உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் ஆசிட் வீச்சு தாக்குதல் என்பது பாலினப் பாகுபாடின் அடிப்படையில் நிகழும் குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளது. குறிப்பாக காதல், கல்யாணம், வரதட்சணை போன்ற சிக்கல்களால் பெண்கள் மீது நடத்தப்படுகிறது. இதற்கு மாறாக இங்கிலாந்து நாட்டில் ஆசிட் வீச்சுகளில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஆண்களாக இருப்பதுடன் இந்நாடுகளில் இதற்கான பின்னணி இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருக்கிறது.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வகையிலும் தாக்குதலில் பாதிக்கப்படப் போகிறவர்களை கொல்வதற்குப் பதிலாக அவர்களை மோசமாக காயப்படுத்துவதற்காக செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் நபர் நீடித்த உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான துன்பங்களோடு இறுதிவரை தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு தள்ளப்படுகிறார்கள்.
தேசிய குற்ற ஆணவக் காப்பகம் (NCRB- National Crime Record Bureau) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 2014 முதல் 2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 1,500 பேர் ஆசிட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் தினமும் ஒருவர் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மறுமுனையில் இந்தியாவில் ஆசிட் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆசிட் வீச்சு தாக்குதல்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.
துரிதமான விசாரணை மற்றும் தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதன் காரணமாக நாள்தோறும் தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கை காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“நீங்கள் இங்கே நீதிக்காக போராடுகிறீர்கள், காலப்போக்கில் நீங்கள் அதில் நம்பிக்கையை இழக்கிறீர்கள். தாக்குதல் நடத்தியவர்கள் தாங்கள் எதையும் செய்ய முடியும் என்றும், அதில் இருந்து எளிமையாக தப்பித்து விடலாம் என்றும் நினைக்கிறார்கள்” என வருடத்திற்கு 250 ஆசிட் வீச்சு வழக்குகளை எதிர்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர் பிரக்யா தெரிவிக்கிறார்.
ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிப் பிழைப்பவர்கள் பெரும்பாலும் சமூகத் தொடர்புகளைத் தவிர்த்து தங்கள் மீதி வாழ்க்கையை தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆசிட் தாக்குதலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் பற்றிய ஆய்வில் மூன்றில் ஒரு பகுதியினர் கவலை, மனச்சோர்வு மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மீதான தாக்குதல்களில் சினிமாக்களின் விளைவு
பெண்களின் மீதான இம்மாதிரியான தாக்குதலுக்கு சினிமா கலாச்சாரமும் ஒரு தூண்டுதலாக அமைகிறது. திரைப்படங்களில் வருகிற Item Songs எனும் ஒரு Genre தொடர்ச்சியாக பெண்களை ஆண்களின் போகப் பொருளாக சித்தரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சமூகத்தில் புரையோடியுள்ள ஆணாதிக்க மனநிலையை இம்மாதிரியான விடயங்கள் வலுப்படுத்துகின்றன. இந்த மனநிலை ஆணுக்கு பெண் தன்னுடைய உடைமை எனும் சிந்தனையை வலுப்படுத்துகிறது. தன் உடமை தன் பேச்சை மீறி நடந்தால், அதனை செயலிழக்கச் செய்துவிட வேண்டும் என்பது ஒரு கொடூர உணர்வாக உருவெடுக்கிறது.
மேலும் ஒரு பெண்ணின் வெற்றி, தோல்வி, வாழ்க்கை அனைத்து அழகு சார்ந்த விடயமாக மட்டுமே முன்னிறுத்தப்படுவதால், அந்த அழகினை அழித்து விட வேண்டும் என்பது ஒருவனின் பழிவாங்கும் சிந்தனையாக மாற்றப்படுகிறது. இந்த சிந்தனையை திரைப்படங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றன. ”அடிடா அவள, வெட்றா அவளா”, “இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சி போச்சிடா” போன்ற திரைப்படப் பாடல்களில் பெண்கள் தங்கள் காதலை மறுத்துவிட்டோலோ அல்லது கருத்து வேறுபாட்டினால் பிரேக் அப்பை நோக்கி நகர்ந்தாலோ அவர்கள் மீது வன்முறையை செலுத்தலாம் என்பதை ஒரு கலாச்சாரமாகவே முன்வைக்கிறார்கள்.
திரைப்படங்களில் கலாச்சார மாற்றம், பெண்களைப் பற்றிய பார்வையில் மாற்றம் என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஒரு சில நல்ல திரைப்படங்கள் வெளிவந்தாலும், மசாலா என்ற பெயரில் பெண்களை வகைப்படுத்தும் திரைப்படங்கள் சமூகத்தில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வீராங்கனையின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம் பாராட்டப்பட்டாலும், அதே திரைப்படத்தில் இன்னொரு பெண்ணை உருவக் கேலி செய்த விதம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
சமீபத்தில் பாலிவுட்டில் தீபிகா படுகோனே நடித்து வெளியான “சப்பாக்”(Chhapaak) திரைப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. ஆசிட் தாக்குதல்களின் கொடூரமான பின்விளைவுகளை சித்தரிக்கும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. 2005-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் 15 வயது மதிக்கதக்க இளம் பெண் லக்ஷ்மி அகர்வாலின் மேல் நடத்தப்பட்ட ஆசிட் வீச்சு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்தாக்குதலுக்குப் பின்னர் லக்ஷ்மி ஆசிட் விற்பனையை தடை செய்வதற்கான முயற்சியை எடுத்ததோடு, ஆசிட் தாக்குதலில் பாதிக்கபடுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்து வருகிறார்.