வட இந்திய ஊடகங்களைப் போல, தமிழ்நாட்டின் ஊடகங்களையும் தாங்கள் விரும்புகிற விவாதங்களை மட்டுமே நடத்துபவர்களாக பாஜக மாற்ற முயல்வதாகவும், அதற்காக ஊடகங்கள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஆசிரியராக இருந்த மு.குணசேகரன் அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அந்நிர்வாகத்தின் தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்பாளராக இருந்த ஆசிஃப் முகமது பணியிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே பாஜக-வைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு ஊடகங்களின் முக்கிய செய்தியாளர்களை குறிவைத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பரப்புரையினை துவக்கியிருந்தனர். நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரைக் குறிவைத்து இந்த பரப்புரைகள் நடத்தப்பட்டன. பாஜக-வைச் சேர்ந்த மாரிதாஸ் என்ற நபர் யூடியூப்-ல் இந்த ஊடகவியலாளர்களை திமுக-விற்கு ஆதரவாக செயல்படுவர்கள் என சித்தரித்து காணொளிகளை வெளியிட்டு வந்தார்.
மாரிதாஸ் ஊடகவியலாளர்கள் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்களின் குடும்பத்தினர் பெரியாரிய இயக்கங்களில் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதுதான். ஊடகவியலாளர்களின் செயல்பாடுகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனாலும் இதைத் தொடர்ந்து பாஜக-வினர் சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடர் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் டெல்லி மேலிடங்களிலிருந்து இந்த ஊடகங்களுக்கு கடுமையான அழுத்தம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக #SaveJournalism, #StandWithNews18TN என்ற ஹேஷ்டேக்-கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. மீண்டும் மாரிதாஸ் என்பவர் நியூஸ் 18 நிர்வாகத்தின் வினய் சரவாகி என்பவரிடமிருந்து குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தனக்கு மின்னஞ்சல் வந்திருப்பதாக காணொளி ஒன்றினை வெளியிட்டார்.
YouTurn எனும் உண்மை அறியும் இணையதளத்தின் ஆசிரியர் இது குறித்து தான் நியூஸ் 18 நிர்வாகத்திடம் பேசியபோது அவர்கள் இந்த செய்தியை மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். பின்னர் வினய் சரவாகி வெளியிட்ட செய்தியில் மாரிதாஸ் காண்பித்த மின்னஞ்சல் போலியானது என்றும், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் நடந்த பிரச்சாரங்கள் ஒரு ஓய்வு நிலைக்கு வந்தன.
ஆனால் நேற்று முன்தினம் வெளியான தகவலின்படி நியூஸ் 18 ஆசிரியர் குண்சேகரனின் அதிகாரம் பறிக்கப்பட்டதாகவும், ஆசிஃப் வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாகவும், இளைய பாரதி எனும் துணை ஆசிரியர் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இளைய பாரதி என்பவர் ஒரு பெரியாரியவாதியாக தன்னை சமூக வலைதளங்களில் அடையாளம் காட்டிக் கொண்டதற்காக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஆசிஃப் முகமது, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் என்ற பெயரில் பல்வேறு ஊடகங்களில் ஊடகவியலாளர்களின் பணி நீக்கத்திற்கு எதிராக போராடியதற்காக வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இது அனைத்து தரப்பு ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ் 18 நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து #ShameOnYouNews18 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், சுயாதீன ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும்கூட இந்த பரப்புரைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், “சனாதன உதிரிகளின் சவடால்களுக்கு அஞ்சுவதா? நிறுவனத்தின் வெற்றிக்கு நேர்மையாய் உழைத்தவர்களை நன்றிக்கேடாய் நலம்கெட புழுதியில் வீசுவதா? #ShameOnYouNews18 #SaveMediaFromSanatanTerror” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி இனி நியூஸ்18 விவாதங்களில் பங்கு கொள்ளாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் “சங்கிகளிடம் சரணடைந்த நியூஸ்18 தமிழை புறக்கணிப்போம். வடம் வழியாகவும், டிஷ் வழியாகவும் எம் மக்கள் நியூஸ் 18 தமிழைக் காண சந்தா செலுத்த மாட்டார்கள்” என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தினை Unsubscribe செய்ய வேண்டும் என்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நியூஸ்18 தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தினை Unfollow செய்துள்ளனர்.
குணசேகரன் மற்றும் ஆசிஃப்-க்கு ஆதரவாக இணையதள கையெழுத்து படிவமும் ஏராளமானோரால் கையொப்பமிடப்பட்டு வருகிறது. இதுவரை 9,000-க்கும் அதிகமானோர் அந்த படிவத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து தரப்பு கருத்துக்களையும் தாங்கள் உள்வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாகவும், தவறுகளை திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம் என்றும், இடது, வலது, மய்யம் என அனைத்து தரப்பினரது பார்வையையும் பாகுபாடின்றி வெளியிட்டு செய்தியாக்கம் செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அறிவித்தது.
ஆனால் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளில் குணசேகரன், செந்தில் இருவரும் பங்கேற்காததை மையப்படுத்தி மீண்டும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் ஊடகங்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு என்ன தேவையோ அவற்றை விவாதித்து வருவதாகவும், மேலும் பக்க சார்பின்றி அரசியல் கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், நிபுணர்கள் என அனைவருக்கும் விவாதங்களில் இடமளித்து முக்கியப் பங்காற்றி வருவதாகவும், இதனை தவிர்ப்பதற்காகத்தான் பாஜக-வானது ஊடகவியலாளர்களை வெளியேற்ற முயன்று வருவதாக சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டின் எந்த பிரதிநிதித்துவமும் பெற்றிருக்காத பாஜக-வின் பொறுப்பாளர்களும், ஆதரவாளர்களும் தினந்தோறும் விவாத நிகழ்ச்சிகளில் அமர்த்தப்பட்ட போதும், ஊடகவியலாளர்கள் திமுக என்ற கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும், அடிப்படையில் மக்கள் நலனுக்காக அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் ஊடகவியலாளர்களை நீக்குவதே பாஜக-வின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் விகடன் இணையதளத்தில் “பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்? பத்திரிக்கையாளர்கள் பட்டியல் தயார்” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த செய்தியில், ”பி.ஜே.பிக்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்த ஊடகங்கள் இதில் முன்னணியில் உள்ளன என்று பட்டியலை தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை தமிழகத்தில் உள்ள ஒரு பத்திரிக்கையாளரிடம் பொறுப்பை ஒப்ப்டைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்த பத்திரிக்கையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்து விட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது” என்று வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியின்படி பாஜக டெல்லி தலைமைகள் ஊடகங்களை மிரட்டுவதைத் துவங்கி விட்டதாகவும், இனி மக்கள் நலனுக்காக பேசக்கூடிய, எழுதக் கூடிய ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். இதனையொட்டி பாஜக-வின் சமூக வலைதள குழுவினர் அடுத்தடுத்த ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர்.
ஊடகங்களிலிருந்து மக்களுக்காக பேசுபவர்களை வெளியேற்றும் பாஜக-வின் இந்த நடவடிக்கை தமிழ் ஊடகங்களில் இனி நடுநிலை இருக்குமா என்ற கேள்வியினை எழுப்பியிருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-விற்கு எதிரான செய்திகள் எதுவும் விவாதமாகக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வேலை மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.