வெள்ளம் வந்ததைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
“மலையில் மாலையில் பெய்த பெருமழையால், காலையில் வையையானது வெள்ளத்துடன் கடலொடு கலக்கும்பொருட்டு பல மலர்களாகிய போர்வையையும் பருமணலையும் மேலே மூடிக்கொண்டு போந்தது. அங்ஙனம் போந்த புனலில் ஆடும் பொருட்டு, யாவரும் புறப்படலானார்கள்.
மகளிர் மேகலையை இறுகப் புனைந்தனர். வண்ணநீரை வீசும் கருவிகளையும் பனிநீர் கலந்த சந்தனத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைமீதும், பிடிமீதும், எருதுபூண்ட வண்டியின் மீதும், கோவேறு கழுதையின் மீதும், குதிரை வண்டியின் மீதும், சிவிகையின் மீதும் ஏறினர்.
மலராத முகையைப் போன்ற பருவத்தினரும், புதுமலர் புலர்ந்தது போன்ற பருவத்தினரும், இளைய மாதரும், இவர்களுடைய தோழியரும், மெல்ல நடந்து ஆற்றின் கரையை அடைந்தனர்.
நீர் விளையாட்டினால் இளைத்த மகளிரெல்லாம் புணையை விட்டு கரையேறினர். அகிற்புகையால் உடம்பின் ஈரத்தைப் புலர்த்தி மார்பிலே கலவைக் குழம்பைப் பூசினர். அதன் மணம் திசையெல்லாம் கமழ்ந்தது. சிலர் தம் கூந்தலில் வெள்ளையாடையைச் சுற்றி ஈரம்புலர முறுக்கினர்.
சிலர் குங்குமச்சேறு, அகிற்சாந்து, பச்சைக் கற்பூரம் ஆகிய இவற்றை சாந்தம்மியிலீட்டு நெருப்பைப் போன்ற நிறத்தை அடையும்படி குழவியினால் அரைத்தனர்….
இங்ஙனம் அமைந்த மகளிருடைய முகம் நீர்விளையாட்டினால் ஒளிபெற்றது” என்று புதுப்புனல் விழாவின் போது நடைபெற்ற நீர் விளையாட்டுகள் குறித்தும், மகளிரின் ஒப்பனைகள் குறித்தும் அப்பாடல் விளக்குகிறது.
நீரோடு இணைந்த தமிழர் பண்பாடு
நீரின்றி அமையாது உலகு என்று வலியுறுத்தி நீரோடு கலந்ததாகவே தமிழரின் வாழ்வியல் இருந்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டு நீரை மையப்படுத்தியே இருந்திருக்கின்றன. இயற்கையை வழிபட்ட தமிழரின் பண்பாட்டில் இப்புதுப்புனல் விழாவும் ஒரு முக்கியக் கூறாக இருந்திருக்கிறது. தமிழரின் திருவிழாக்களும், சமய மரபுகளும் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் மட்டுமே மையப்படுத்தி இருந்ததில்லை. அது இயற்கையையும், உழைப்பினையும் மையப்படுத்தியதாக இருந்திருக்கிறது.
ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழாவானது பல வழிகளில் மாற்றமடைந்து சடங்குகள் புகுத்தப்பட்டிருந்தாலும் இன்றும் ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இந்நிகழ்வு நம் பண்பாட்டு வரலாற்றின் எச்சமாகும்.
காவிரி காப்போம்!
காவிரி செழித்து ஓடுவதற்கு மூல காரணமாய் இருப்பது மேற்கு தொடர்ச்சி மலைகளும், அவற்றின் இயற்கை சூழல்களும் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை சூழலினை பாதிக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இத்திட்டங்களின் மூலம் 21 லட்சம் மரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. இந்த மரங்கள் தான் காவிரி ஓடுவதற்கான உயிர்ச்சூழலை பாதுகாக்கின்றன. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள EIA 2020 சட்ட அறிக்கையானது மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழலின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் பண்பாட்டில் வாழ்வியலோடும், வாழ்வாதாரத்தோடும் கலந்த காவிரியை வரவேற்று புதுப்புனல் விழா கொண்டாடும் நாம், காவிரியின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளத்தான் வேண்டும்.
Very useful page. I like this
Thank You. Keep in touch