இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக கோதுமை அல்லது நெல்லை வாங்கினாலோ விற்றாலோ மூன்று ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் மசோதாவினை நிறைவேற்றியுள்ளது பஞ்சாப் அரசு.
இன்னொரு மசோதா உணவு தானியங்களின் கருப்பு சந்தையினை தடுப்பதற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, ஒன்றிய அரசின் மூன்று மசோதாக்களை எதிர்த்து தீர்மானங்களை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். மேலும் மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிரான திருத்தத்தையும் நிறைவேற்றினார்.
இந்த கூட்டத் தொடருக்கு முன்பாகவே பஞ்சாபின் அமைச்சரவையானது முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ”எந்த பின்விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டப்பூர்வ முடிவுகளை முடிவெடுக்கலாம்” என்ற அதிகாரத்தினை வழங்கியது. இந்த கூட்டத்தொடருக்கு செல்லும்போதே பஞ்சாபின் வரலாற்றில் மிக முக்கியமான கூட்டத்தொடருக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் பதிவிட்டிருந்தார்.
”இதன் காரணமாக எனது அரசு கலைக்கப்பட்டாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. விவசாயிகளே நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீங்கள் எங்களுடன் நிள்ளுங்கள்” என்று முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களும், மின்சார சட்டத் திருத்த மசோதாவும் விவசாயிகளின் நலனுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கும் எதிரானவை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விவசாயம் மாநிலப் பட்டியலில் இருப்பதாகவும், இந்த சட்டங்கள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானவை என்றும் கூறினார். இந்த புதிய சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
பஞ்சாபின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இந்த மசோதாக்கள் சட்ட வடிவம் பெறுவதற்கு ஆளுநரின் அனுமதி வேண்டும். ஆளுநர் இந்த மசோதாக்களை கிடப்பில் வைத்து குடியரசுத் தலைவருக்கும் அனுப்ப இயலும்.
இருப்பினும் பஞ்சாப் அரசின் இந்த செயலானது வேளாண் சட்டங்களை எதிர்த்த அனைத்து தரப்பினரின் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பிற மாநில அரசுகளும் இதே போன்ற மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளன.