Dancer Swarnamukhi

அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

காலம் மறந்து போன, “குலப் பணியான” நடனத்தை ஆடிக்கொண்டு உலகை “சமநிலையில்” வைத்துக் கொண்டிருந்த பெண். இசை வேளாளரான சினிமா நடன இயக்குனர் பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.

சுவர்ணாவின் நாட்டிய சிறப்பைக் கண்டுகொண்ட பூபால், மகளை ஊர் ஊராக அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கரணங்களை விளக்கிக் கற்றுத் தந்தார். பின்னாளில் ஒரு பேட்டியில் தந்தை மகர்காற்றிய உதவியை சொல்லி இருக்கிறார் சுவர்ணா. சுவர்ணாவின் சிறப்பு அவரது மயில் மற்றும் பாம்பு நடனங்கள். மேடை மேடையாக கரணங்களைப் பயன்படுத்தி உடலை வில்லாக வளைத்து ஆடி நாட்டையே கட்டிப் போட்டார் சுவர்ணா.

1977ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற சர்வதேச இசை மற்றும் நடன விழாவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார் சுவர்ணமுகி. இலண்டன், பாரிஸ், ஃபிராங்க்ஃபர்ட் என்று ஐரோப்பாவிலும், அமெரிக்கா, இலங்கை, தென் கிழக்கு ஆசியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் சுவர்ணா ஆடாத மேடைகள் இல்லை. 52 நாடுகளில் மேடை ஏறி ஆடிய சுவர்ணமுகியை தமிழ்நாடு அரசின் “ஆஸ்தான நர்த்தகி” ஆக்கி அழகு பார்த்தார்கள். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தன் முதல் மாத குடியரசுத் தலைவர் ஊதியத்தை சுவர்ணமுகிக்கு அளித்து வாழ்த்தினார். சும்மா இல்லை பத்மா, “எலும்பேயில்லாத நடன மங்கை” என்று பாராட்டித்தான்!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அருகே சுவர்ணமுகி
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அருகே சுவர்ணமுகி

108 கரணங்களை ரோம் முதல் ரஷ்யா வரை ஆடித் தீர்த்தவருக்கு கலைமாமணி விருதும் வழங்கி கௌரவித்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இப்படி உலகம் முழுக்க அறியப்பட்ட சுவர்ணா ஆட்டத்தில் மட்டும் கவனத்துடன் இருக்க, நீங்கள் என்ன செய்தீர்கள் பத்மா? ஆண்டாண்டு காலமாக தேவதாசிகள் ஆடிக் கொண்டிருந்த கரணங்களை, வெகு சாமர்த்தியமாக எப்படி ஆடுவது என்று தானே ஆய்வு செய்து கண்டுபிடித்ததாக நூல் எழுதினீர்கள். துணைக்கு “மகா பெரியவாவை” அழைத்துக் கொண்டீர்கள்.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா பத்மா? 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு நீங்களும் சுவர்ணமுகியும் இணைந்து சென்ற இந்து மாநாட்டில் என்ன நடந்தது? கரணங்களை நீங்கள் ஆய்வு செய்ததாக மேடை ஏறிச் சொன்னீர்கள். ராகம் பாவத்துடன் ஆடி ஒன்றிரண்டு கரணங்களை, இயன்றதைச் செய்தீர்கள். அதே மேடையில் உடலை வில்லாய் வளைத்து ஆடிய சுவர்ணா 108 கரணங்களையும் அதன் பின் ஆடித் தீர்த்தத்தை உலகம் என்ன சொல்லிற்று? “சினிமாக்காரர்கள் முன் கலையை கடை விரிக்கிறார், வெளிநாட்டுக் காரனுக்கு முன்பாக அருவருக்கத்தக்க நடன அசைவுகள் செய்கிறார்” என்று.”சர்க்கஸ் வித்தை காட்டும் கோமாளி” என்று.

கரணங்களில் சிலவற்றை ஆடும் சுவர்ணா
கரணங்களில் சிலவற்றை ஆடும் சுவர்ணா

பிராமணப் பெண்ணான நீங்கள் “ஆய்வு செய்யும் அறிஞர்” ஆனீர்கள். இசை வேளாளரான சுவர்ணா வெறும் செப்படி வித்தைக்காரி ஆனார். தேவதாசிகள் ஆடிய கரணங்களை உங்கள் கைக்கு லாவகமாக “ஆய்வு செய்தேன்” என்று கொண்டு வந்த நீங்கள் என்ன குலம் பத்மா? அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.ஸ்ரீநிவாசன் துணையை ஏன் தேடி ஓடினீர்கள்? உங்களை விட அதிகமாக இந்தக் கரணங்களை நேசித்து ஆடிய சுவர்ணமுகி என்ன ஆனார் பத்மா? கர்த்தருக்குள் தஞ்சம் புக சுவர்ணாவைத் தூண்டியது யார், அல்லது எது பத்மா?

இயேசு நாதர் தன் கனவில் வந்ததாகவும் இனி அவரே தன் கணவர் என்றும் அவரைத் தவிர வேறு யாருக்கும் தன் கலையை அர்ப்பணிக்கப் போவதில்லை என்றும் சுவர்ணா அறிவித்த போது நீங்கள் எங்கே உங்கள் ஆய்வுகளை செய்து கொண்டு இருந்தீர்கள்? சக நடன மங்கை மேல் உங்களுக்கு உள்ளார்ந்த அக்கறை இருந்ததா பத்மா? 80களுக்குப் பிறகு தொடர் உளவியல் தாக்குதல்களுக்கு உள்ளான அந்தப் பெண் மதமாற்றம், திருமணம், ஆட மறுப்பு, மறுதலிப்பு என்று நாட்டிய உலகை விட்டு விலகி ஓட யார் காரணம் பத்மா? என்ன நடந்தது இலங்கையில்?

வெரோனிகா சுவர்ணமுகி, 2011
வெரோனிகா சுவர்ணமுகி, 2011

இன்றும் ஊழியம் செய்கிறேன், நடனம் ஆடினால் இயேசுநாதர் என்னை மன்னிக்க மாட்டார் என்று பித்து பிடித்தவர் போல நாட்டியத்தை குலத் தொழிலாகக் கொண்ட பெண்மணி சொல்லிக் கொண்டிருக்க, “தெளிவாக” இருப்பதாக காட்டிக் கொள்ளும் நீங்கள், வர்ணாசிரம தர்மம் சரியே, அவரவர் அவரவர் குலத் தொழிலை செய்தால் மட்டுமே உலகம் சம நிலையில் இயங்கும் என்று “கொரோனா கால அறிவை” எந்தத் தயக்கமும் இல்லாமல் உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் குலத் தொழிலைச் செய்யவில்லை? யாரோ ஒரு கோயில் குருவின் வீட்டில் அமர்ந்து கொண்டு புளியோதரை செய்து கொண்டிருக்க வேண்டிய நீங்கள் உலகின் மிக பிரம்மாண்ட “கரண” ஆய்வாளர், இண்டாலஜிஸ்ட் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்வது எப்படி சரி? உலகின் பாலன்ஸ் ஆட்டம் கண்டுவிடாதா?

உங்கள் மகா பெரியவாவின் வழிகாட்டுதல் படி நீங்கள் மீண்டும் உங்கள் குலத்தொழிலுக்கே திரும்ப வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அப்படியே சுவர்ணமுகி என்ன ஆனார், ஏன் ஆட மறுத்தார், இன்று அவரை அவரை பல “இந்து” ஊடகங்கள் “சர்க்கஸ்காரி”, “மதம் பிடித்த பைத்தியம்” என்று தொடர்ந்து இகழ்ந்து பேசியும் எழுதியும் வரக் காரணம் என்ன என்பதையும் சொல்லிவிடுங்கள்.

உங்களைத் தவிர கரணங்களை ஆய்வு செய்து, ஆடியும் வந்த அடையாறு லட்சுமணன், குச்சிப்புடி ஜாம்பவான் வேம்பாட்டி சின்ன சத்யம் போன்றவர்கள் ஏன் அதிகம் பேசப்படவில்லை? உங்கள் அரசியல் என்ன? அதில் மகா பெரியவாவின் பங்கு என்ன? எப்படித் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் உள் மன அழுக்கைச் சுமந்து கொண்டு உங்களால் தெய்வீகப் புன்னகை பூக்க முடிகிறது பத்மா? வர்ணாசிரம தர்மம் பெண்களாகிய உங்களை எங்கே வைத்துப் பார்க்கிறது பத்மா? சூத்திரன் அருகே.

அந்த வர்ணாசிரம அழுக்கை மண்டை முழுக்க சுமந்து கொண்டு அழுத்தமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சிறு வயது “தெய்வ நாட்டிய மங்கை” பிம்பம் உடைந்து போனதில் அளவற்ற மன அழுத்தத்தில் நான் இருக்கிறேன் பத்மா. நீங்களும் இந்த சமூகமும் சுவர்ணாவுக்கு செய்த “உதவிகளுக்கு” யார் பதில் சொல்வது? மனசாட்சி என்ற ஒன்று உங்களுக்கு இருந்தால் இனியேனும் மனிதப் பிறவியாக, கருணையின் மறு உருவான பெண்ணாக மட்டுமே வாழ முனையுங்கள் பத்மா. சுவர்ணாவை என்றாவது ஒரு நாள் நேரில் சந்தித்து அவர் ஏன் ஆடவில்லை என்று கேட்டுக் கொண்டு உங்களிடம் மீண்டும் வருகிறேன்.

நன்றி. வணக்கம்.

– நிவேதிதா லூயிஸ்

Original link of the post: https://www.facebook.com/nivedita.louis/posts/10220675226127019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *