வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது. இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி மூலமாக இந்தியாவின் சிறு வணிகத்தின் அனைத்து தளத்திலும் கால்பதிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீனாவில் WECHAT செயலியை போல இந்தியாவில் வாட்ஸ்அப் பல்நோக்கு செயலியாக (multipurpose app) டிஜிட்டல் பணப்பரிவர்தனையுடன் உருவெடுக்கவும் அடித்தளமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ஏறக்குறைய 40கோடி பயனாளிகளை கொண்டது வாட்ஸ்அப் செயலி. அடிப்படையில் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் கடந்த சில வருடங்களாக வாட்ஸ் அப் பிசினஸ் எனப்படும் தனது மற்றொரு செயலியையும் அறிமுகபடுத்தியது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ள இயலும். எனினும் இது வாட்ஸ்அப் செயலியை போல பெரியதொரு வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் தான் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது facebook நிறுவனம்.
Whatsapp உடன் இணைந்து இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் அம்பானி:
2016யில் தன் தொலைதொடர்பு சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் அரம்ப காலத்தில் தன் வடியாளர்களுக்கு இணைய சேவையான 4ஜி-யை இலவசமாகவும் அதன்பின் சில காலத்திற்கு குறைந்தவிலையிலும் கொடுத்தது. இதன்மூலம் குறுகிய காலத்திலேயே இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை (37கோடி வாடிக்கையாளர்கள்) கொண்ட மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு சேவை மட்டும் அன்றி ஜியோ-சினிமா, ஜியோ-டிவி, ஜியோ-பே என பல்வேறு துறைகளிலும் கால்பதிக்கும் முயற்சிகளை செய்துவருகிறது. அவ்வாறே ஜியோ-மார்ட் என்னும் முயற்சியின் மூலம் ஆன்லைன்-வர்த்தக முறையில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை/விநியோக முறையை தொடங்க உள்ளது.

வாட்ஸ்அப்-ஜியோ ஒப்பந்த ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட சாதாரண கடைகளில் இருந்து பொருட்களை வாட்ஸ்அப் செயலியின் மூலம் ஆர்டர் செய்துகொள்ளலாம். அவை ஜியோ-மார்ட் வழியே வீட்டிற்கு நேரிடையாக விநியோகம் செய்யப்படும், வாடிக்கையாளர்கள் இதற்கான பண பரிவர்த்தணையையும் வாட்ஸ்அப் செயலி வழியே செய்யமுடியும். இதுவே திட்டம்.
இந்தியா முழுவதிலும் இருந்து 3 கோடி வரையிலான சிறுவணிக கடைகள் இதில் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் அத்தியாவசிய சில்லறை வர்த்தக மொத்த மதிப்பு மட்டுமே ரூ.28லட்சம் கோடி என்பது குறிப்பிட்தக்கது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வாட்ஸ் அப் களம் இறங்குவதை தாண்டியும் FACEBOOK நிறூவனத்திற்கு இதில் மேலும் சில நலன்கள் உள்ளன.
தகவல்களே பேராயுதம்:
இன்றைய நவீன உலகில் ‘தகவல்கள்’ தான் பேராயுதம் என்றூ வர்ணிக்கப்படுகிறது. தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட நம்முடைய தகவல்கள் தான் இனி பன்னாட்டு நிறுவனங்களின் தங்கச் சுரங்கமாக இருக்கப் போகிறது.
நம்முடைய தனிப்பட்ட விவரங்கள், நம்முடைய விருப்பங்கள், நம்முடைய தேடல்கள் இப்படிப்பட்ட தகவல்களே இனி உலகின் பெரிய நிறுவனங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய அட்சயப் பாத்திரமாக இருக்கப் போகிறது.

இந்தியாவில் தகவல்களைக் கையாள FACEBOOK நிறுவனத்திற்கு இருந்த தடைகளை எதிர்கொள்ள இந்த முதலீடு பெரிய அளவில் பயன்படும். உலகம் முழுவதிலும் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை (Individual Datas) கையாள்வதில் FACEBOOK நிறுவனத்திற்கு ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஃபேஸ்புக் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் தரவுகளை உள்ளூர்மயமாக்கும் (Data Localisation) சட்டங்களின் மூலமாக அத்தகவல்களை கையாள்வதற்கு இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு சில சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. இந்தியாவின் பெருமுதலாளியான அம்பானியின் நிறுவனத்துடனான Facebook-ன் இந்த முதலீடு வெற்றிகரமானதாக மாறும்பட்சத்தில், தகவல்களை கையாள்வது குறித்தான சிக்கல்களை இந்தியாவில் எதிர்கொள்வது வாட்ஸ்அப் மற்றும் FACEBOOK நிறுவனத்திற்கு எளிதானதாக அமையும். வாட்ஸ்அப்-பே (Whatsapp Pay) எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை FACEBOOK நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த முன்பிருந்தே திட்டம் வைத்திருந்தாலும், வாட்ஸ்அப் இந்தியாவில் தனியே பரிவர்த்தனை தொழில் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடதக்கதாகும்.
என்னவாகும் உள்நாட்டு சிறுவணிகம்?
முக்கியமான மற்றுமொரு நலனானது, இந்த முதலீட்டின் மூலம் FACEBOOK நிறுவனம் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தியாவின் சிறு, குறு வியாபாரிகளின் மொத்த தகவல்களை பெற முடியும் என்பதாகும். தங்களுக்கு இடையேயான தகவல்கள் பரிமாற்ற ஒப்பந்தம் எதுவும் இதுவரையில் போடப்பட்டதா எனற விவரம் வெளிப்படையாக வைக்கப்படாவிட்டாலும், வரும் காலங்களில் இது எவ்வாறு முன்னெடுக்கபடும் என கூறிவிட இயலாது. மேலும் தவிர்க்க இயலாத அத்தியாவசிய தகவல் (இன்ஹெரெண்ட் டேட்டா) பரிமாற்றம் குறித்தும் இதுவரையில் ஏதும் சொல்லப்படவில்லை என்பது மிகவும் கவனிக்கதக்கது.
சவுதி ஆரம்கோ – ரிலையன்ஸ் ஒப்பந்தத்தில் அம்பானியின் லாப நோக்கு
அம்பானியை பொறுத்தவரையில் இந்த முதலீட்டால் அவரது நிறுவனங்களுக்கான பொருளாதார நலன்கள் மேம்பட உள்ளது என்றே கூறலாம். அம்பானியின் நிறுவனங்களுக்கான மொத்த கடன் இதுவரையில் ரூ.3லட்சம் கோடியாக உள்ளது.
சவுதி ஆரம்கோ – ரிலையன்ஸ் ஒப்பந்தம் சமீபத்தில் திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு ஒப்பந்தம் ஆகும். இதன்படி ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடிக்கு 20 சதவீத ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை சவுதி ஆரம்கோ நிறுவனம் வாங்குவதாக ஒப்புக்கொண்டு இருந்தது. கொரோனா பாதிப்பினால் கச்சா எண்ணெயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது. இதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறான நிலையிலேயே தற்போது நிகழும் இந்த முதலீட்டில் மொத்தம் ரூ.43,500கோடியில் ரூ.15,000கோடி தவிர்த்து மற்ற பணத்தினை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் 28லட்சம் கோடி மதிப்பிலான இந்தியாவின் அத்தியாவசிய சில்லறை வணிகத்தில் அம்பானியின் ஜியோ-FACEBOOK யின் வாட்ஸ் அப் இணைந்து களம் காண்பது சிறு குறு வணிகர்கள் மட்டுமின்றி ஏற்கனவே களத்தில் இருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட்களான அமேசான், வால்மார்ட்-ஃப்லிப்கார்ட், அலிபாபா-பிக்பேஸ்கட் ஆகியோரையும் போட்டியாளர்களாக எதிர்முனையில் நிறுத்தி உள்ளது.