மோடி தேவேந்திர குல வேளாளர்கள்

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் கடந்த 14-ம் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி தேவேந்திரகுல வேளாளர்களைப் புகழ்ந்து 9 நிமிடங்கள் பேசுவதும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரை அங்கீகரிப்பதும், மறுநாள் தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் அந்த சமூகம் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பரம் வெளியாவதும் என்று ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் தங்கள் வரலாற்று கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைப்பதுமாக சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில் தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாற்று கோரிக்கை நிறைவேறிவிட்டதா?

பல நூற்றாண்டுகளாக தங்கள் அடையாளத்தை இழந்து இருந்ததாக அந்த சாதித் தலைவர்கள் கருதுகிறார்கள். அது மீட்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது மட்டுமே அந்த சமூகத்தை உயர்த்தப் போதுமானதா?

பல்வேறு சமூக நலக் குறியீடுகளில் தங்கள் மக்களை முன்னேற்ற மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நவீனகாலத்தில், பல்லாயிரக்கணக்கான சாதிகளைக் கொண்ட இந்திய சமூகத்தில் பெயர் மாற்றம் மட்டுமே ஒரு சாதியை முன்னேற்றிவிட்டதைப் போன்று விளம்பரப்படுத்துவதும் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை?

வெறும் பெயர்களை வைத்தே ஒவ்வொரு சமூகத்தையும் முன்னேற்ற முடியும் என்றால் ஏன் ஒவ்வொரு ஆண்டும் மோடி அரசு பல லட்சம் கோடிகளில் பட்ஜெட் போட்டு திணறிக்கொண்டு இருக்கிறது?

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து, போக்குவரத்து என்று பல சமூகநலக் குறியீடுகளில் தமிழ்நாட்டு மக்களை விட 40 வருடங்கள் பின்தங்கிய பல கோடி சமூகங்கள் வட இந்தியாவில் இருக்கின்றது. அவற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் கூலிகளாக அகதிகளைப் போல வாழ்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் ஒரு பெயரை வைத்து முன்னேற்றிவிட முடியுமா? அவர்கள் வாழ்க்கைத்தரம் மாறிவிடுமா?

சரி தேவேந்திரகுல வேளாளர்களை முன்னேற்ற வேண்டாமா? நிச்சயமாக முன்னேற்ற வேண்டும். ஆனால் எப்படி?

பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக, நகரங்களில் முறைசாரா தொழிலாளர்களாக, கல்வி – பொருளாதாரத்தில் மிகவும் வரிய நிலையில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களை எப்படி முன்னேற்றுவது?

தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்க்கைத் தரம் என்ன? அந்த மக்களில் எத்தனை சதவீதம் பேர் கல்வி கற்க வருகிறார்கள்? ஆண்கள் எத்தனை? பெண்கள் எத்தனை? அவர்களில் எத்தனை பேர் அரசு பள்ளிகளை நம்பி இருக்கிறார்கள்? எத்தனை பேர் தனியார் பள்ளிகளில் சேர முடிகிறது? நரேந்திர மோடியின் பணக்கார நண்பர்களின் குழந்தைகள் படிக்கும் 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் கொண்ட வகுப்பு என்ற தரமான கல்வியை தேவேந்திரகுல வேளாள குழந்தைகள் அடைய  இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? (இது அனைத்து சமூகங்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும்). தேவேந்திரகுல வேளாளர்களின் எத்தனை பேர் பள்ளி முடித்து கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைகிறார்கள்?

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் தேவேந்திர குல வேளாளர்களின் நிலை என்னவாக இருக்கிறது?

இந்தியாவினுடைய உயர்ந்த கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் நுழைய முடிந்திருக்கிறதா? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், JNU போன்ற மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்குள் இன்றைக்கு தேவேந்திரகுல வேளாளர்கள் இருக்கும் SC பட்டியலில் இருக்கும் பேராசிரியர்கள் எத்தனை பேர்?, மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உதாரணமாக சென்னை ஐ.ஐ.டி-யில் இருக்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை (படம் 1, 2) கடந்த மாதம் இந்து நாளேடு உள்ளிட்ட பல ஊடகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்தியாவில் உள்ள 5 பழமையான ஐ.ஐ.டி-களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.

தகவல்: தமிழ் செய்தித் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட தகவல்களின் Screenshot – நன்றி – புதிய தலைமுறை

கடந்த வாரம் மதுரை MP சு.வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சரிடம் இருந்து பெற்ற பதில் நம் நிலை என்ன என்பதை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். 

  • இந்தியா முழுதும் மொத்தம் இருக்கும் 23 ஐ.ஐ.டி-களில் உள்ள 7186 முனைவர் பட்ட இடங்களில் மக்கள் தொகையில் 41% இருக்கும் OBC மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 1635. வெறும் 22%.
  • மக்கள்தொகையில் 20% இருக்கும் SC மாணவர்களின் எண்ணிக்கை 707 பேர் வெறும் 9%.
  • மக்கள்தொகையில் 9% இருக்கும் பழங்குடியின மாணவர்கள் 321 பேர், வெறும் 4%. 

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் நிலை என்றால் இந்த மக்களின்பால் உண்மையான அக்கறை கொண்ட பிரதமராக இருந்திருந்தால் உடனடியாக இதை சரி செய்ய முயன்றிருப்பாரே தவிர இப்படி நரேந்திரர் – தேவேந்திரர் என்று பெயரை மட்டுமே சாதனையாக சொல்லி ஏமாற்றமாட்டார் இல்லையா?

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த SC பட்டியலில் இருந்த ரோஹித் வெமுலாவும் கொல்லப்பட்டார், OBC பட்டியலில் இருந்த சரவணனும் கொல்லப்பட்டார் என்றால் உண்மையில் அதுபோன்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களில் வாழ்பவர்கள் யார்?

என்னதான் செய்திருக்கிறார் தேவேந்திரர்களுக்காக நரேந்திரர்?

  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகளுக்குள் எத்தனை தேவேந்திரகுல வேளாளர்கள் நுழைய முடிந்திருக்கிறது?
  • தேவேந்திரகுல வேளாளர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர, IAS, IPS , IFS போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வர அதற்கான உயர்ந்த கல்வி கட்டமைப்புகளுக்குள் நுழைய வேண்டும். நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு ஆட்சியில் அவர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டதா?
  • “நரேந்திரன்” “தேவேந்திரன்” என்று ஒப்பிடும் மோடி தன் 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரர்கள் வாழும் பகுதிகளில் எத்தனை மத்திய பள்ளிக்கூடங்களை திறந்து வைத்திருக்கிறார்?
  • எத்தனை தேவேந்திரர்கள் மருத்துவம் படிக்க நீட் உதவி செய்திருக்கிறது? நீட் தேர்வுக்கான பயிற்சி என்பது குறைந்தபட்சம் 80,000 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேவேந்திர குல மாணவர்கள் அப்படியான வாய்ப்பினைப் பெற நரேந்திர மோடி அரசாங்கம் என்ன செய்தது? தமிழக சட்டமன்றத்தின் நீட் வேண்டாம் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டது. ஆக இந்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டாமா?
  • எத்தனை தரமான மருத்துவமனைகள் நரேந்திர மோடி கொண்டுவந்தார்? கடந்த 7 ஆண்டுகளிலும் அதற்கு முந்தைய காலத்திலும் இன்றுவரை ஒன்றிய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் ஒரு செங்கல்லில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. நாம் யோசிக்க வேண்டாமா?
  • கார்ப்பரேட்டுகளுக்காக 3 விவசாய மசோதாக்களை கொண்டுவந்த மோடி மருதநில மக்கள், நெல்லைக் கண்டுபிடித்த விவசாயக்குடிகளான தேவேந்திரர்களுக்காக கொண்டுவந்த விவசாய திட்டங்கள் எத்தனை?
  • சுருக்கமாக இந்த 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முன்னேற்ற நரேந்திர மோடி முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன? என்று சிந்திப்பதின் திசைவழியில்தான் ஒரு சமூகம் தனக்கான நண்பர்களைக் கண்டறிய முடியும்.

மொத்த தமிழ்ச்சமூகமும் சந்திக்கும் சிக்கல்

அடுத்து மேலே தேவேந்திரகுல வேளாளர்களுக்கு இருக்கும் அத்தனை சிக்கல்களும் பிற தமிழ்சமூகங்களும் சந்திக்கும் சிக்கல்கள் இல்லையா? மொத்த தமிழ்சமூகமும் ஐ.ஐ.டி, எய்ம்ஸ்க்குள் நுழைய முடியாமல் தவிக்கிறது. மொத்த தமிழ்சமூகமும்  நீட் தேர்வால் மருத்துவக் கனவை தொலைக்கிறது. GST வரியால் மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய பல்லாயிரக்கணக்கான வரிபாக்கியை மோடி அரசு தரமறுப்பதால் பல்வேறு மக்கள்நலத் திட்டங்கள் முடங்கிப் போயிருக்கின்றன. 

GST, நீட், புதிய கல்விக் கொள்கை, மின்சாரக் கட்டண உயர்வு, கல்விக்கட்டண உயர்வு இவையெல்லாம் ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தையும் பாதிக்கும் சிக்கல்கள். தமிழில் தேர்வெழுத முடியாமல் இருப்பது தேவேந்திரகுல வேளாளர்களை மட்டும் பாதிக்கும் விஷயம் கிடையாது இல்லையா? அப்படியென்றால் தேவேந்திரகுல வேளாளர்களாக தனித்த உரிமைகளுக்காக போராடுவது மட்டுமின்றி, தமிழ்ச்சமூகமாக பல்வேறு உரிமைகளுக்காக நிற்க வேண்டியிருக்கிறது என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

இறுதியாக ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது வேறெதையும் விட அந்த சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், அரசியல் அதிகாரத்தில்தான் இருக்கிறது என்பதற்கு பாஜகவின் ஆட்சியிலேயே உதாரணத்தைக் காண முடியும். ராமர் கோவில் கட்டுவது பார்ப்பனர்களின் 90 ஆண்டு நீண்ட கனவு ஆனாலும் ஆட்சிக்கு வந்த முதல்முறை அவர்கள் செய்தது பார்ப்பன உயர்சாதிகளுக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதுதானே தவிர ராமர்கோவில் அல்ல. அந்த அளவிற்கு எது அதிகாரம் என்பதில் தெளிவிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் நம்மை மட்டும் முட்டாள்களாக நினைக்கிறாரா நரேந்திர மோடி?

வெறுமனே பெயரை சொல்லி பெருமைப்படுத்தினாலே போதும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏமாற்றி விடலாம் என்று நம்புகிறாரா பாஜக நம்புகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *