நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்

மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து பதிவிட்ட இரண்டு ட்வீட்களுக்கு, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு என்ன தண்டனை என்பது இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷனுக்கு வாய்ப்பளிக்கப்படும்போது, தான் செய்தது தவறல்ல என்றும், அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்லி தன்னுடைய வாதத்தினை வாசித்தார்.

நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் வாசித்தது

”நான் மாண்புமிகு நீதிமன்றத்தின் தீர்ப்பினை வாசித்தேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் எந்த நீதிமன்றத்தின் மேன்மையைக் காப்பதற்காக ஒரு பாதுகாவலனாக செயல்பட்டேனோ, அந்த நீதிமன்றத்தினை அவமதிப்பு செய்ததாக நிறுத்தப்பட்டிருப்பதை எண்ணி வேதனையடைந்தேன். நான் தண்டிக்கப்படுவேன் என்பதற்காக நான் கவலைப்படவில்லை. ஆனால் நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக கவலைப்படுகிறேன்.

நீதித்துறை நிர்வாகத்தின் மீது நான் ”தீய நோக்கத்துடனும், கேலிசெய்து அவமதிக்கும் நோக்கத்துடனும், திட்டமிட்ட தாக்குதலை” நடத்தியதாக என் மீது தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நான் இத்தகைய தாக்குதல்களை நடத்தும் நோக்கம் கொண்டிருந்தேன் என்பதற்கு எந்த ஆதாரமும் அளிக்காமல் இப்படிப்பட்ட முடிவிற்கு நீதிமன்றம் வந்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

எந்த அடிப்படையில் என் மீது தானாக முன்வந்து வழக்கு பதியப்பட்டது எனும் புகாரின் நகலை எனக்கு அளிப்பது அவசியமான ஒன்று என்பதை நீதிமன்றம் அறியாமல் போனது எனக்கு ஏமாற்றமளிக்கிறது என்பதை முன்வைக்க விரும்புகிறேன். நான் பதில் அளித்த பிரமாணப் பத்திரத்திலும், எனது வழக்கறிஞர்கள் சமர்பித்த அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு மீண்டும் பதிலளிக்க வேண்டும் என்பதைக் கூட அவசியமானதாக நீதிமன்றம் உணரவில்லை.

என்னுடைய ட்வீட் ”இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக இருக்கும் நீதிமன்றத்தின் அடித்தளத்தினை சீர்குலைக்கும் விளைவைக் கொண்டிருப்பதாக” நீதிமன்றம் கண்டுபிடித்திருப்பதை நம்புவதற்கு கடினமானதாக இருக்கிறது. எனது இரண்டு ட்வீட்களும் நான் நியாயம் என்று நம்பியவற்றை பிரதிபலிக்கின்றன. அதனை வெளிப்படுத்தும் உரிமை அனைத்து ஜனநாயகத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நீதித்துறையினை பொதுமக்கள் ஆய்வு செய்வது என்பது நீதித்துறை ஆரோக்கியமாக இயங்குவதற்கும் தேவையானதே.

அரசியமைப்பின் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென்றால், எந்த ஒரு நிறுவனத்தையும் வெளிப்படையாக விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தில் முக்கியமானது என்றே நான் நம்புகிறேன். நமது வழக்கமான கடமைகளை விட உயர்வான கொள்கைகளே முக்கியமானது. அரசியலமைப்பின் ஒழுங்கினைப் பாதுகாப்பது என்பதே நமது சொந்த அல்லது தொழில்முறை வாழ்வினைக் காட்டிலும் முதன்மையானதாக இருக்க வேண்டும். நிகழ்காலத்தினை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை நோக்கிய நமது பொறுப்பிணர்வினை தட்டிக் கழிக்க முடியாது எனும் வரலாற்றுத் தருணத்தில் நாம் வாழ்கிறோம்.

குறிப்பாக என்னைப் போன்ற நீதிமன்ற அதிகாரிகள் பேசுவதற்கு தவறுவது என்பது கடமையில் இருந்து விலகுவதற்கு சமம். நமது குடியரசின் இந்த தருணத்தில் எனது உயர்ந்த கடமையாக நான் கருதியதை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சியாகவே எனது ட்வீட்கள் அமைந்தன. அந்த ட்வீட்களை நான் சுய மனநிலை இல்லாமல் பதிவிடவில்லை. எனது நியாயமான நம்பிக்கைகளாக இன்னும் தொடரும் அந்த ட்வீட்களுக்கு நான் மன்னிப்பு கேட்பது நேர்மையற்றதாகவும், எனக்கு அவமதிப்பிற்குரியதாகவுமே இருக்கும். 

எனவே இந்நிலையில், தேசத் தந்தையான மகாத்மா காந்தி தன் மீதான விசாரணையின் போது குறிப்பிட்டதைத் தான் நான் இங்கு தாழ்மையுடன் குறிப்பிட விரும்புகிறேன். நான் மன்னிப்பு கேட்கவில்லை, என் மீது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் நான் முறையிடவில்லை. இந்த நீதீமன்றம் என் மீதான குற்றமாக முடிவு செய்ததற்கு சட்டப்படி எந்த தண்டனை வழங்குகிறதோ, அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள நான் தயாராக வந்திருக்கிறேன்.”

எனக்கு நேரம் கொடுத்தால் நீதிமன்ற நேரமே வீணடிக்கப்படும்

நீதிபதிகள் குறிப்பிடும்போது, பிரசாந்த் பூஷன் தனது தவறுக்கு மன்னிப்பு கோரினால் தண்டனையைக் குறைப்பது பற்றி யோசிக்கலாம் என்று தெரிவித்தனர். நீதிபதி கவாய் பிரசாந்த் பூஷனைப் பார்த்து, ”உங்களுடைய வாதத்தினை மறுபரிசீலனை செய்துகொள்ள கொள்கிறீர்களா?” என்று கேட்டார். 

நான் எனது அறிக்கையை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. அதனால் அதற்கு நேரம் கொடுப்பது பயனற்றது என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். 

மீண்டும் நீதிபதி அருண் மிஷ்ரா நீங்கள் 2-3 நாட்கள் யோசித்து விட்டு மீண்டும் வரலாம் என்று தெரிவித்தார். 

அதற்கு பிரசாந்த் பூஷன், நீங்கள் எனக்கு நேரம் கொடுக்க விரும்பினால் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது எந்த பயனையும் தரும் என நான் கருதவில்லை. மேலும் அது நீதிமன்றத்தையும் நேரத்தையும் வீணடிக்கும். நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான சாத்தியமில்லை என்று தெரிவித்தார். 

அதற்கு நீதிபதி நாங்கள் 2-3 நாட்கள் நேரம் தருகிறோம். நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் இப்போது தீர்ப்பை அளிக்கக் கூடாது என்று முடித்தனர். 

பிரசாந்த் பூஷன் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பினை விமர்சித்து, பூஷனுக்கு ஆதரவாக ஏராளமான ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *