கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் தேசங்களைக் கடந்து உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு மதச்சாயம் பூசியது ஒரு பேரிடரை கையாளும் முறையின் மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை இந்திய அரசு முதலிலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே வெளிப்படையாக இசுலாமியர்கள் மீது வெறுப்பினை பரப்பினார்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சுரேஷ் திவாரி முஸ்லீம் வணிகர்களிடம் இருந்து யாரும் எந்த பொருளையும் வாங்கக் கூடாது என வெளிப்படையாகவே பேசினார். இது குறித்து ஊடகத்தில் கேள்வி எழுப்பிய போது மீண்டும் தனது பேச்சினை நியாயப்படுத்தியே பேசினார். முஸ்லீம்கள் காய்கறிகளில் எச்சிலை துப்பி விற்பதாக தெரிவித்தார். இதே அடிப்படையில்தான் பாஜக தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த ஏராளமானோர் சமூக வலைதளங்களில் இசுலாமியர்களைப் பற்றிய பொய் செய்திகளையும், போலி காணொளிகளையும் பரப்பினர்.
பாஜக-வின் சிறுபான்மை பிரிவு அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, தப்லிகி ஜமாத் செய்தது தாலிபான் வகையிலான குற்றம் என்று பொறுப்பற்ற முறையில் பேசினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொற்றைப் பரப்பும் குற்றவாளிகளாக உருவகப்படுத்தும் வேலையை பாஜக-வின் பல்வேறு பொறுப்பாளர்கள் செய்தனர்.
டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டை மட்டும் குற்றம் சாட்டுவதற்கு முன்பு, இந்திய அரசு தனிமைப்படுத்தல் என்பதை எவ்வாறு கையாண்டது என்பதனை கவனிக்க வேண்டும்.
தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறிவுறுத்தல் வரவில்லை – கனிகா கப்பூர்
முதலில் கனிகா கப்பூர் என்ற பிரபல பாடகரின் உதாரணத்தினை பார்ப்போம். இவர் 2014 ஆண்டு முதல் பாலிவுட் படங்களில் பாடல்களை பாடி வருகிறார். இங்கிலாந்து சென்ற இவர் மார்ச் 9ஆம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். மார்ச் 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மார்ச் 9 முதல் மார்ச் 20 வரையில் அவர் பல்வேறு விருந்துகள், ஹோலி கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விருந்துகளில் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்துரா ராஜே, அவருடைய மகன் தற்போதைய பா.ஜ.க எம்.பி துஸ்யந்த் சிங் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதன் பின் நடந்த நாடாளுமன்ற கூட்ட்தொடரிலும் எம்,பி துஸ்யந்த் சிங் கலந்துகொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சில எம்.பிகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி தனிமைப் படுத்தப்பட்டனர். இதன் விளைவாக கனிகா கப்பூர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

சிகிச்சையின் போது தான் விருந்துகளில் கலந்து கொண்ட விவரங்களையும் கனிகா கப்பூர் தெளிவுற கூறவில்லை என்பதும், இங்கிலாந்து பயணத்தின் பின் தன்னை தனிமைபடுத்திக் கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டுகளாக வைக்கப்பட்டது. மேலும் அறிவுறுத்தப்பட்ட பின்பும் தனிமைபடுத்திக் கொள்ளாமல் பல்வேறு சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் இம்மாதம் 26-ம் தேதி ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தான் கொரோனா தொற்று பாதித்த எவருடனும் தொடர்பில் வரவில்லை எனவும், பயணத்தின் பின் அவருக்கு தன்னை தனிமைபடுத்திக் கொள்ளும்படி எவ்வித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான பயண அறிவுரை மார்ச்18-ம் தேதி தான் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இந்தியா வந்தது மார்ச் 9-ம் தேதி ஆகும். ஜனவரி 30-ம் தேதி நிலைப்படி தமிழ்நாட்டில் மட்டும் 78 பேர் சீனா சென்று திரும்பிய காரணத்தால் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் மார்ச் 9-ம் தேதி நாடு திரும்பிய கனிகா கப்பூர் போன்றவர்கள் தனிமைபடுத்தப்படாதது, அவர்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பதாலா, இல்லை அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான பிரபலங்களாக இருப்பதாலா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட பின் இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது?
உலகின் முதல் கொரோனா தொற்று டிசம்பர் மத்தியில் உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு தெரிவித்தபடி ஜனவரி 30-ம் தேதி வரையில் தமிழ்நாட்டில் மட்டும் சீனாவில் இருந்து வந்த 78 நபர்கள் தனிமைபடுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன் பின் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று சனவரி 30-ம் தேதி உறுதி செய்யப்பட்டு விட்டது.
அப்படி இருந்த போதும் பிப்ரவரி 24-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கு பெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதில் ஒரு லட்சம் மக்கள் பங்கு கொண்டனர்.
மேலும் மார்ச் 10-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாட்டம் பிரதமரின் பங்கேற்புடன் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டது. பின்னர் அந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என இந்தியப் பிரமர், குடியரசுத் தலைவர், உ.த்தரப் பிரதேச முதல்வர் மற்றும் சில மத்திய அமைச்சர்களும் மார்ச் 4-ம் தேதிதான் தெரிவித்தனர். பிரதமர், அமைச்சர்கள், குடியரசு தலைவர் ஆகிய முக்கியத் தலைவர்கள் பங்கு பெறும் ஹோலி சிறப்பு நிகழ்ச்சி மட்டுமே மார்ச் 4ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் மக்கள் அதிகமாக பங்குபெறும் சமூக கூட்டங்கள், ஆன்மீகக் கூட்டங்கள் விழாக்களை ரத்து செய்யுமாறு அதிகாரப்பூர்வ வலியுறுத்தல்கள் மார்ச் 13ஆம் தேதி தான் வெளியிடப்பட்டது. இதுவும் கூட மக்களுக்கு புரியும்படியான எச்சரிக்கையாகவும், பல மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடபட்டிருந்த கூட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமான கண்டிப்புகளை கொண்டதாகவும் அமையவில்லை.
மேலும், மார்ச் 13-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடும் இந்தியாவின் மத்திய சுகாதார துறை கொரோனா ஒரு சுகாதார அவசரநிலை இல்லை (COVID-19 is not health emergency) என பொறுப்பின்றி சொன்னது.
மார்ச் 10ஆம் தேதி பல்வேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டங்களும், மார்ச்12-14 வரை தேதி சீக்கியர்களின் ஆன்மீக விழாவான ஹோலா விழாவும் நடத்தபட்டது. இதில் தினமும் 3லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ஏறக்குறைய அதே நேரத்தில்தான் மார்ச்13-15 தேதிகளில் டில்லியில் தப்லிகி ஜமாத் கூட்டம் நடபெற்றது. அதில் மொத்தம் 3000 பேர் கூடுகின்றனர். அது வரையில் இந்தியாவில் கொரோனா குறித்தான கூட்டங்களையோ, அறிவிப்பையோ நேரடியாக வெளியிடாமல் மார்ச்15-ம் தேதி சார்க் நாடுகளின் தலைவர்களோடு மோடி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
பிப்ரவரி 1-ம் தேதி கூட்டப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மார்ச்23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. மார்ச் 19-ம் தேதி இரவுதான் பிரதமர் மோடி இந்திய மக்களோடு உரையாடினார். மார்ச் 22 ஒருநாள் மட்டும் மக்கள் ஊரடங்காக அறிவிக்கப்படுகிறது.
அதன் பின் மார்ச்25 முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. அதே நாள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போதே உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமநவமி சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
ஜனவரி 30-ல் இந்தியாவில் துவங்கிய கொரோனா படத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுவிட்டு, அத்தனை பழிகளையும் தூக்கி குறிப்பிட்ட மதத்தாரின் மீது போடப்பட்டுவிட்டது. இந்த வெறுப்புப் பிரச்சாரம் பரப்பப்பட்டது முதல் இன்று வரை தொடர்ச்சியாக நாடு முழுதும் பல பகுதிகளில் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பல இடங்களில் இசுலாமியர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம அப்படியான இனஒதுக்கலை கொண்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகள். இவற்றிற்கெல்லாம் பாஜக அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.