அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகியதால் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

கலையரசன் ஆணையம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு என்பதனைக் கருத்தில் கொண்டு நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

இதனையடுத்து தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5% சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவெடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில் செப்டம்பர் 15 அன்று ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீடு யார் யாருக்கு கிடைக்கும்?

இந்த சட்ட வரைவின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர், மாற்றுத் திறனாளிகள் நலன், வனம், சமூகப் பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள். அத்துடன் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வேறு பள்ளிகளில் பயின்று, பின்னர் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் ஆகியோருக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும்.

கடந்த செப்டம்பர்  15-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட வடிவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த சட்டத்தினை நிறைவேற்றாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த மாட்டோம் என்று நீட் தேர்வு முடிவிற்கு பிறகு தமிழக அரசு காத்திருக்கிறது.

இந்த ஒதுக்கீட்டினை அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் கீழ்தான் வருகிறதா என்பது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த வழக்கறிஞரும் திமுக பாராளுமன்ற உறுப்பினருமான திரு வில்சன் குறிப்பிட்டதாவது: 

வழக்கறிஞர் வில்சன்

இந்த 7.5% சதவீத ஒதுக்கீடு மாநில அரசுக்கு அனுமதிக்கபட்டது தான். மாணவர்களை அரசு பள்ளி, அரசு அல்லாத பள்ளி என்று வகைப்படுத்துகிறார்கள். இது பட்டியல் பிரிவு, பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு  போன்றது அல்ல. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது தான். 

இதேபோன்றுதான் 1999-ம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அந்த அரசாணை மூலமாக உள்ஒதுக்கீடு அளிக்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கிலும் மாநில அரசிற்கு இந்த உரிமை உண்டு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அதனால் மாநில அரசிற்கு இரண்டு வகையிலான அதிகாரங்கள் இருக்கிறது ஒன்று சட்டம் கொண்டுவருவது. இன்னொன்று மாநில அரசே பிரிவு 162-ன் அடிப்படையில் அரசாணை வெளியிட்டே கொண்டுவரலாம். இந்த வழியை மாநில அரசு பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து என்று கூறியுள்ளார்.

எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்?

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறியிருப்பதாவது:

மருத்துவர் ரவீந்திரநாத்

நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தமிழக ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வருவது தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு நீட் நுழைவு தேர்விற்கு நிரந்தர விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையே. இருந்தாலும் கூட இன்றைக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் சட்டம்  நிறைவேற்ற பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றி பல நாள் ஆகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்க வில்லை. ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியாது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *