காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆப்ரிக்க நாடுகளுக்கு நிகராக குழந்தைகள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் சுவாசத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
குழந்தைகளின் முதல் மாதத்தில் உடல்நலத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்ததில், கர்ப்ப காலத்தின்போது தாய்மார்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் குழந்தைகள் எடை குறைவாக அல்லது விரைவாக முதிர்ச்சி அடைந்து பிறப்பதும், அதன் காரணங்களால் குழந்தைகள் இறப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் முதல்கட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
2019-ம் ஆண்டில் காற்று மாசுபாட்டினால் உலகம் முழுவதும் மொத்தம் 4,76,000 கைக்குழந்தைகள் இறந்துள்ளதாகவும், இதில் 1,16,000 இறப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த அறிக்கை இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் சஹாராவைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக (Hotspots) இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
காற்று மாசுபாட்டின் PM அளவீடு
காற்று மாசுபாட்டின் குறியீட்டு அளவான PM என்ற அளவில் குறிக்கப்படுகிறது. இது PM 2.5 மைக்ரோமீட்டர் மற்றும் PM 10 மைக்ரோமீட்டர் என்ற அளவீடுகளில் அளவிடப்படுகிறது. எளிமையாக புரிந்து கொள்ளவேண்டுமென்றால், மனித தலைமுடியினை உதாரணமாகக் கொள்வோம். மனித தலைமுடியின் விட்டம் 70 மைக்ரோமீட்டர் வரை இருக்கும். தலைமுடியின் விட்டம் என்பது PM 2.5 அளவுள்ள துகள்களை விட 30 மடங்கு பெரியது எனக் கொள்ளலாம்.
PM அளவு 2.5 மைக்ரோமீட்டர் அளவிற்கான துகள்கள் கலந்த காற்றை சுவாசித்தல் காரணமாக உலகம் முழுதும் 2019-ம் ஆண்டில் மட்டும் 4.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்திருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மொத்தமாக 9,80,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா முதல் இடத்திலும் இருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், PM 2.5 மைக்ரோமீட்டர் அளவுள்ள மாசுத் துகள்களை காற்றில் வெளியிடும் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அறிக்கை காட்டுகிறது. நைஜீரியாவும், வங்காளதேசமும் மட்டுமே காற்று மாசுபாடு அதிகரிப்பு விகிதத்தில் இந்தியாவை விட மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த அறிக்கை 2019-ம் ஆண்டு ஏற்பட்ட மாசு குறித்த தரவுகளையே ஆய்வு செய்துள்ளது. எனவே இந்த ஆண்டு(2020) உலகெங்கிலும் போடப்பட்ட லாக் டவுன் நடவடிக்கையினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்தான தகவல்கள் இந்த அறிக்கையில் இல்லை. கொரோனா தொற்று காரணமாக போடபட்ட லாக் டவுன் நடவடிக்கைகள் காற்றின் தரம் மற்றும் காற்று மாசுபாட்டின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் இந்த விளைவுகள் குறித்தான முழுமையான தகவல்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.