குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஒரு வயதுக்கு முன்பே குழந்தைகள் இறந்து விடும் நிலை உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் வயதான முதியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அதிகமாக இறக்கிறார்கள் என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களின் மருத்துவக் கட்டமைப்பு நாட்டிலேயே மிகவும் பின் தங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
நாட்டில் தொடர்ச்சியாக பிறப்பு, இறப்பு, மக்கள் தொகை பரவல், ஆண்-பெண் விகிதம் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களை நாடு முழுதும் ஆய்வு செய்து அதன் புள்ளி விவரங்கள் அரசின் சார்பில் SRS அறிக்கையில் வெளியிடப்படுகிறது. இதற்காக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும், பகுதிகள் அளவிலும் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படும். சமீபத்தில் 2018ம் ஆண்டிற்கான அறிக்கை Census India இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
குழந்தைகளின் இறப்பு விகிதம் என்பது 1000 குழந்தைகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என கணக்கிடும் அளவீடு முறையாகும். வயது வாரியான இறப்பு விகிதங்களின் (Age Specific Mortality Rate ASMR) புள்ளிவிவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளில் இந்தியாவின் மொத்த இறப்பு சராசரி விகிதம் 37.5 ஆக இருக்கிறது. ஆனால் உத்திரப் பிரதேசத்திலோ இந்த விகிதம் 68.3 ஆக இருக்கிறது. தேசிய சராசரி அளவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் இது 56.2 என்ற அளவிலும், ராஜஸ்தானில் 49.9 என்ற அளவிலும், குஜராத்தில் 41.3 என்ற அளவிலும் இருக்கிறது.
நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் மிகக் குறைவாக கொண்ட மாநிலங்களாக கேரளா, தமிழ்நாடு ஆகியவை இருக்கின்றன. யூனியன் பிரதேசமான டெல்லியும் குறைந்த இறப்பு விகிதத்தினைக் கொண்டிருக்கிறது. கேரளாவின் குழந்தைகள் இறப்பு விகிதம் 8.1 ஆகவும், தமிழ்நாட்டில் 18.5 ஆகவும், டெல்லியில் 13.1 ஆகவும் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் தான் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதனை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக தென் மாநிலங்கள் வட மாநிலங்களைக் காட்டிலும் குறைந்த இறப்பு விகிதத்தினைக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக உத்திரப்பிரதேசத்தினைப் பொறுத்தவரை 75 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்பு விகிதத்தைக் காட்டிலும், குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 64.2 ஆகவும், குழந்தைகளின் இறப்பு விகிதம் 68.3 ஆகவும் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தின் மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பதற்கு இந்த விவரங்களே சான்றாக அமைகின்றது.
குஜராத்தின் கிராமப் புறப் பகுதிகளிலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் வயதானவர்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது. குஜராத்தின் கிராமப்புற குழந்தைகளின் இறப்பு விகிதம் 52 ஆகவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 45.9 ஆகவும் இருக்கிறது. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட நரேந்திர மோடியின் குஜராத் மாடல் உண்மையிலேயே குஜராத்தின் மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை என்பதே இந்த விவரங்கள் காட்டும் உண்மை.
வயது அடிப்படையிலான இறப்பு விகிதம் அட்டவணை (Age Specific Mortality Rate)
மாநிலங்கள் | 0-1 வயது | 75-79 வயது |
இந்தியா(சராசரி) | 37.4 | 66 |
உத்திரப்பிரதேசம் | 68.3 | 64.2 |
மத்தியப் பிரதேசம் | 56.2 | 69.4 |
ராஜஸ்தான் | 49.9 | 53.4 |
குஜராத் | 41.3 | 53.4 |
சட்டீஸ்கர் | 47.7 | 125.3 |
கேரளா | 8.1 | 58 |
தமிழ்நாடு | 18.5 | 62.8 |
இதேபோல் ஒரு வருடத்தில் பிறக்கும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், இறக்கும் குழந்தைகளின் விகிதத்தினைக் கணக்கிடும் Infant Mortality Rate (IMR) அளவீடும் தமிழ்நாடு, கேரளா போன்றவையே குழந்தைகளைக் காப்பதில் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுக்கிறது. இதில் தமிழ்நாட்டின் IMR விகிதம் 15 ஆகவும், உத்திரப் பிரதேசத்தின் IMR விகிதம் 43 ஆகவும் இருக்கின்றது.
அரசாங்கத்தின் எந்த கட்டமைப்பு சீரழிந்தாலும் அதற்கு இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சிலரால் காட்டப்படுகிறது. இட ஒதுக்கீட்டால்தான் திறமை இல்லாதவர்கள் மருத்துவர்களாக வந்துவிட்டார்கள் என பரப்பப்பட்ட காலம் கூட உண்டு. இந்தியாவிலேயே அதிக இட ஒதுக்கீடாக 69 சதவீதம் தமிழ்நாட்டில் தான் நடைமுறையில் தான் இருக்கிறது. அதிக இட ஒதுக்கீடு கொண்ட தமிழ்நாடு தான் குழந்தைகளின் உயிரைக் காப்பதில் சிறந்து செயல்படுவதாக SRS அறிக்கையின் புள்ளிவிவரங்கள் நிறுவியிருக்கிறது. இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாத உத்திரப் பிரதேசம் மருத்துவக் கட்டமைப்பில் பின் தங்கியிருக்கிறது. அப்படியென்றால் இட ஒதுக்கீட்டால் மருத்துவக் கட்டமைப்பு சீரழிவதாகவும், திறமையில்லாதவர்கள் மருத்துவர்களாக ஆவதாகவும் பரப்பப்படும் கருத்துகளில் உண்மை இல்லைதானே
ASMR (Age Specific Mortality Rate) கணக்கிடும் முறை
Number of deaths in a particular age-group
—————————————————————- x 1000
Mid-year population of the same age-group
IMR (Infant Mortality Rate) கணக்கிடும் முறை
Number of infant deaths during the year
———————————————————– x 1000
Number of live births during the year