வர்க்கீஸ்

ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி

1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.

தனது 16-வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார். 

உண்மைகளை கடிதமாக எழுதிய ராமச்சந்திரன்

தன்னுடைய உயர் அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தி கொலை செய்யவைத்தது தவறு என்றும், ஆனால் அதைச் சொன்னாலும் யாரும் கேட்கவில்லை, இந்த உண்மைகள் காவல்துறையோடு அமுங்கிவிடக் கூடாது என்று தனக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார்.  ஆனால் அப்போது அது வெளியாகவில்லை. 

மலையாள மனோரமாவில் ராமச்சந்திரனின் கடிதம் பிரசுரமானது. அந்தக் கடிதம் வர்க்கீஸைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி தோழர் வாசுவுக்கு வாக்குமூலம் கொடுத்த கடிதம் ஆகும்.

தண்டனைக்கு அஞ்சவில்லை

உண்மை வெளிவரத் துவங்கியதால் கொஞ்சம் நிம்மதி கொள்ளத் தொடங்கினார் ராமச்சந்திரன். சி.பி.ஐ ராமச்சந்திரன் மேல் வழக்கு பதிவு செய்தது. வர்க்கீஸை சுட்டுக்கொன்ற வழக்கில் ராமச்சந்திரன் முதல் குற்றவாளியாக  இருந்த போதும்,தனக்கு தண்டனை வழங்கப்படும் என்று  தெரிந்தும் துணிச்சலாக உண்மைகளை வாக்குமூலமாக முன்வைத்தார்.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காவலர் ராமச்சந்திரன் நாயர்

என்னை தண்டியுங்கள்; என்னுடனிருக்கும் சக குற்றவாளிகளும் தண்டிக்கப்படட்டும்

 “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்கள் எதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்றும், “நீதிமன்றம் என்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாக சிறையிலடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கடைசி ஆசை” என்றும், ஆனால் ”தன்னுடனிருக்கும் சக குற்றவாளிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்” என்றும் எழுதியிருப்பார்.

இந்த புத்தகம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல. முப்பத்தி மூன்றரை வருடங்கள் காவலராக வாழ்ந்த ஒருவர், அப்பட்டமாக எல்லாவற்றையும் திறந்து காட்டும் ஒரு சுயசரிதையும் கூட.

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி புத்தகம்

ராமச்சந்திரன் நாயர் ஆயுதப் படைப் பிரிவில் கேரளாவில் பணியிலிருந்தவர். கேரளாவில் போலீஸுக்குச் சங்கம் அமைக்க வேண்டும் என்று போராடியவர்களுள் இவரும் ஒருவர். 

ராமச்சந்திரன் புத்தகத்தின் அடிப்படையில் வெளிவந்திருக்கும் தீர்ப்பு

ராமசந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. கேரள அரசு வர்க்கீஸ்  குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ராமசந்திரன் நாயரின் வாக்குமூலம் புத்தக வடிவமெடுத்து ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போலி மோதல் கொலைகள் குறித்து பெரும் விவாதம் நிகழ்த்தப்பட்டது. ஆனாலும் இன்றும்  இந்தியா முழுவதும் போலி மோதல் கொலைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. கேரளாவிலும், கேரள வனப்பகுதியிலும் தண்டர்போல்ட் படைகள் எனும் பெயரில் கேரள காவல் படை ஒன்று  வனப்பகுதிக்குள், மக்கள் உரிமைகளுக்கு போராடுபவர்களை ஒடுக்க உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இன்னும்  போலி மோதல் கொலைகள் நடத்தப்படுகின்றன.

முகப்புப் படம்: வர்க்கீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *