இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் தனியார் ரயில்களை இயக்குவதற்காக மோடி அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. முதல் கட்டமாக 109 வழித்தடங்களில் 151 ரயில்களை இயக்குவதற்கான அழைப்பை விடுத்துள்ளது. இதனால் இந்திய ரயில்வே துறைக்கு 30000 கோடி முதலீடு கிடைக்கும் என்று கூறியுள்ளது. இந்த 30000 கோடியை டாடாவோ, அம்பானியோ தனது சொந்த லாபத்தில் இருந்து கொடுக்கப்போவதில்லை. தேசிய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன்வாங்கித்தான் தர உள்ளார்கள். அதுவும் மக்கள் பணம்தான். கடந்த காலத்தைப் போல் வட்டி கூட முறையாக வசூலிக்காமல் அந்த கடனையும் வராக்கடன் பட்டியலில் சேர்த்து இறுதியில் தள்ளுபடி செய்துவிடவும் முடியும். இலவசமாக தேசத்தின் சொத்துகளை பனியா முதலாளிகளுக்கு கொடுக்கும் நடைமுறையின் பெயர்தான் தனியார்மயம் என்பதாக உள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட ரயில்வேதுறை இந்திய நவரத்தினத் துறைகளில் குறிப்பிடத்தக்க மக்கள் சேவை புரிந்துவருகிறது. இந்தியாவின் நடுத்தர மக்களும், ஏழை-எளிய மக்களும் நியாயமான கட்டணத்தில் எந்தவித ஆடம்பரமும் எதிர்பார்க்காமல், போதுமான அடிப்படை வசதிகளுடன் இந்தியா முழுவதும் பயணிக்கப் பயன்படுத்தும் ஒரே சாதனம் ரயில்வே மட்டுமே. அது இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கி வருகிறது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை லாபம் பார்க்கும் வடஇந்திய பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரைவார்க்க உள்ளது இந்திய ஒன்றிய அரசு.
ரயில்வேயை நம்பிப் பிழைக்கும் எளிய மக்கள்
கையில் காசில்லாமல் பசியோடு பிழைப்பு தேடி நகரத்தை நோக்கி வரும் லட்சக்கணக்கான மக்களை ரயில்கள்தான் சுமந்து வருகிறது. இதுவே அவர்களின் நம்பிக்கையான பயணம். மாற்றுத்திறனாளிகளும், எளிய மக்களும் திண்பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் விற்றுத் தங்கள் அன்றாட வாழ்க்கையை நிறைவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் நம்பி நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ரயில்பெட்டிகளில் இருந்து கூடிய விரைவில் தூக்கி எறியப்படப் போகிறார்கள்.
ரயில்வே துறைகளும், பல லட்சம் கோடி சொத்துக்களும்
இந்தியாவில் ஏறத்தாழ 21000 ரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் 14 லட்சதிற்கும் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள். ரயில் வண்டி, ரயில் நிலையங்கள், உணவு விற்பனைப் பிரிவு, டிக்கெட் விற்பனைப் பிரிவு, ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேசன், ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், எஞ்சின் தயாரிக்கும் கனரக நிறுவனங்கள், ரயில்வே உதிரிபாகம் மற்றும் மின்பொருள் தயாரிப்பு நிறுவனம், ரயில் சக்கர தொழிற்சாலைகள், ரயில்வே அச்சகங்கள், ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, கேன்டின் இதுபோன்று பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்திய ரயில்வே. அதன் சொத்து பல லட்சம் கோடியைத் தாண்டும். இந்த பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கும் இந்தியா முழுக்க உள்ள ரயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்காகவும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை தேசப்பற்றோடு அரசுக்கு வழங்கிய ஏழை விவசாயிகளின் நம்பிக்கையை மோடி அரசு சிதைத்துள்ளது.
ஏற்கனவே IRCTC-ன் 12.6% பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, அதேபோல் 5% ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேசனின் பங்குகள் மற்றும் ரயில் நிலையங்களில் WIFI வசதிகளை ஏற்படுத்தித் தரும் ரயில்டெல் நிறுவனத்தின் 10% பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்ஜின் தயாரிப்பு நிறுவனங்களையும், ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் உள்நோக்கத்திற்காக அவற்றை கார்ப்பரேசன்களாக மாற்றப்போகிறது மோடி அரசு.
வழித்தடங்களின் நிலை என்னவாகும்?
இதைத் தொடர்ந்து மோடி அரசு அரிவித்துள்ள இந்த தனியார் ரயில்வண்டிகள் இயக்கப்டும் கொள்கை மிகமேசமானது. ஏற்கனவே இருக்கும் வழித்தடங்களில் லாபம் ஈட்டக்கூடிய 109 வழித்தடங்களை பிரித்துக்கொடுப்பது ரயில்வே வருமானத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிடும். வழித்தடங்களின் சிக்னல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, கால அட்டவணையில் எந்த ரயில் வண்டிக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது புரிந்து கொள்ள முடியாததல்ல.
இரண்டே வழித்தடங்கள் உள்ள இந்திய ரயில்வேயில் அதிக கட்டணம் வசூலிக்கப்போகும் தனியார் ரயில்களுக்கு விரைந்து போக வழிவிட்டு, தாமதித்து ஒதுங்கி நிற்கப்போகிற அரசு ரயில்கள் விரைவில் ஊர்போய் சேராது என்பதே வெளிப்படை உண்மை. சிக்னல் அமைப்புகள், லோகோ பைலட்டுகள், பிளாட்ஃபார்ம் போன்றவை ரயில்வே வசமே இருக்கும் என்று பெருமை கொள்கிறது அரசு. அதாவது கூட்டிப் பெருக்கும் எடுபிடி வேலையை நாங்கள் செய்வோம். லாபத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று எளிமையாக சொல்கிறது மோடி அரசு. இந்திய அரசுத் துறையை மரணிக்கச் செய்யும் கார்ப்ரேட் வழிமுறையே இது.
ரயில்வே ஊழியர்களின் எதிர்காலம்
14 லட்சம் இரயில்வே ஊழியர்களின் குடும்பங்களையும், அவர்களுக்குக் கிடைக்கும் தொழிலாளர் நலத்திட்டங்களும், ஓய்வுதியம் போன்ற அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும். அதேபோல் ரயில்வே நிலையங்களை நம்பியுள்ள உதிரி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கிவிட்டு அந்த கட்டுமானத்தைக் கார்ப்பரேட் உணவு வியாபாரிகளுக்கு தாரைவார்க்க உள்ளது ஒன்றிய அரசு.
ரயில்வே சலுகைகளை நம்பியுள்ள எளிய மக்களின் நிலை
மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் போன்றோருக்கு கொடுக்கப்படும் ரயில்கட்டண சலுகைகளையும் கைவிடப்பபோவதாக மோடி அரசு கூறுகிறது. 150 தனியார் ரயில்களிலும் எந்த சலுகையும் தரப்படாது. கட்டணத்தை தனியாரே தீர்மானித்துக் கொள்ள மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதற்காக இந்திய மக்களை கைவிடப்போகிறார் மோடி. குறிப்பாக ஏழை மக்கள் பயணம் செய்யும் UnReserved பெட்டிகள் இருக்காது என்பது வேதனைக்கு உரியது. கடந்த சில ஆண்டுகளில் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட அதிவிரைவு ரயில்களில் ஏற்னவே Unreserved பெட்டிகள் நீக்கப்பட்டு விட்டன. இந்த வண்டிகளின் கட்டணங்கள் ஆம்னி பஸ் கட்டணத்தைப் போல் பலமடங்கு அதிகம். எதிர்காலத்தில் அனைத்து ரயில்வே கட்டணங்களும் இதுபோன்று மாற்றியமைக்கப்படும். அதேபோல் மிகக்குறைவான பயணிகள் பயணித்தபோதும் மூலைமுடுக்கெல்லாம் தனது பாதங்களை விரிவுபடுத்தி இந்தியாவின் மக்களை ஒன்றிணைத்தது ரயில்வே துறைதான். அந்த மிகப்பெரிய சேவை இங்கு லாபம் என்ற நோக்கு வரும்போது குறைவாக வருமானம் ஈட்டும் வழித்தடங்களுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. சிறிய புறநகர் பகுதிகளில் வாழும் உதிரி வியாபாரிகள் ரயில் பயணத்தினுடாக வியாபாரப் பொருட்களை குறைந்த கட்டணத்தில் நகரங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இனி அது தடுக்கப்படும். அவர்களின் வாழ்வாதரமும் பாதிக்கப்படும்.
சரக்கு ரயில்களும் தனியார்மயம்
அதேபோல் சரக்கு ரயில்களையும் படிப்படியாக தனியார்மயப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உள்ளது மோடி அரசு. நிலக்கரி, பெட்ரோல் போன்ற மூலப்பொருட்களை எடுத்துச் செல்லும் சரக்குகள் தனியார் கார்ப்ரேட்டுகளால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போது, அது ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ஏற்றிவிடும். தண்ணீர் மற்றும் உணவுபொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் ஒரு இடத்திலிருந்து அவசரத் தேவைக்கு எடுத்துப்போக தனியாரை நம்பி இருக்க வேண்டிய நிலைமைக்கு மக்களும் அரசும் தள்ளப்படுவார்கள். ஒருபக்கம் ரயில்வே சொத்துகள் மறுபக்கம் அதைநம்பி வாழும் ஊழியர்கள், அதைதொடர்ந்து பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது இந்த தனியார்மயப் போக்கு.