கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கடந்த 13-ம் தேதியிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்புடைய கொரோனா நிவாரணத் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நான்காம் நாளான மே 16-ம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
தனியார்மயம் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்
- நிலக்கரி இறக்குமதியை குறைப்பதற்காக உள்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நாட்டிலுள்ள 500 கனிமச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அலுமினிய உற்பத்திக்காக பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படும். அவை அதனை பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடலாம்.
- ராணுவத் தளவாட உற்பத்தியில் இதுவரையில் இருந்து வந்த 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலுள்ள 6 விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி
- இந்தியாவிலுள்ள 8 யூனியன் பிரதேசங்களுடைய மின் விநியோகம் முற்றிலும் தனியார்மயமாக்கப்படும்.
- விண்வெளித் துறையில் தனியார் நிறுவங்களின் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் செயற்கைகோள் தயாரிக்கின்ற, ஏவுகின்ற பணிகளில் முதலீடு செய்ய முடியும். அதற்குத் தேவையான இஸ்ரோவின் உள் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் உணவுப் பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோட்டோப்புகளை உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவத்திற்கான மானியத்தில் 30 சதவீதம் வரை அதிகரிக்கப் போவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை விரைவாக அனுமதிக்கும் வகையில் அரசின் கொள்கை முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவென்று தனி அதிகாரமிக்க செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.
கொரோனாவுக்கு முன்னரே பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, ரயில்வே துறை போன்றவற்றில் தனியார்மயத்தை புகுத்திய அரசு, கொரோனா காலத்தை தனியார்மயத்தை பரவலாக்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.
கொரோனா நேரத்தில் தனியார்மயமாக்க நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தங்கள்
கொரோனா அவசர காலத்தில்தான், மார்ச் 27-ம் தேதி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க (Environment Impact) அறிக்கை அறிவுப்புகளில் திருத்தம் 2020ஐ முன் வைத்துள்ளது. 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நடைமுறையிலிருந்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை அறிவிப்புகளில் திருத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் சுரங்கத் தொழில், விமானநிலையம், அணை கட்டுமானம் தொடர்பில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது. புதிய திட்டங்களை தொடங்குவதற்காக சுற்றுச்சூழல் துறையிடமிருந்து அனுமதி பெறுவது, மக்களிடம் கருத்து கேட்பது போன்றவை அவசியமில்லாததாக மாற்றப்பட உள்ளது.
சுரங்கத் தொழில் தனியார் நிறுவன முதலீடுகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வேலைகளை மார்ச் 27-ம் தேதியே தொடங்கிவிட்ட பின்னர் தான், மே 16ந் தேதி கொரோனாவை காரணம் காட்டி இந்தியாவின் 500 கனிமச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
அதே போன்று கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே, மின்சார விநியோகத்தில் தனியார்மயத்தை அனுமதிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கி அறிவித்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 27-ம் தேதி இந்திய நீர்வளத்துறை செயல்பாட்டு விதிகளில் ஏற்படுத்திய மாற்றங்களின் அடிப்படையில், இன்னும் சில நாட்களில் இந்தியாவிலுள்ள நீராதாரங்களை தனியார்மயமாக்கி அறிவிப்பார்கள்.
கொரோனாவுக்கு பின்னரான இந்தியாவை தனியார் பெரு நிறுவனங்களிடத்தில் அரசு ஒப்படைத்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. கொரோனாவுக்கான நிவாரணியாக தனியார்மயம் முன்னிறுத்தப்படுகிறது.
தனியார்மயக் கொள்கையை பின்பற்றிய நாடுகள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவை எதிர்கொள்வதற்காக ஸ்பெயின் நாடு தனது நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை தேசியமயமாக்குவதாவும் தெரிவித்தது. நிலவி வந்த உலக ஒழுங்கின் மீது கொரோனா எழுப்பிய மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று, பொதுத்துறை நிறுவனங்களின் அவசியம் குறித்ததானது ஆகும்.
வெளிநாட்டில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கப் பயன்பட்ட ஏர் இந்தியா, ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற உதவிய ரயில்வே துறை, மிக முக்கியமாக கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் பொது மருத்துவத்துறை என கொரோனா பெருந்தொற்று அரசு பொதுத்துறை நிறுவனங்களின் அவசியத்தை ஒவ்வொரு சாமானியனுக்கும் உணர்த்தியிருக்கிறது.
ஆனால் இந்திய அரசோ இதற்கு முற்றிலும் நேர்மாறாக தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது. கொரோனாவுக்கு நிவாரணத்தை அளிக்க வேண்டிய அரசு, அரசுத் துறைகளை தனியாருக்கு விற்று மக்களை மீள முடியாத பேரிடரில் தள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லாமும் தனியார்மயமென்றால் எல்லாமே லாபத்திற்கென்றே பொருள். எல்லாமும் லாபத்திற்கே எனும் நாட்டில் ஏழை மக்கள் எப்படி மாண்புடன் பிழைத்திருக்க முடியும்? ஏழை எளிய மக்கள் வாழ முடியாத நிலையை நோக்கி நாடாக இந்த நாடு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா!