அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடஅமெரிக்கா பகுதிகளில் ஒன்றான அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் (Prince William sound) பகுதியில் உள்ள மலைகளில் தான் இந்த இயற்கை சீற்றம் ஏற்படப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது பயணக் கப்பல்கள் உட்பட வணிக மற்றும் பொழுதுபோக்கு படகுகள் வந்து செல்லும் சுற்றுலா தளமாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விஞ்ஞானிகள் குழு கூடி அலாஸ்காவின் இயற்கை வளத் துறையிடம் ஒரு திறந்த கடிதத்தை அளித்துள்ளனர்.
பிரின்ஸ் வில்லியம் சவுண்டின் கிழக்குப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் தாக்கம் பேரி ஆர்ம் மலைச்சரிவுகளுக்கு மேலே 97 கி.மீக்கு மேல் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டதில் பேரி ஆர்ம் பனிப்பாறை உருகுவதைத் தொடர்ந்து, பனிப்பாறைகளுக்கு கீழே பேரி ஆர்ம் மலைப் பாறைகளில் செங்குத்தான சரிவு உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது. தற்சமயம் பேரி ஆர்ம் மலைகளில் சரிவுகள் மெதுவாக ஏற்பட தொடங்கி விட்டதாகவும், இந்த சரிவு அதிகரிக்குமானால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கணிக்கின்றனர்.


“நீருக்கு மேல் உள்ள மலையின் உயரம், சரியும் நிலத்தின் அளவு மற்றும் மலையின் சாய்வின் கோணம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும்போது, இந்த முறை சரிவு ஏற்பட்டால் அது 1958-ம் ஆண்டு அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமியை உருவாக்கிய சரிவைக் காட்டிலும், 16 மடங்கு அதிக சிதைவினையும், 11 மடங்கு அதிக ஆற்றலையும் வெளியிடும் என்று தெரியவருகிறது” என்று ஓஹியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் சுன்லி டாய்(Chunli Dai) தெரிவித்தார்.
இந்த கணக்கீடு உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதுவரை பதிவாகாத அளவைவிட மிக உயரமான சுனாமி (கிட்ட தட்ட 524 மீட்டர் உயரம் வரை உருவாகும்) பேரலை உருவாகும் ஆபத்து இருக்கிறது.
2015-ம் ஆண்டு இதே போன்ற மலைச் சரிவினால் டான் ஃபியார்ட்(Taan Fiord) பகுதியில் ஏற்பட்ட சுனாமி அலை 193 மீட்டர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
கனமழை, நீடித்துப் பெய்யும் மழை அல்லது பூகம்பங்கள் அல்லது பனிப்பாறையை உருக வைக்கும் அதீத வெப்பமான வானிலை போன்றவை மெதுவாக சரிந்து வரும் மலையை வேகமாக சரியத் தூண்டுவதற்கான காரணிகளாக அமையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்திற்கேற்ப, நிலப்பரப்பு தன்னை பொருத்திக் கொள்ள சிறிது காலம் எடுக்கும். ஆனால் மலைப் பகுதிகளில் ஒரு பனிப்பாறைகள் விரைவாக உருகினால், அவை படிப்படியாக சரி செய்துகொள்வதற்கு முன்னமே பேரழிவுகரமாக முடியக்கூடும் என அலாஸ்காவின் ‘கிரவுண்ட் ட்ரூத்’ எனும் நிறுவனத்தின் புவியியலாளர் பிரெட்வுட் ஹிக்மேன் ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதில் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கும் முக்கிய விஷயம் என்னவென்றால் காலநிலை மாற்றத்தின் காரணமாக இது போன்ற விரைவான பனிப்பாறை உருகுதல் மற்றும் அதன் தாக்கங்கள் அலாஸ்காவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் இதேபோன்ற நிலச்சரிவு மற்றும் சுனாமி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.