farmers corona effect

ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வு

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு 4 வது கட்டமாக 55 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்றால் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதில் விவசாயிகள் முன்னணியில் இருக்கிறார்கள்.

திராட்சை விவசாயிகள்

தமிழகத்தில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் திராட்சை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில், ஊரடங்கு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வர முடியாததால், இந்த ஆண்டு விளைந்த திராட்சைப் பழங்களை குறைந்த விலைக்குத் தான் விற்பனை செய்ய முடிந்தது.  மேலும் ஏராளமனோர் பழங்களை அறுவடை செய்யாமல் கொடியிலேயே அழுக விட்டுள்ளனர்.

கரும்பு விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தின்  மேற்குப் பகுதியில் உள்ள  பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடியைப் போலவே, கரும்பும் முக்கியமான விளை பொருளாகும். கிட்டத்தட்ட அந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான கரும்பு இரண்டு விதமான அறுவடை காலங்களைத் திட்டமிட்டு இங்கு பயிற் செய்யப்படும். கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், அறுவடை செய்யத் திட்டமிட்டு இருந்தவர்கள் கரும்புசார் கடைகளும், இல்லாமல் வியாபாரிகளும் வராமல் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 15 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.250-லிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு கட்டு கரும்பு ரூ.130-க்குத் தான்  வியாபாரிகள் வாங்குகிறார்கள்.

திருவண்ணாமலை முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இங்கு இளநீர், தென்னை மற்றும் ஆலை கரும்பு ஆகியவை பிரதான பயிராகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செய்யாறு தாலுகாவில் 18,000  விவசாயிகளும், போளூர் தாலுகாவில் 20,000  விவசாயிகளும், கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் 5000 விவசாயிகளும், தண்டராம்பட்டு தாலுகா பகுதியில் 10,000 விவசாயிகளும் ஆலை கரும்பை விவசாயம் செய்து வருகின்றனர்.

கரும்புகள் வெட்டி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 20 நாட்களில் சுமார் 4 லட்சம் டன் கரும்பு சேதம் ஆகியுள்ளது.

கலசப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரம் விவசாயிகள் நேரடியாக வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் உற்பத்தி செய்யும் வெல்லத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.5 கோடியை போளூர் சர்க்கரை ஆலை இன்னும் தரவில்லை.

ஒவ்வொரு கரும்பு விவசாயிக்கும் ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியுடன் நிற்கிறது.

அதேபோலத்தான் தென்னை விவசாயிகளும் நிற்கிறார்கள். ஆரணி, போளூர் ஆகிய தாலுக்காகளில் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இவைகளிலிருந்து இளநீர் பறிக்கப்பட்டு கோடை காலத்தில் விற்பனை செய்யப்படும். கடந்த 50 நாட்களாக இளநீர் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வாழை விவசாயிகள்

மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதியான கொடைக்கானல் மற்றும் அதன்  சுற்றுப்புற பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலைவாழை விவசாயம் செய்யப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு  இங்கிருந்துதான் ஏற்றுமதி ஆகிறது.  ஊரடங்கின் காரணமாக  தற்போது வாங்குவதற்கு ஆள் இல்லாமல் உள்ளுர் அளவில் குறைந்த விலைக்கு விவசாயிகளே விற்று கொண்டிருக்கின்றனர்.

இதனால் வாழைப்பழங்கள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டாமல் மரங்களிலேயே விட்டுவிட்டனர். இதனால் தற்போது மலைவாழை பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகின்றன. ஓர் ஆண்டு பயிரான வாழைக்கு, செலவழித்த பணம் கூட கிடைக்காமல் விவசாயிகள் நிர்க்கதியாக உள்ளனர்.

இதே நிலைதான் விருதுநகர் மாவட்டம் வத்தராயிறுப்பு பகுதியிலும். வாழை காய்கள் வழக்கமான விற்பனையை விட குறைந்த அளவில் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் அதிக அளவிலான வாழை காய்கள் வீணாகி வருகிறது.

காய்கறிகளை விட மோசமான நிலையில் பூ விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதான  சாகுபடியில் கேந்தி பூக்களும், சேவல் கொண்டை பூக்களும் பயிர் செய்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த பூக்கள் அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஒரு கிலோ கேந்திப்பூ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த  ஆண்டு கோவில் திருவிழாக்களும் திருமணம்  உள்ளிட்ட  நிகழ்வுகளும் இல்லாதால் வயலில் அவை காய்ந்து கிடக்கின்றன.

அரசு செய்ய வேண்டியது என்ன?

2016-ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகள் தொடர் தற்கொலை நடந்ததைப் போன்ற அதே சூழலில் தான் தமிழக விவசாயிகள் இருக்கிறார்கள். அதன் துவக்கம் தான் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான திருச்சி மாவட்ட குத்தகை விவசாயி பெரியசாமி தற்கொலை செய்து கொண்டது.

நிகழ்காலத்தில் வயலில் வீணாகிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு அரசு ஒரு வழிகாட்ட வேண்டும். இந்த ஆண்டு சாகுபடி நஷ்டமானதால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தவணைகளை  தள்ளிவைக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் புதிய சாகுபடிக்கு நிபந்தனை அற்ற கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் காத்திருக்கும் விவசாயிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *