போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும்  வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான நிதிப் பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே இழுத்தடிப்பது ஒருயுத்தியாக கையாளப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படியே இன்னும் வழங்கப்படவில்லை.  அதேபோல ஓய்வுபெற்ற ஊழியர்கள் இறந்துவிட்ட சூழலில் அவர்களது மனைவிக்கு வாழ்வாதாரமாக கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பணமும் போக்குவரத்துக் கழகங்களால் சரியாக வழங்கப்படுவதில்லை.

இதுமட்டுமில்லாமல் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு தொகைகளும் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதால் வேலை நிறுத்தத்திற்கான தகவலை தொழிற்சங்கங்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுப்பியிருக்கின்றன. 

இது தொடர்பாக நாளை தொழிலாளர் ஆணையத்தின் முன்னாள் அரசு மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர் ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

இது குறித்து மெட்ராஸ் ரேடிகல்ஸ்-சிடம் பேசிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள MTC சென்னை உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, 2019 ஏப்ரல் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 6,227 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த தொழிலாளர்கள் அனைவரும் 25 முதல் 35 ஆண்டுகள் வரை போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தவர்கள். 

இவர்களுடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்குவதற்கு போக்குவரத்துக் கழகங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டப்படியான ஓய்வூதியப் பலன்கள் எதையும் அரசாங்கம் இன்று வரையிலும் அவர்களுக்கு வழங்கவில்லை. சட்டத்தின்படி ஓய்வுபெறும் நாளில் இவை அனைத்தும் வழங்கப்பட வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒட்டு மொத்த தொகையின் மதிப்பு 1625 கோடி ரூபாய் என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. 

இந்த பணம் தொழிலாளர்கள் தங்களுடைய இறுதி காலத்தில் வாழ்வதற்காக அல்லது குழந்தைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்காக திட்டமிட்டு சேமித்த பணம். இதனை வழங்க தாமதப்படுத்துவதால் பல குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள். 

ஆனால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்பும், தமிழக அரசு அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இருக்கிறது. இதனால் இந்த ஓய்வுபெற்ற ஊழியர்களில் பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பல குடும்பங்களில் இதனால் திருமணங்கள் தள்ளிபோய்க் கொண்டே இருக்கின்றன. ஆனால் மாநில அரசு இதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக 2019 ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை ஓய்வு பெற்றுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கு சேர வேண்டிய கிராஜூவிட்டி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பலன்களையும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கொடுக்க வேண்டும். அதேபோல தொழிலாளர்களின் துணைவியருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பணம் உள்ளிட்டவற்றையும் சரியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *