இந்திய சமூகத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பது பல தலைமுறைகளின் கனவு. ஏழைக் குழந்தைகளை எப்படியாவது பள்ளிக்கு அழைத்துவர வேண்டும் என்பதற்காகவே மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய வரலாறு இங்கே இருக்கிறது.
இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகங்கள், இலவச செருப்பு என அனைத்தும் கொடுத்துதான் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை தேர்வுகளில் தேர்ச்சி இழக்கச் செய்வதன் மூலம் பள்ளிகளிலிருந்து வெளியேற அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி என்பது கொண்டுவரப்பட்டது. பேருந்து கட்டணம் கொடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வர முடியாது என்பதால் இலவச பஸ் பாஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று நாம் பார்க்கும் கல்வி கற்றோரின் சதவீத உயர்வின் பின்னணியில் இத்தனை பெரிய வரலாறும் உழைப்பும் இருக்கிறது. இன்று புதிய கல்விக் கொள்கையின் மூலம் 3-ம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு, 6-ம் வகுப்பிலேயே தொழிற்கல்வி என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச தரத்திற்கு கல்வியை உயர்த்தப் போவதாகவும், அதற்காக மாணவர்களை மதிப்பிடப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்திய சமூகத்தின் உண்மை நிலை என்னவாக இருக்கிறது என்பதனை நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. பெரு நகரங்களின் மையங்களில் இருந்து கொண்டு பறக்கும் சொகுசான பள்ளிப் பேருந்துகளில் டை மற்றும் ஷூ போட்டுக் கொண்டு பள்ளிக்கு அனுப்பப் படும் குழந்தைகள் மட்டுமே இந்தியாவின் பெரும்பான்மை அல்ல.
தேசிய புள்ளியியல் நிறுவனம் (NSO) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று இன்னும் எத்தனை சதவீத மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதிகளோ, மிதிவண்டி வசதியோ இன்றி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தினை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் தான் நடந்து செல்லும் நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது தெரியவந்துள்ளது. வடமாநிலங்களில் இன்னும் குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 72.6 சதவீத மாணவர்கள் இன்னும் பள்ளிகளுக்கு நடந்துதான் செல்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கும் அதிகமான மாணவர்களின் நிலை இது.
பீகார் மாநிலத்தில் 72.4 சதவீத மாணவர்களும், உத்தரகாண்டில் 67.9 சதவீத மாணவர்களும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 66.2 சதவீத மாணவர்களும் நடந்து செல்கின்றனர்.
மோடியின் குஜராத் மாநிலத்தில் 57.8 % மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் 67.2 சதவீத மாணவர்களின் நிலை இது.
மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்ல வாகனங்கள் கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலையில்தான் நமது அரசுகள் டிஜிட்டல்மயமாதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்த விடயத்தில் மாணவர்களின் நண்பனாக, பெரும்பான்மை மாணவர்களை கால்கடுக்க நடக்கவிடாத மாநிலங்களாக கேரளாவும், தமிழ்நாடும் இருக்கின்றன. கேரளாவில் இது 24 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 37.9 சதவீதமாகவும் இருக்கிறது.
மற்ற அனைத்து மாநிலங்களின் நிலையும் 50 சதவீதத்திற்கும் அதிகம்தான்.
அதேபோன்று மாணவர்களுக்கு பொதுப் போக்குவரத்தின் மூலம், அரசுப் பேருந்துகளை ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிற மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
எப்படி கல்லூரிகளுக்கு அதிகமாக மாணவர்களை அனுப்பும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதோ, அதேபோல் மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வது முக்கியமானது. எனவே கல்வியில் கொண்டுவரப்படும் எந்த மாற்றங்களிலும் தமிழ்நாடு ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.