Siddha Corona

அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை

”சின்னபசங்க பயப்பட தேவையில்லை, எல்லோரும் கொரோனாவால இறந்துருவோமோன்னு பயப்படுவாங்க. ஆனால் பயப்பட தேவையில்லை. கசாயம் குடிச்சா சரியாகிடும். இந்த hospital நல்லா இருக்கு. என்னை பொருத்தவரைக்கும் சித்த மருந்து நல்லது. சின்ன பசங்க எல்லாம் சாப்பிடலாம் பயமே இல்லை”  என்று கொரோனாவிற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்தமருத்துவ மையத்தில் சிகிச்சை எடுத்துவரும் ஒரு சிறுமி ஒரு தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி பேசும்போது நான் நீட் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் எனக்கு சித்த மருத்தும் பிடித்துவிட்டது சித்த மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கூறினார்.

இப்படி நோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தை, மாணவி முதல் முதியவர்கள் வரை  எந்த பயமும் பதற்றமும் இன்றி நம்பிக்கையுடன் பேச முடிகிறது எனில் அந்த மருத்துவம் கொண்டாடப்படவேண்டும், அரசால் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

வழிகாட்டும் கியூபா

இன்று கொரோனா நோய் தாக்கத்தால் தடுமாறும் பல நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டும் கியூபா, பொருளியல் தடை மிகுந்த காலத்திலும் வரலாற்றில் சந்திந்த பல நோய் தொற்று பேரிடர் காலங்களை தங்களது மரபுவழி மூலிகை மருத்துவங்கள் மூலமாகவும் காத்துக்கொண்டு வந்துள்ளது. கியூபாவின் மருத்துவத் துறையில் அவர்களின் பாரம்பரிய மருத்துவமும் ஒரு பாடத்திட்டமாக வைக்கப்பட்டிருக்கிறது.

கியூபாவின் அல்லோபதி மருத்துவர்கள், அவர்களின் பாரம்பரிய மருத்துவத்தையும் இணைத்து படித்து விட்டுதான் வெளியே வருகிறார்கள். மருத்துவ மாணவர்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தை வெறும் பாடமாக மட்டும் சொல்லித் தருவதோடு நிறுத்தாமல், அதன் அடிப்படை மருத்துவ செயல்முறைகளும் அவர்களின் இறுதி ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் கற்றுத் தரப்படுகின்றன.

”பச்சிலை மருத்துவம் என்பது ஏழ்மையோடு செய்து கொண்ட சமரசம் அன்று;அது வளமைக்கான வாய்ப்பாகும்” என்று முழங்கியது கியூபா. நவீன உயிரி தொழில்நுட்பவியலில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் கியூபா பாரம்பரிய மருத்துவத்தினை அறிவியலுக்கு எதிரானது என்று ஒதுக்கவில்லை. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

உயர்நீதிமன்றத்தின் கேள்விகள்

கடந்த 09 ஜூலை 2020 அன்று உயர்நீதிமன்றம் சித்த மருத்துவத்தின் மீதான இந்திய தமிழ்நாடு அரசுகளின் பாகுபாடு குறித்து கருத்து தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசை நோக்கி கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

  • சித்த மருத்துவர்கள் கொரோனா  தொற்றுக்கு மருந்து இருப்பதாகக் கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது ஏன்?
  • 60 ஆண்டுகளாக சித்தமருத்துவராக இருக்கும் ஒருவர் கொரோணா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக நோய் தொற்று பரவ தொடங்கிய நிலையிலேயே தமிழக அரசிடம் தெரிவித்து அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியபின் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது அந்த மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்திலேயே அரசு பரிசீலனை செய்திருக்குமானால் அந்தே மருந்தே கூட பயன்பட்டிருக்கலாம்.
  • சித்த மருத்துவம் குறித்து அரசிடம் இதுபோன்ற மனப்போக்கு இருந்தால், இந்த மருத்துவம் யாருக்கும் பயனின்றி போய் விடும். யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறினால், அதை அரசு கவனத்துடன் எடுத்து பரிசீலிக்க வேண்டும்.
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து இருப்பதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?. அவர்களது மருந்து பரிசோதனை செய்யப்பட்டதா? அதில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?
  • தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?
  •  மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது?                

இந்த கேள்விகளுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாரம்பரிய மருத்துவத்தின் மீதான பாராமுகம்

நீதிமன்றத்தின் இந்த கருத்தும் உத்தரவும் வரவேற்கக்கூடியது என்றாலும், இது சித்தமருத்துவத்தின் மீதான அரசின் அலட்சியப்போக்கையும், மக்கள் நலன் மீதான அக்கறை குறைவினையும் வெளிப்படுத்துகிறது. நோய் நெருக்கடி காலத்தில் ஒரு மருத்துவ முறையில் குணமாகும் சூழல் ஏற்படும்போது அரசே முன்வந்து அந்த மருத்துவத்தை ஊக்கப்படுத்தி அந்த மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் பாரம்பரிய மருத்துவ விவகாரத்தில் அரசு செயல்படுவதற்கும் நீதிமன்ற உத்தரவுகள் தேவையாக இருப்பதுதான் வேதனை.

இனிமேலாவது அரசு விரைந்து செயல்பட்டு சித்த மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும். சித்த மருத்துவ மையங்களை அதிகப்படுத்த வேண்டும். இதில் பாரம்பரியமாக சித்தமருத்துவம் செய்து வரும் சித்த மருத்துவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது  போன்ற நோய் தொற்று காலங்களில் மட்டுமல்லாமல் நிரந்தரமாக சித்த மருத்துவ மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

முக்கியமானதாக சித்த மருத்துவத்தின் தனித்தன்மையை சிதைக்காத வகையில் அரசு செயல்பாடு அமைய வேண்டும். வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தும் அளவிற்கு சித்த மருத்துவத்தில் நோயாளிகளின் உடல்நிலை செல்லவில்லை என்றாலும் சித்த மருத்துவர்களின் தேவைக்கேற்ப போதுமான எண்ணிக்கையில் தயார் நிலையில் சித்த மருத்துவ மையங்களில் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

அறிவுக்கு எதிரானதா சித்த மருத்துவம்?

சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது. அல்லோபதி மருத்துவ முறையின் ஆய்வக சோதனை என்ற வரைமுறையின்படி சித்த மருத்துவத்தை ஆய்வுக்குள்ளாக்க முடியாது. சித்த மருத்துவ மருந்துகளை சோதிப்பதற்கு தனியாக சமூக ஆய்வு முறைகள் உண்டு. 

ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் நோயறிதல் முறை என்பது வெவ்வேறானது. அல்லோபதி, சித்தா, ஹோமியோபதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. இதில் எது சரி, எது தவறு என்றோ, எது தேவை, எது தேவையில்லை என்றோ ஒற்றைத் தன்மையுடைய விவாதங்கள் இதில் மேற்கொள்ள முடியாது. மருத்துவ முறைகள் குறித்த புரிதல்களுடன் கூடிய ஒரு கூட்டு மருத்துவ செயல்முறை (Integrated Medicinal approach) தேவைப்படுகிறது.

குறிப்பாக பல நூறு ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு வழி மருத்துவங்களின் நோயறிதல் முறையானது தனித்துவமானது. பெரும்பாலும் ஐம்பூத கோட்பாட்டின் அடிப்படையில் நோயறிதலும் சிகிச்சையும் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு அலோபதி மருத்துவ முறையில் பார்க்கப்படும் நாடி பரிசோதனையும் சித்த மருத்துவத்தில் பார்க்கப்படும் நாடி பரிசோதனையும் முற்றிலும் வெவ்வேறானது. 

நாடி பார்க்கும் சித்த மருத்துவர் வாதம்,பித்தம்,கபம் குறைந்துள்ளதா கூடியுள்ளதா என்ற அடிப்படையில் நோயறிந்து அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார். ஆனால் ஒரு அலோபதி மருத்துவர் இந்த மூன்றின் அடிப்படையில் நாடி பார்க்கமாட்டார். அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் முடியாது. எப்படி வாதம் பித்தம் கபம் அடிப்படையில் அலோபதி மருத்துவத்தால் சிகிச்சை அளிக்க முடியாதோ, அதே போல அலோபதி மருத்துவம் வரையறுத்துள்ள அளவீடுகளின்படி சித்த மருத்துமும் சிகிச்சை அளிக்க முடியாது. இரண்டின் நோயறிதல் முறையும் சிகிச்சை முறையும் வேறு. 

சித்த மருந்துகளின் சோதனை முறைகள்

அலோபதி மருத்துவ முறையின் ஆய்வக சோதனை முறையைப் போல அல்லாமல், சித்த மருந்தின் நிரூபணம் என்பது முதலாவதாக நோயிலிருந்து மக்கள் நலமடைவது தான். அந்த மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், குணமாக எடுத்துக் கொள்ளும் கால அளவு, அவற்றில் ஏதேனும் நச்சுத் தன்மை இருக்கிறதா என்பவை தான் முதன்மையாக சித்த மருத்துவ மருந்துகளுக்கான சோதனை முறைகளாக இருக்க முடியும்.

என்னென்ன அறிகுறிகளுடன் சென்றவர்கள், அந்த மருந்துகளை உட்கொண்ட பின் அவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் குறைந்தன? சிகிச்சைக்குப் பின் அவற்றிலிருந்து மீண்டார்களா? எத்தனை பேர் முழுமையாக மீண்டார்கள்? அதற்கு எத்தனை நாட்கள் தேவைப்பட்டன? இப்படிப்பட்ட ஆய்வுகளை சித்த மருத்துவத் துறையில் அரசு மேற்கொள்ள வேண்டும். 

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் நடத்தி வரும் ஆய்வு

சித்த மருந்துகளின் ஆராய்ச்சியில் Reverse Pharmacological Approach முறையினை பின்பற்றலாம் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். அதாவது, ஒரு மருந்தின் நச்சுத் தன்மை மற்றும் பாதுகாப்பு இவற்றை ஆய்ந்துவிட்டு பின்னர் நோயாளிகளுக்கு வழங்குவது. இந்திய ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் நச்சுத் தன்மை உள்ள மூலிகைகளை தனியாகவே பட்டியலிட்டுள்ளது. அதில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு போன்ற எதுவும் இல்லை. எனவே அப்பட்டியலில் உள்ளவற்றை தவிர்த்துவிட்டு, சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மக்களுக்கு அளித்து அதன் செயல்திறன், குணமாகும் மக்களின் எண்ணிக்கை மற்றும் மேற்சொன்ன விடயங்கள் குறித்து ஆராயலாம்.

இதற்காக திருப்பத்தூரில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் முதல்கட்டமாக ஆய்வைத் தொடங்கியது. 112 பேரை தேர்ந்தெடுத்து அவர்களில் 42 பேருக்கு கபசுரக் குடிநீர் அளித்தும், 70 பேருக்கு கபசுரக் குடிநீர் அளிக்காமலும் கண்காணிக்கப்பட்டனர். அதில் கபசுரக் குடிநீர் குடித்தவர்களில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டது. கபசுரக் குடிநீர் குடிக்காதவர்களில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதான் முதல்கட்டமாக சித்த மருத்துவர்களுக்கு ஊக்கம் கொடுத்த ஆய்வாகும்.

இரண்டாம் கட்ட ஆய்வுகளும் நடந்து முடிந்திருக்கின்றன. 15,000 பேருக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டதில் எத்தனை பேருக்கு தொற்று வந்தது என பார்க்கையில் வெறும் 0.1 சதவீதம் பேருக்குதான் தொற்று கண்டறியப்பட்டது. 

உலகம் முழுவதும் எந்த மருத்துவ முறையிலும் மருந்தில்லை எனும்போது கொரோனா நோய் தொற்றிற்கு உள்ளான. வெறும் நான்கைந்து சித்த மருத்துவ மையங்கள் இருக்கும் நிலையில், ஆயிரத்திற்கும் மேலானோர் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்துள்ளனர். இதுவே சித்த மருத்திற்கான நிரூபணம். 

கொரோனா சிகிச்சை குறித்து சித்த மருத்துவத்தின் மீதான எள்ளல்களும், சித்த மருத்துவர்களின் பதிலும்

மிதமான பாதிப்பு உடையோர் மற்றும் இதர நோய்கள்(Comorbid) இல்லாதவர்களே சித்த மருத்துவம் எடுக்கின்றனரா? 

இல்லை. ஜவஹர் கல்லூரி வளாக சித்த மருத்துவ மையத்தில் 1300 பேர் சிகிச்சை எடுக்கின்றனர். இதில் 1250 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானவுடன் தானாக முன்வந்து சிகிச்சையில் சேர்ந்துகொண்டவர்கள். இந்த 1250 பேரும் மிதமான நோய் தொற்று உடையவர்கள் என்றோ, இதர நோய்கள் அற்றவர்கள் என்றோ பிரித்து அனுப்பப்பட்டவர்கள் அல்லர். இதில் சர்க்கரை நோயுள்ளவர்கள், ரத்த அழுத்தம் உடையோர் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் 60 வயதினருக்கு மேலானோர் இருந்தும் உயிரிழப்புகள் ஏதுமின்றி குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

வெண்டிலேட்டர் மூலம் மூச்சு காற்று செலுத்தும் அளவிற்கு உடல் நிலை நலிவடையும்போது சித்த மருத்துவர்கள் என்ன செய்ய இயலும்?

வெண்டிலேட்டர் தொடர்பான இதே போன்று தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜவஹர் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் 1300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சித்த மருத்துவர் வீரபாபு பதிலளிக்கையில் ”எப்போது சித்த மருத்துவம் தொடங்கபட்டுவிட்டதோ, அதன் பிறகு வெண்டிலேட்டர் பயன்படுத்தும் அளவிற்கு உடல்நிலை செல்லாது. மேலும் மூச்சு திணறலோடு வந்தவர்களுக்கும் கூட சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கிய பிறகு மூச்சு திணறல் குணமாகியுள்ளது.” என்கிறார்.

இருந்தாலும் கூட அவசர நிலை கருதி முன்னேற்பாடாக வெண்டிலேட்டர்கள் வசதி அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆனால் அதை சிகிசையின் போது எந்த நிலையில் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவர்கள் முடிவெடுவப்பதே சரியானதாக இருக்கும்.

கொரோனா கிருமி பற்றி ஆய்வு முடிகளே இல்லாமல் எப்படி சித்த மருத்துவத்தில் மருந்து கொடுக்க முடியும்?

பொதுவாகவே சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு வழி மருத்துவ முறைகளில் உடலுக்கு வெளியிலான புறச்சூழலில் உள்ள கிருமிகள் பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக எந்த நோய்க் கிருமியாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஆற்றலை உடலுக்கு கொடுப்பதே மருந்தாக உள்ளது. சித்த மருந்து கொரோனா கிருமியை அழிக்கலாம் அல்லது அழிக்காமலும் போகலாம். ஆனால் அதனால் உடலுக்கு தீங்கு ஏற்படாதவாறு எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. நோய் எதிர்ப்பாற்றல் வலுவாக இருக்கும் மனிதர்கள் நோய்க்கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறார்கள். இந்த சூழலை ஏற்படுத்துவதே சித்தமருத்துவம். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புது புது கிருமிகள் தோன்றலாம். அது பரிணாமம் அடைந்து இன்னும் பிற நோய்க் கிருமிகளாக உருவெடுக்கலாம். அந்த ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனி மருந்து கண்டுபிடிப்பதென்பது சித்த மருத்துவத்தின் முறையல்ல. எத்தனை புதிய நோய்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை கொடுக்கக்கூடிய மருந்து, உணவு முறை, வாழ்வியல் முறைகளைத்தான் சித்த மருத்துவம் கொடுத்திருக்கிறது. அதை மக்கள் வாழ்வியலாக ஏற்று கடைபிடிக்கும்போது நோய்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. 

“நிலம், தீ, நீர்,வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” 

என்று 2700 ஆண்டுகளுக்கு முன்னர்  உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார் தொல்காப்பியர். திருவள்ளுவரும் மருந்து என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார்

அது தமிழர்களின் பகுத்தறிவு. இலக்கு மனித உயிர்களை காப்பதாகவே இருக்க வேண்டும். எந்த மருத்துவ முறையில் மக்கள் குணமடைந்தாலும் அதன் முக்கியத்துவத்தினை ஏற்க வேண்டும். இன்றுவரை சித்த மருத்துவ சிகிச்சையில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும்கூட, வரும் நாட்களில் ஏற்படலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு சித்த மருத்துவம் தோல்வி என்று பரப்ப காத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.

எந்த மருத்துவத்திலும் மரணமே நிகழாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. சிகிச்சையின் போது உடலை பாழ்படுத்தாமல்,பயத்தை விதைக்காமல்,மரண பயத்தை நீக்கி, நம்பிக்கையும் ஆறுதலும் அளிப்பதே சிறந்த மருத்துவம். அதனை பண்ணெடுங்காலமாக தமிழர்களில் வாழ்வோடு கலந்து வந்த சித்த மருத்துவம் செய்கிறது.

ஒரு மருத்துவரின் முக்கியக் கடமை என்பது சில நேரங்களில் குணமாக்குதல் – அவ்வப்போது சிகிச்சை அளித்தல் – எப்போதும் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தல் (Cure sometimes,Treat Often, Comfort always) என்கிறார் நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டஸ்.

தமிழ்நாடு அரசு தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து வந்துள்ள சித்த மருத்துவத்தை ஊக்குவித்து எளிதில் மக்கள் பயன்பெறும்படி செய்ய வேண்டும்.உலகிற்கு தமிழர்களின் சித்த மருத்துவ முறை வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *