கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய மாநிலங்களின் கோரிக்கையை பல்கலைகழக மானியக் குழு (யுஜிசி – யுனிவர்சிட்டி கிராண்ட் கமிசன்) நிராகரித்திருக்கிறது. யுஜிசி வழிகாட்டுதலையும் மீறி கல்லூரிகளுக்கான தேர்வை மாநிலங்கள் ரத்து செய்தால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கையை எடுக்குமென்றும் அறிவித்திருக்கிறது.
இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யுஜிசி இந்திய பல்கலைகழகங்களை வழி நடத்துகிற அமைப்பாகும். பல்கலைகழகங்கள் இயங்க அனுமதியளிப்பது, அரசின் உயர்கல்விக்கான மானியங்களை பல்கலைக்கழகங்களுக்கு பிரித்துத் தருவது போன்றவை இதனது பணியாகும்.
கல்லூரிகளுக்கான இந்த ஆண்டின் இறுதித் தேர்வு நெருங்கிய சமயத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது. கொரோனா பரவலைத் தடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி யுஜிசி அனைத்து பல்கலைகழகங்களையும் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டிருந்தது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடந்த நிலையில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டன. பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்குவங்காள மாநிலங்கள் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்தன.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஒரு உத்தரவினை வெளியிட்டது, அதில் “எதிர்வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து பல்கலைகழகங்களும் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை நடத்த வேண்டும்” என்று UGC கூறியது. மேலும் ”வழக்கமான தேர்வறை வழிமுறையிலோ அல்லது இணையவழியின் மூலமோ செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளான தேர்வுகளை தவறவிடும் மாணவர்களுக்கு, பின்னொரு தேதியில் சிறப்புத் தேர்வுகளை நடத்த வேண்டும்” என கல்லூரித் தேர்வுகள் தொடர்பான மறுவெளியீடு செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் “கட்டாயம் தேர்வுகளை நடத்த வேண்டுமென்கிற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று யுஜிசிக்கு கடிதம் எழுதியுள்ளன.
தேர்வுகளை ரத்து செய்திருந்த மத்திய பிரதேசமோ, தனது முடிவை மாற்றியமைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த உள்ளது.
யுஜிசியின் ”கட்டாயத் தேர்வு” அறிவிப்புக்கு பிறகு கடந்த சனிக்கிழமையன்று டெல்லியின் யூனியன் பிரதேச அரசு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து யுஜிசி, ”கல்லூரி இறுதியாண்டு தேர்வை மாநிலங்கள் ரத்து செய்வதை அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ”அப்படி ரத்து செய்யும் மாநிலத்தின் மீது தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும்” எனவும் எச்சரித்துள்ளது;
”மாநில அரசுகள் கல்லூரி தேர்வு குறித்து மறுவெளியீடு செய்யப்பட்ட தனது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடு உடையவை” எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை செயலாளர் அமித் கரே,
”பள்ளிக்கல்வி மட்டுமே மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. ஆகையால் பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் யுஜிசி மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்(AICTE) வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.
பொதுப்பட்டியல் என்பது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு என இரண்டு அரசுகளின் அதிகாரங்களுக்கும் உட்பட்ட துறைகளாகும். அவற்றின் மீது முடிவெடுப்பதில் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு சம பொறுப்பு மற்றும் அதிகாரமிருக்கிறது. உயர்கல்வியைப் பொறுத்தவரை யதார்த்தத்தில் மாநில அரசுகளே தமது நிதியிலிருந்து கல்விக் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. கல்லூரிகள் செயல்படும் விதம் குறித்து மட்டுமே ஒன்றிய அரசு பொறுப்பேற்கிறது.
தற்போது நிலவும் கொரோனா பிரச்சினைகளுக்கிடையில் தேர்வுகள் நடத்துவதென்பது கட்டமைப்புகளை நிர்வகிக்கும் மாநில அரசு தொடர்பானது; மேலும் வேறுபட்ட பொருளாதார பின்னணியுடைய மாணவர்களின் தேர்வெழுதும் வருகைக்கான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் சுமையும் மாநில அரசினுடையது. தற்போதைய சூழலில் தேர்வுகளை நடத்துவதென்பது கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களின் தடுப்புப் பணிகளுக்கு சுமையாகவே அமையும்.
அதன் காரணமாகத் தான் தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு உள்ளிட்ட பள்ளிக்கல்வித் தேர்வுகளை ரத்து செய்தது. இதேபோல்தான் கல்லூரித் தேர்வுகளை நேரடியாகக் கையாளும் மாநில அரசுகள் அவற்றை ரத்து செய்கின்றன. உயர்கல்வித் தேர்வுகளின் முடிவுகளில், வழிக்காட்டும் பொறுப்பில் மட்டுமேயுள்ள யுஜிசி, தேர்வுகளை நடத்தும் யதார்த்த சாத்தியப்பாடுகளிலிருந்து தூர விலகி நின்று மாநிலங்களுக்கு உத்தரவிடுகிறது.
இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலை(Emergency) காலத்தில் மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு பறித்துக் கொள்ளப்பட்ட மாநிலங்களின் கல்வி உரிமை, மாநில அரசின் அதிகாரத்திற்குள்ளாகவே நிலவ வேண்டிய யதார்த்த அவசியத்தை கொரோனா பெருந்தொற்று அவசரக் காலம் உணர்த்தியிருக்கிறது.
உயர்கல்வித் துறை மட்டுமின்றி வரிவசூல் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் துறைகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் தொடர்பான முரண்களை கொரோனா பெருந்தொற்று வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு பறிப்பதாகவும் பல மாநிலங்கள் போர்க்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.