விவசாய பயிர்க் கடன்களை இரத்து செய்ததை பெரும் சாதனையாக முதலைமைச்சர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார். அவர் ரத்து செய்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டும்தான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய நகைக் கடன்களோ, பொதுத்துறை வங்கிகிகளில் உள்ள கடன்களோ அல்ல. இவை இல்லாமல் தனியார் வங்கிகளில் வாங்கியது தனி.
முதலமைச்சர் ரத்து செய்திருக்கும் கடன் தொகை என்பது தமிழக விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனில் மிகச் சிறிய பகுதி மட்டுமே என்பதை தமிழகத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல் தான் தமிழக விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களால் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருப்பவர்கள் முறையாக தவணை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தவணை கட்டாததற்கு அவமானப்படுத்தப்பட்ட கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் தொண்டாமுத்துர் அருகில் உள்ள தீனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி 29 வயதான ஆனந்தன். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவி இருக்கிறார். உலியம்பாளையத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்கி தீனம்பாளையத்தில் வீடு கட்டிய ஆனந்தன் முறையாக தவணை கட்டி வந்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எற்பட்ட பொருளாதார முடக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தவர், கடந்த சில மாதங்களாக முறையாக கடன் தவணையை அடைக்க முடியவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஆனந்தன் தொண்டாமுத்துர் காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை மிகுந்த மன உளைச்சலில் தன் சகோதரரிடம் பேசிய ஆனந்தன், அதன்பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் காவல்துறை, அந்த நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
வாழைக்கு உரிய விலை இல்லாமல் விஷம் குடித்த கன்னியாகுமரி சின்னத்தம்பி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் கூட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னதம்பி. பல இடங்களில் வயல்களை குத்தகைக்கு எடுத்து இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். வாழைக்கு உரிய விலை கிடைக்காததால் பண நெருக்கடியிலும் மன உளைச்சலிலும் இருந்த சின்னசாமி நஷ்டத்தை தாங்க முடியாமல் தன் பெற்றோரின் கல்லறைக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீடு சீல் வைக்கப்பட்டு தெருவில் நிறுத்தப்பட்ட மதுரை சதீஷ்குமார் குடும்பம்
மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
விவசாயியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 4.5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதன் மூலம் 7 பசு மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்து வந்தார். இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், கொரோனா பேரிடர் காலம் என்பதாலும் அவரால் கடன் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் கடந்த வாரம் சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து, எந்த பொருளையும் எடுக்க விடாமல் சீல் வைத்தனர்.
வீட்டிலிருந்து எந்த பொருளையும் எடுக்க முடியாமல் இரண்டு பெண் பிள்ளைகளுடன் கடந்த ஒரு வாரமாக வீட்டு வாசலிலேயே தவித்து வருகிறது சதீஷ்குமார் குடும்பம்.
பள்ளி செல்லும் இரண்டு மகள்களும் மாற்று உடை கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். கொரோனா அச்சம் மக்களிடம் இருந்து போய்விட்டாலும், அது எற்படுத்திய பொருளாதார தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கிறது சதீஷ்குமாரின் நிலை.
கொரோனாவின் பொருளாதா முடக்கம் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களிடம் பெரும் பண நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் விவசாயப் பொருளாதாராம் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதும், அதனை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பெரும் சோகமாகிறது.