விவசாயிகள் போராட்டம் தொடங்கிய பிறகு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஜியோவிற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம்
அம்பானியின் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே புதிய விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஜியோ நெட்வொர்க்கிற்கு எதிரான பிரச்சாரம் விவசாயிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. ஜியோ சிம்மை எரித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் பலர் இணைந்து ஜியோ நிறுவனத்தின் செல்போன் டவர்களுக்கு மின்சார இணைப்பினை துண்டிப்பதும் நடந்தது.
ஜியோ புறக்கணிக்கச் சொல்லி விவசாயிகள் மேற்கொண்ட பரப்புரையினால் தான் ஜியோ நிறுவனத்திற்கு இத்தனை பெரிய வாடிக்கையாளர் இழப்பு நடந்திருக்கும் என பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் 15 லட்சம்; ஹரியானாவில் 5 லட்சம்
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறியுள்ளனர். பஞ்சாபில் 2020 நவம்பர் மாதத்தில் 1.4 கோடியாக இருந்த ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது 2020 டிசம்பர் மாதத்தில் 1.25 கோடியாகக் குறைந்துள்ளது.
அதேபோல நவம்பர் மாதத்தின் போது ஹரியானா மாநிலத்தில் 94.48 லட்சமாக இருந்த ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தில் 89.07 லட்சமாகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஹரியானா மாநிலத்தில் ஜியோ நெட்வொர்க்கிலிருந்து மாறியுள்ளனர்.
இதுவரையில் காணாத சரிவு
டிசம்பர் 2019-க்குப் பிறகு தற்போதுதான் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையானது மிகப்பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. ஹரியானாவைப் பொறுத்தவரை ஜியோ நிறுவனம் துவங்கியதிலிருந்து இத்தனை பெரிய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் சரிவினை சந்தித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் டவர்களுக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தானாக முன்வந்து தங்களுக்கு ஒப்பந்த விவசாய நடைமுறையில் இறங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிக்கை அளித்திருந்தது. மேலும் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பரப்புரையினை தடுத்து நிறுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருந்தது.
புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கண்டிருக்கும் சரிவு கவனமாக உற்றுநோக்கப்படுகிறது.