செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேட்ட கேள்விகளுக்கு இந்த தகவல்களை அளித்துள்ளது.
கொரோனா நிவாரணத்திற்கு மட்டும் நிதியில்லை
மக்கள் கொரோனாவாலும், ஊரடங்கினாலும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் கூட முறையான நிதியினை ஒதுக்காமல் பாஜக அரசு கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் தேவைக்காக 13,000 கோடி ரூபாய் நிதி கேட்டு அனுப்பிய கடிதங்களுக்கு இன்று வரை பதில் இல்லை. ஜி.எஸ்.டி மூலமாக மாநிலங்கள் இழந்த வருமானத்தை இழப்பீடாக திருப்பி அளிக்க வேண்டிய ஒன்றிய அரசு அதையும் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இப்படி மக்களை பசியிலிருந்தும், வறுமையிலிருந்தும் மீட்பதற்கு செலவு செய்யத் தயங்கும் அரசு, நாட்டை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பனியா முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது.
MSME-களின் அவல நிலை
நாட்டின் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து, ஏற்றுமதியில் 45 சதவீதத்தினை பங்களிக்கும் சிறு, குறு தொழி நிறுவனங்கள் (MSME) கொரோனா பேரிடரின் பாதிப்பினால் மிகப்பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த நிறுவனங்கள் மீள்வதற்கு இதுவரை சலுகைகளோ, வட்டியில்லா கடன்களோ அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு வரிச்சலுகை கூட அளிக்கப்படவில்லை. MSME நிறுவனங்களின் வீழ்ச்சியால் எழப்போகும் வேலை இழப்புகளை சமாளிப்பதற்காகக் கூட இவர்களுக்கு நிதி ஒதுக்காமல், ஏமாற்றுப் பேர்வழிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதற்கு மட்டும் அரசுக்கு தாராள மனமிருக்கிறது.
கடன் தள்ளுபடி விவரங்கள்
பனியா முதலாளிகளின் கடன்களின் விவரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலளிக்காத காரணத்தினால் சாகேத் கோகலே (Saket Gokhale) தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கோகலே, செப்டம்பர் 2019க்கு பிறகான பட்டியல் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
இந்த 50 நிறுவனங்களின் உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்கள். இந்த 50 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் எந்த தொழில் உற்பத்தியிலும் ஈடுபடாத வைர வியாபார நிறுவனங்களாகும்.
50 பேர் பட்டியலில் முதல் நபர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைர வியாபாரி மெகுல் சோக்சி. இவர் நீரவ் மோடியின் மாமா. நீரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேசனல் வங்கியில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு ஓடியவர். இவர் கீதாஞ்சலி ஜெம்ஸ் தவிர்த்து, தனது குழும நிறுவனங்களான கிலி இந்தியா லிமிட்டெட் மற்றும் நக்ஷத்ரா பிராண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் பெயரிலும் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டிருந்தார். கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 5492 கோடி ரூபாய் கடனும், கிலி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 1447 கோடி ரூபாய் கடனும், நக்ஷத்ரா பிராண்ட்ஸ் நிறுவனத்தின் 1109 கோடி ரூபாய் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
50 நிறுவன பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரெய் அக்ரோ நிறுவனத்திற்கு 4314 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுனத்தின் இயக்குநர் சந்தீப் ஜுன்ஜுன்வாலாவும் ஏற்கனவே மோசடி வழக்குகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வின்சம் டைமண்ட்ஸ் அண்ட் ஜீவல்லரி லிமிட்டெட் நிறுவனத்திற்கு 4076 கோடியும், ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 2850 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் 1943 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏழு நிறுவனங்களுக்கு 2000 கோடி ரூபாய்-க்கு மேலேயும், 18 நிறுவனங்களுக்கு 1000 கோடியிலிருந்து 2000 கோடி ரூபாய் வரையிலும், 25 நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய்க்கு உள்ளாகவும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடியின் நண்பர்களுக்கே இந்த கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
2014-ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இதுவரையில் 31 முதலாளிகள் நிதி மோசடிகளில் ஈடுபட்டுவிட்டு, கடன்களை திருப்பி அளிக்காமல் தப்பிச் சென்று பல்வேறு நாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்றும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 2014-ம் ஆண்டிலிருந்து 2019 செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் பெரு நிறுவனங்களின் 6.66 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய வங்கிகளுக்கு 10 லட்சம் கோடி வராக் கடன் இருக்கிறது. இவர்களிடம் கடனை திருப்பிப் பெறாமல் வங்கிகளை எப்படி காக்க முடியும்? பிறகெப்படி வங்கிகள் சாமானிய மக்களுக்கு கடன்களை வழங்க முடியும்?
இப்படிப்பட்ட உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதால் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
விவசாயக் கடன் பெற்ற விவசாயிகள், கடனை திருப்பி கட்ட இயலாத போது அடியாட்கள் மூலம் தாக்கப்படுகிறார்கள். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அதனை திருப்பிக் கட்ட இயலாத போது தேடப்படும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். ஆனால் உண்மையான குற்றவாளிகளோ வெளிநாடுகளுக்கு தப்பி மகிழ்ச்சியாய் இருப்பதோடல்லாமல், அவர்கள் விட்டுச் சென்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. என்று மாறும் இந்த அவல நிலை?