உலகத்தில் எந்தெந்த நாடுகளில் மக்கள் பசியுடன் வாழ்வது குறைவாக இருக்கிறது என கணக்கிடப்படும் உலகளாவிய பசி அட்டவணையில் (Global Hunger Index) இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக இந்த ஆண்டிற்கான ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் 132 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 107 நாடுகளுக்கு மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 107 நாடுகளில் தான் 94-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவில் சிறிய அளவு முன்னேற்றம் இருப்பதாக இந்த அட்டவணை காட்டினாலும், இந்தியாவில் பசியால் வாடக் கூடிய மக்களின் எண்ணிக்கை இன்னும் தீவிர கவலையடிக்கக் கூடிய நிலையில் அதிகமாக இருப்பதாகவே இந்த கணக்கீடு தெரிவிக்கிறது.
உலகளாவிய பசி அட்டவணை வழங்கும் மதிப்பீட்டில் இந்தியா 27.2 மதிப்பெண்களுடன் தீவிர நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுதும் 40 நாடுகள் பசியின் கொடூரத்தில் தீவிர நிலையில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அந்த 40 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
இந்த மதிப்பெண் குறையக் குறைய தீவிர நிலை குறைகிறது என்று அர்த்தம். இந்த மதிப்பெண் 10க்கு கீழே இருந்தால் பசியின் அளவு குறைவு என்றும், 10-20க்குள் இருந்தால் மிதமான அளவு என்றும், 20 – 35 வரையிலான அளவு தீவிர நிலை என்றும், 35-50 எச்சரிக்கை நிலை என்றும், 50க்கு மேல் இருந்தால் அதிதீவிர எச்சரிக்கை நிலை என்றும் குறிக்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 14% சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைவானவர்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடை அளவில் இல்லாமல் குறைந்து காணப்படுவது இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து குறைவின் காரணமாக வயதுக்கு குறைவான எடை கொண்ட குழந்தைகளும் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த விகிதம் தற்போது 37.4% சதவீதமாக இருக்கிறது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் 88வது இடத்திலும், வங்காளதேசம் 75வது இடத்திலும் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச்சத்து குறைவு அதிக அளவில் இல்லாத நாடுகளாக 10க்கும் குறைவான மதிப்பீட்டினைப் பெற்று 17 நாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலாரஸ், போஸ்னியா & ஹெர்சோகோவினா, பிரேசில், சிலி, சைனா, கோஸ்டாரிக்கா, க்ரோட்டியா, கியூபா, எஸ்டோனியா, குவைத், லாத்வியா, லித்துவேனியா, மாண்ட்டிநீக்ரோ, ரோமானியா, துருக்கி, உக்ரைன், உருகுவே உள்ளிட்ட நாடுகள் அந்த 17 நாடுகளில் இருக்கின்றன.