தேனியை அடுத்த பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த தரவரிசையில் இந்தியாவில் அவர் 1823-வது இடம் பிடித்துள்ளார். மிகவும் பின்தங்கிய எளிய குடும்பத்திலிருந்து வந்த அவரால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை. அவரது அப்பா ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளராக இருக்கிறார். ஜீவித் குமார் படித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஜீவித் குமாரை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற முயற்சியை எடுத்திருக்கிறார். பின்னர் இந்த முயற்சியில் நீட் தேர்வை எதிர்த்து தன் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா அவர்களும் இணைந்திருக்கிறார்.
ஜீவித் குமாரின் குடும்பத்தினர் கூலி வேலை செய்து சிறுகச் சிறுகச் சேர்த்த 50,000 ரூபாய் பணத்தினை அளித்திருக்கிறார்கள். பின்னர் ஆசிரியர்களிடத்திலும், வெளியே சமூக அக்கறை கொண்டோரிடத்திலும் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இப்படி நிதி திரட்டி அவரை நாமக்கலில் உள்ள தனியார் நீட் கோச்சிங் மையத்தில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்கள். கோச்சிங் சென்டரில் படித்ததன் காரணமாக இந்த முறை அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் அரசுப் பள்ளிகளிலேயே முதலிடமும் பெற்றுள்ளார்.
மருத்துவராவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்த ஜீவித் குமார் கோச்சிங் செண்டரில் சேர்வதற்கு பணமில்லாத ஒரே காரணத்தினால்தான் முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போயிருக்கிறது. இரண்டாவது முறை கோச்சிங் சென்டரில் சேர்ந்தவுடன் தேர்வாகியிருக்கிறார். கோச்சிங் சென்டர்கள்தான் ஒரு மாணவனின் வெற்றியை முடிவு செய்யும் நிலையை உருவாக்கியிருக்கும் நீட் தேர்வு, மாணவர்களின் தகுதியை உறுதிப்படுத்தும் தேர்வாக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது.
ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள சபரிமாலா பாஜகவினரின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜீவித் குமாரை படிக்க வைக்க அவரது பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணம், ஆசிரியர்கள் மற்றும் வெளியிலிருந்து திரட்டிய நிதி என பலவற்றையும் செலவு செய்து கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறோம். இதே போன்று தமிழ்நாட்டின் எல்லா மாணவர்களுக்கும் செலவு செய்து எத்தனை பேரால் படிக்க வைக்க முடியும்? கோச்சிங் சென்டர் செல்லாமல் ஒரு மாணவனால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட முடியுமா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சங்கிகள், நீட் என்பது ஏழைப் பிள்ளைகளுக்கு கிடைத்த வரம் என்று ஜீவித் குமார் சொன்னதைப் போல பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நீட் என்பது மிகப் பெரிய சாபம் என்று தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர் என்பதால் இது அரசின் வெற்றி என்று தமிழக அரசு வேறு கொண்டாடுகிறது. இதைக் கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஜீவித் குமார் படித்த பள்ளியின் ஆசிரியர் அருள்முருகன் முன்னெடுப்பில் நானும், இன்னும் ஏராளமானோரும் சேர்ந்து அவனை மருத்துவராக்க வேண்டும் என்பதற்காக உழைத்து நிதி திரட்டினோம். நாமக்கலில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தோம்.
ஜீவித் குமாரை ஒரு முன்மாதிரியாக, ஒரு ஆண் அனிதாவாகத் தான் மருத்துவம் படிக்க அனுப்புகிறோம். சிலபஸ் கூட கொடுக்காமல் நீங்கள் வைத்திருக்கிற சூழ்ச்சியை, கோச்சிங் சென்டர் போனால் தான் ஒரு மாணவரால் தேர்வாக முடியும் என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். இந்த வெற்றியை உங்களுடையதாகக் கொண்டாடுகிறீர்களே இது அயோக்கியத்தனமாக இல்லையா? நீட் என்பதை ஒரு போதும் நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.