கமலா ஹாரிஸ் 9 ஆண்டுகளுக்கு முன் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக போட்டியிடும் போது, சென்னையில் இருக்கும் தனது அத்தையிடம் பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கும் வரசித்தி விநாயகருக்கு 108 தேங்காய் உடைக்கச் சொன்னார். அதற்காக அவரது அத்தை சரளா 108 தேங்காய் உடைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற கமலா “நீங்கள் உடைத்த ஒவ்வொரு தேங்காய்க்கும் எனக்கு 1000 ஓட்டுகள் கிடைத்தது” என்று கூறியதாக சரளா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். கமலாவின் தாயார் சியாமலா பெசண்ட் நகரில் வரசித்தி விநாயகர் கோயில் கட்டப்படும்போது அந்த கட்டுமானக் குழுவில் பொறுப்பு வகித்தார்.
கமலா ஹாரிசின் தாயார் சியாமளா பேட்டி
இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசின் தாயார் சியாமலா கோபாலன் 40 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததற்குப் பிறகும் 2003-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“In Indian society we go by birth,” Shyamala explains. “We are Brahmins that is the top caste. Please do not confuse this with class, which is only about money. For Brahmins, the bloodline is the most important. My family, named Gopalan, goes back more than 1,000 years.”
“We are not born to a higher purpose,” “Karma simply means … we schlep. We do what we must, and the less we dwell on it the better”.
இந்திய சமூகத்தில் பிறப்பிற்குதான் முன்னுரிமை தரப்படும். நாங்கள் பிராமணர்கள். அதுதான் உயர்ந்த சாதி, பணத்தின் அடிப்படையில் ஏற்படும் வகுப்பு பிரிவினையுடன் இதைப் பொருத்திப் பார்க்க முடியாது. பிராமணர்களுக்கு இரத்தவழி உறவுதான் முக்கியம். எனது குடும்பப் பெயர் கோபாலன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரத்தவழி தொடர்ந்து வருகிறது. அதேபோல் இந்து மதத்தின் கர்ம வினை கோட்பாட்டின் அடிப்படையில்தான் வாழ்க்கை அமைகிறது என்று குறிப்பிடுகிறார். எத்தனை ஆண்டுகளுக்கு கடல்கடந்து சென்றாலும் பிறப்பின் அடிப்படையிலான இந்த சாதியக் கோட்பாட்டினை மட்டும் எப்படி ஒரு சமூகம் விடாது பிடித்துக் கொள்கிறது என்பதனை சிந்திக்க வேண்டியிருக்கிறது.
வெள்ளை நிறவெறியும், இந்துத்துவ சாதி வெறியும்
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்குக் குடியேறிய இந்திய உயர்சாதியினரிடம் பார்ப்பனியத் தன்மை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. நிறத்திற்கு அப்பாற்பட்ட அவர்களிடம் பார்ப்பனியத்தின் உள்ளார்ந்த பழமைவாதம் வேர்பிடித்திருக்கிறது. அந்த போக்கு அவர்களுக்கு இந்து மதம் கொடுக்கும் ரத்தவழி பிறப்புரிமை. மதத்தின் பெயரால் அவர்கள் எடுத்துக்கொண்ட உரிமை.
எப்படி ஒரு கருப்பு நிறத்தவரை தாழ்வான நபராக பார்க்கும் போக்கு அமெரிக்க வெள்ளை இன ஆதிக்கத்தவரிடம் இருக்கிறதோ அதேபோல் இந்துக்களிடம் இருக்கிறது. இந்த போக்கு சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரானது. எனவே அடிப்படையில் ஜனநாயகத்திற்கு விரோதமானது.
“தீண்டாமையும், அடிமைத்தனமும் ஐனநாயகத்திற்கு விரோதமானது. இந்தியாவின் தீண்டத்தகாதவர்களும், அமெரிக்காவின் கருப்பினத்தவர்களும் ஒரே நிலைமையில் தான் வாழ்கின்றனர்” என்று அண்ணல் அம்பேத்கர் W.E.B.Du Bois என்பவருக்கு எழுதிய “that the study of the latter is not only natural but necessary” என்ற கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்த பிறகும்கூட, தான் தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியராக இருக்குபோது, கூடவே தான் ஒரு இந்து என்ற அடையாளத்திற்கும் உட்படுகிறார். உடனே தனது சாதி குறித்தும் ஆர்வம் கொள்கிறார். பிறப்பினூடாக தனக்கு கிடைத்த சலுகையை உள்ளார்ந்து நினைத்து பெருமிதம் கொள்கிறார். இதன் காரணமாகத்தான் தாங்கள் அணியக்கூடிய கோட்டு சூட்டின் உள்ளே பூணூல் இன்னமும் மறைந்திருக்கிறது.
அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடியேறிகளின் வரலாறு
1790-ம் ஆண்டு மாசசூசெட்ஸ்(Massachusetts) பகுதிக்கு குடியேறிய சென்னைவாசிதான் அமெரிக்காவின் முதல் இந்திய குடியேறி என்று கூறப்படுகிறது. அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான கப்பலின் கேப்டன் ஒருவரின் வீட்டு வேலைக்கு சென்றார் என்று கூறப்படுகிறது. இது போன்ற கடற்படை தளபதிகளால் வீட்டு வேலைக்காக சென்ற இந்தியர்கள் அதிகம். அதன்பிறகு நாடோடி, வணிகம், கல்வி, கப்பலில் வேலை பார்த்தவர்கள் என்று படிப்படியாக அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள். 1900-ம் ஆண்டு கணக்கின்படி 1000-க்கும் குறைவான இந்தியர்கள்தான் அமெரிக்காவில் வாழ்ந்தனர்.
Immigration and Nationality Act, 1965 என்ற சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவிற்கு குடியேறினார்கள். ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 12000-க்கும் அதிகமானவர்கள் குடியேறினார்கள். அதில் குறிப்பாக பார்ப்பனர்கள் அதிகம். காலனிய ஆட்சி அதிகாரத்தில் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாக பெரும் எண்ணிக்கையில் இருந்த பார்ப்பனர்கள், இந்திய நகரங்களில் கிடைத்த அனைத்து கல்வி வாய்ப்புகளையும் பெற்றனர்.
குறிப்பாக 1950-களுக்குப் பிறகு வந்த IIT-ல் பெரும் எண்ணிக்கையில் பார்ப்பனர்கள்தான் ஆக்கிரமித்தனர். அந்த போக்கு 1973-ல் IITயில் இடஒதுக்கீடு வரும்வரை நீடித்தது. இதேபோல் மருத்துவ படிப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் அமெரிக்காவில் கிடைத்த மேல் படிப்புகளையும் அனுபவித்து வந்தனர். இந்த முதல்கட்ட குடியேறிகள் வறுமையின் காரணமாக அமெரிக்காவிற்கு குடியேறி செல்லவில்லை தங்கள் சமூக அந்தஸ்தை பொருளாதார ரீதியாக மேன்மேலும் பெருக்கிக் கொள்ளவே சென்றனர்.
பிறகு, 1980-களுக்குப் பிறகு ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் உறவினர்கள் அங்கு சென்றனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 30000-க்கு ஆதிகமானவர்கள் குடியேறியத் துவங்கினார்கள். அவர்கள் Family Cohort Immigrant என்று அழைக்கப்பட்டனர்.
அடுத்ததாக 2000-ம் ஆண்டுக்குப் பிறகு IT துறையில் வேலைக்குச் சென்றவர்கள். ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குடியமரத் துவங்கினார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அந்த எண்ணிக்கை அளவுகடந்து போய்விட்டது.
குடியேற்றத்திற்கான காரணம் வறுமை அல்ல
இந்தியாவில் இருந்து போனவர்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் அகதிகளாக செல்லவில்லை. அல்லது கருப்பினத்தவர்கள் போல் அடிமைகளாக இழுத்துச் செல்லப்படவில்லை. மாறாக தனது பொருளாதார நலன்களை பெருக்கிக் கொள்ளவதற்கும், அதீத வசதியுடன் வாழ்வதற்குமே இங்கிருந்து சென்றனர். கருப்பினத்தவர்கள் மற்றும் இத்தாலியர்களைப் போல அவர்கள் சமூக-பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் இல்லை.
அமெரிக்க சமூகப் படிநிலையில் தனக்காக சுதந்திரத்தையும் மதிப்பையும் போராடி பெறவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. மாறாக நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, வாசிங்டன் D.C, சான் பிரான்சிஸ்கோ and டலாஸ் போன்ற நகரங்களில் செழிப்பாக வாழும் உயர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கின்றனர். அமெரிக்காவில் வாழும் உயர்சாதி இந்தியர்களை the Economist பத்திரிக்கை model minority என்று குறிப்பிடுகிறது. மேலும் “good immigrants” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய மேலாதிக்கத்தில் வேறூன்றி நிற்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வெள்ளை இனவெறியர்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் சாதியப் பாகுபாடு குறித்த ஆய்வு
2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் வாழும் தலித்துகளில் 25% பேர் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கல்வி நிலையங்களில் மூன்றில் ஒரு தலித் மாணவர் நியாயமற்று நடத்தப்படுகிறார்.
60% தலித்துகள் கேலிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
40% தலித்துகளும், 14% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் பணிபுரியும் இடங்களில் சாதியப் பாகுபாட்டை உணர்ந்துள்ளனர்.
40% தலித்துகளுக்கு சாதியின் அடிப்படையில் காதல் உறவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெரும் பகுதியானவர்கள் சாதியை வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் மறைக்கவேண்டிய சூழ்நிலையிழும் வாழ்ந்து வருகின்றனர்.
பிறகு மீண்டும் 2018-ம் ஆண்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சாதியப் பாகுபாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் வாழும் தலித்துகளில் 26% பேர் உடல் ரீதியாகவும், 59% பேர் வாய்மொழியாகவும் காயப்படுத்தப் பட்டுள்ளனர். அதேபோல் 67% பேர் பணிபுரியும் இடங்களில் நேர்மையற்ற முறைகளில் நடத்தப்படுவதாக Ambedkarite South Asian organisation நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த போக்குகள் மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த சில காலமாக CISCO என்ற பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்த தலித் பொறியாளர் சாதி ரீதியாக மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்று சாதியப் பாகுபாடும், பழமைவாதமும் அதிரித்துக்கொண்டே செல்கிறது.
“இந்துக்கள் உலகத்தில் உள்ள மற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தால் இந்திய சாதிய அமைப்பு உலகப் பிரச்சனையாக மாறிவிடும்“ என்ற அண்ணல் அம்பேத்கர் கூற்று எத்தனை உண்மையானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
படம்: கமலா ஹாரிஸ் மற்றும் குடும்பத்தினர்